முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.030.திருப்புறம்பயம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.030.திருப்புறம்பயம்
2.030.திருப்புறம்பயம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர்.
தேவியார் - கரும்பன்னசொல்லம்மை.
1786 | மறம்பய
மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை நிறம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை திறம்பய னுறும்பொரு டெரிந்துணரு நால்வர்க் கறம்பய னுரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய். |
2.030. 1 |
புறம்பயம் அமர்ந்தவனே! வீரமும் பயமும் கொண்டு தன்னோடு போர்மலைந்த அசுரர்களின் முப்புரங்களின் வலிமையை அறுத்தாய். உனது தன்மை பசுமை நிறமும் செம்மையும் கலந்தது. ஆகமங்களின் பயனாகச் சொல்லத்தக்க பொருளைத் தெரிந்துணர விரும்பிய முனிவர் நால்வர்க்கு அறமாகிய பயனை உணர்த்தியருளினாய்.
1787 | விரித்தனை
திருச்சடை யரித்தொழுகு வெள்ளம் தரித்தனை யதன்றியு மிகப்பெரிய காலன் எருத்திற வுதைத்தனை யிலங்கிழையொர் பாகம் பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய். |
2.030. 2 |
புறம்பயத்தில் எழுந்தருளியவனே! சடையை விரித்து பெருகி வந்த கங்கை வெள்ளத்தைத் தாங்கினாய்; அஃதன்றியும் மிகப்பெரிய காலனின் பிடரி வருந்துமாறு உதைத்தாய். விளங்கும் அணிகலன் பூண்ட உமையம்மையை மேனியின் ஒரு பாகமாகப் பொருத்தி யுள்ளாய்.
1788 | விரிந்தனை
குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும் பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம் புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய். |
2.030. 3 |
புறம்பயம் அமர்ந்த பெருமானே! எல்லாமாக விரிந்து நின்றாய்; நுண்ணியனாகக் குவிந்துள்ளாய்; ஊழிக் காலத்தில் விழுங்கிய உயிர்களை வினைப்போகத்திற்காக மீண்டும் உடலோடு உலவவிட்டாய்; உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்துத் திரிந்தாய். குருந்தொசித்த திருமால் மோகினியாக வர அவரோடு கூடிப் பிரிந்தும் புணர்ந்தும் விளையாடினாய்; பிணம்புகும் சுடுகாட்டை விரும்பிமகிழ்ந்தாய்.
1789 | வளங்கெழு
கடும்புன லொடுஞ்சடை யொடுங்கத் துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு புளங்கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய். |
2.030. 4 |
புறம்பயம் அமர்ந்த பெருமானே! வளமை பொருந்தியதாய்க் கடுமையாகப் பெருகி வந்த கங்கையொடு கூடிய சடையசைய விளங்கும் இளம்பிறையை கலங்கத்தாங்கி மனம் நெகிழ்ந்து வணங்கும் அடியவர்க்குச் சுடுகாட்டில் விளைந்த நீற்றொடு தோன்றும் உன் கோலத்தை அறிவிற் காட்டி விளங்குகின்றாய்.
1790 | பெரும்பிணி
பிறப்பினொ டிறப்பிலையொர் பாகம் கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் சுரும்புண வரும்பவிழ் திருந்தியெழு கொன்றை விரும்பினை புறம்பயம் அமர்ந்தவிறை யோனே. |
2.030. 5 |
புறம்பயம் அமர்ந்த இறைவனே! நீ பெரிதாகப் பற்றிய நோய், பிறப்பு இறப்பு, இல்லாதவன். கரும்படு சொல்லி என்னும் பெயருடைய உமையம்மையுடன் மகிழ்ந்தவன். வண்டுகள் தேனுண்ண அதனால் அழகுற அவிழும் கொன்றைமலர்களை விரும்பியவன்.
1791 | அனற்படு
தடக்கையவ ரெத்தொழில ரேனும் நினைப்புடை மனத்தவர் வினைப் பகையும் நீயே தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப் புனற்படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய். |
2.030. 6 |
புறம்பயம் அமர்ந்த பெருமானே! தீ வளர்க்கும் நீண்டகையை உடைய அந்தணர்கள் உன்னை நினையும் மனத்தவ ராயின் அவர் எத்தொழிலை மேற்கொண்டவர் ஆயினும் அவர்தம் தீவினைகட்குப் பகையாயிருந்து தீர்ப்பவன்நீ. தீக் கொழுந்து போன்ற ஒளி பொருந்திய சடையில் தனித்த பிறையோடு பொருந்தக் கங்கை கிடக்குமாறு செய்துள்ளவன், நீ.
1792 | மறத்துறை
மறுத்தவர் தவத்தடிய ருள்ளம் அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர் திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும் புறத்துள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய். |
2.030.7 |
புறம்பயம் அமர்ந்தோய்! பாவமான செயல்களை விரும்பாத தவத்தைப்புரியும் அடியவர் உள்ளங்களில் அறநெறிப் பயனையும் அடைய விரும்பாத வாறு அதனைக் கடிந்து, உன் அருள் உரிமையைப் பெற்றோர் திறத்தினுக்கு ஏற்ப அருள் வழங்கும் தன்மையனாய் வேறாய் நின்றும் அருள் புரிபவன் நீ.
1793 | இலங்கைய
ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி வலங்கொள வெழுந்தவ னலங்கவின வஞ்சு புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய். |
2.030. 8 |
புறம்பயம் அமர்ந்தவனே! இலங்கை மக்கள் வணங்கும் தலைவனாகிய இராவணன் மலையின் கீழ் அகப்பட்டு முழங்க அவன் வலிய தலைகளோடு கைகளை அடர்த்து அவன் அஞ்சிப் போற்ற வாளும், நாளும் அளித்து அவனுக்கு வெற்றி உண்டாக அருள் புரிந்தவன் நீ. நன்மைகள் உண்டாக ஐந்து புலன்களை வென்றவன் நீ.
1794 | வடங்கெட
நுடங்குண விடந்தவிடை யல்லிக் கிடந்தவ னிருந்தவ ணளந்துணர லாகார் தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப் புடங்கருள்செய் தொன்றினை புறம்பயம மர்ந்தோய். |
2.030. 9 |
புறம்பயம் அமர்ந்தவனே! ஆல் இலையில் துயின்ற திருமாலும் அவனது கொப்பூழாகிய தாமரையில் இருந்துதோன்றிய பிரமனும் உன்னை அளந்தறிய இயலாத வரா(யி)னார். பின் அவர்கள் தொடர்ந்து பழைய உருவோடு வணங்க அவர்கட்கு கருடப்புள், அன்னப்புள் ஆகியவற்றை ஊர்தியாகக் கொண்டு படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களைச் செய்யுமாறு அருள்புரிந்தாய்.
1795 | விடக்கொருவர்
நன்றென விடக்கொருவர் தீதென உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும் படக்கர்கள் பிடக்குரை படுத்துமை யொர்பாகம் அடக்கினைபுறம்பய மமர்ந்தவுர வோனே. |
2.030. 10 |
புறம்பயம் அமர்ந்த வலியவனே! ஊன் உண்டல் நன்றென்று கூறும் தேரர்கள், தீதென்று கூறும் சமணர்கள், உடலில் உடையின்றித் திரியும் திகம்பரர்கள் உடலைப் போர்த்தித் திரியும் புத்தர்கள் ஆகியோர் கூறும் பிடகநூல் முதலியவற்றின் உரைகளைக் கொள்ளாது உமை யம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குகின்றாய்.
1796 | கருங்கழி
பொருந்திரை கரைக்குலவு முத்தம் தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன் சுரும்பவிழ் புறம்பய மமர்ந்ததமிழ் வல்லார் பெரும்பிணி மருங்கற வொருங்குவர் பிறப்பே. |
2.030. 11 |
கரிய உப்பங்கழிகள், பெரிய அலைகளால், விளங்கும் முத்துக்களைததந்து உலவும் கழுமலத்தார்க்குத் தலைவனும் தமிழுக்கு உரிமை பூண்டவனுமாகிய ஞான சம்பந்தன், வண்டுகள் ஒலி செய்யும் புறம்பயம் அமர்ந்த பிரானை விரும்பிப் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்கள் காலங்காலமாக வரும் பெரும் பிணியாகிய பிறப்பு நீங்கப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புறம்பயம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - புறம்பயம், அமர்ந்தோய், அமர்ந்த, விளங்கும், பெருமானே, கொண்டு, அமர்ந்தவனே, கூறும், திறத்தினை, முழங்க, விரும்பாத, நின்றும், விடக்கொருவர், திரியும், பெற்றோர், உண்டாக, வணங்கும், மிகப்பெரிய, திருச்சிற்றம்பலம், திருமுறை, பெருகி, திருப்புறம்பயம், பிறப்பு, பெரும்பிணி, விளங்குகின்றாய், வண்டுகள்