முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.028.திருக்கருவூரானிலை
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.028.திருக்கருவூரானிலை
2.028.திருக்கருவூரானிலை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர்.
தேவியார் - கிருபாநாயகியம்மை.
1764 | தொண்டெ
லாமலர் தூவி யேத்தநஞ் சுண்ட லாருயி ராய தன்மையர் கண்ட னார்கரு வூரு ளானிலை அண்ட னாரரு ளீயு மன்பரே. |
2.028. 1 |
தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நஞ்சினை உண்டவரும், அரிய உயிர் போன்றவரும், கற்கண்டு போல் இனிப்பவருமாய இறைவர், கருவூர் ஆனிலையில் விளங்கும் தேவராவார். அருள் வழங்கும் அன்புடையவர் அவர்.
1765 | நீதி
யார்நினைந் தாய நான்மறை ஓதி யாரொடுங் கூட லார்குழைக் காதி னார்கரு வூரு ளானிலை ஆதி யாரடி யார்த மன்பரே. |
2.028.2 |
நீதியின் வடிவானவர். நினைந்து ஆராயத்தக்கதாய நான்கு மறைகளை ஓதும் அந்தணர்களோடு கூடியவர். குழை அணிந்த திருச்செவியர். கருவூர் ஆனிலையில் விளங்கும் முதல்வர். அடியார் களுக்கு அன்பர்.
1766 | விண்ணு
லாமதி சூடி வேதமே பண்ணு ளார்பர மாய பண்பினர் கண்ணு ளார்கரு வூரு ளானிலை அண்ண லாரடி யார்க்கு நல்லரே. |
2.028. 3 |
வானத்தில் உலாவும் மதியைச் சூடியவர். வேத இசையாக விளங்குபவர். மேலான பண்பினர். கூத்தர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அடியவர்கட்கு நல்லவர்.
1767 | முடியர்
மும்மத யானை யீருரி பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர் கடியுளார் கரு வூரு ளானிலை அடிகள் யாவையு மாய ஈசரே. |
2.028.4 |
சடைமுடியை உடையவர். மும்மதங்களை உடைய யானையை உரித்தவர். வெண்பொடி பூசியவர். மன்மதனைச் செற்ற வர். சிறப்புடையவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அவர் எல்லாமாய் விளங்கும் ஈசராவார்.
1768 | பங்க
யம்மலர்ப் பாதர் பாதியோர் மங்கை யர்மணி நீல கண்டர்வான் கங்கை யார்கரு வூரு ளானிலை அங்கை யாடர வத்தெம் மண்ணலே. |
2.028. 5 |
தாமரை போன்ற திருவடியர். தம் திருமேனியில் பாதியாக உமையம்மையைக் கொண்டவர். நீல மணி போன்ற கண்டத்தினர். ஆகாய கங்கையைத் தாங்கியவர். அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை உடையவர், அவர் கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவராவார்.
1769 | தேவர்
திங்களும் பாம்புஞ் சென்னியின் மேவர் மும்மதி லெய்த வில்லியர் காவ லர்கரு வூரு ளானிலை மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. |
2.028. 6 |
தேவர்கட்கு எல்லாம் தேவர். திங்கள், பாம்பு ஆகியவற்றை முடிமேல் சூடியவர். மும்மதில்களை எய்த வில்லை உடையவர். எல்லோரையும் காப்பவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் இவர் அயன், அரி, அரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சக்தி வழங்கியவர் அல்லரோ?.
1770 | பண்ணி
னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப் பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர் கண்ணி னார்கரு வூரு ளானிலை நண்ணி னார்நமை யாளு நாதரே. |
2.028. 7 |
பண்களின் வடிவாய் இருப்பவர். படிந்து ஏறுதற்கு உரிய விடையூர்தியர. நீறணிந்தவர். திருமேனியில் உமை அம்மையைக் கொண்டுள்ளவர். பிறை சூடிய திருமுடியர். நெற்றியில் கண்ணுடையவர். கருவூர் ஆனிலையில் எழுந்தருளியிருப்பவர். நம்மை ஆளும் நாதர் அவர்.
1771 | கடுத்த
வாளரக் கன்க யிலையை எடுத்த வன்றலை தோளுந் தாளினால் அடர்த்த வன்கரு வூரு ளானிலை கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே. |
2.028. 8 |
வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த இராவணனின் தலை தோள் ஆகியவற்றைத் தாளினால் அடர்த்தவன். பின் அவனுக்கு அருள் கொடுத்தவன். கூத்தன். அவன் கருவூர் ஆனிலையில் விளங்கும் பெரியவன்.
1772 | உழுது
மாநிலத் தேன மாகிமால் தொழுது மாமல ரோனுங் காண்கிலார் கழுதி னான்கரு வூரு ளானிலை முழுது மாகிய மூர்த்தி பாதமே. |
2.028. 9 |
எல்லாமாய் விளங்கும் இறைவனின் பாதங்களைப் பன்றி வடிவெடுத்துப் பெரிய நிலத்தை உழுது சென்று முயன்ற திருமால், பிரமன் ஆகியோர் தொழுதும் காண்கிலர். அத்தகைய பெருமான் கருவூர் ஆனிலையில் நாம் எளிதின் வணங்க எழுந்தருளியுள்ளான்.
1773 | புத்தர்
புன்சம ணாதர் பொய்யுரைப் பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப் பத்தர் சேர்கரு வூரு ளானிலை அத்தர் பாத மடைந்து வாழ்மினே. |
2.028. 10 |
புத்தர்களும் புன்மையான அறிவற்ற பொய்யுரைகளைக் கூறும் பித்தர்களாகிய சமணர்களும் பேசும் பேச்சுக்களை விட்டு உண்மையான பக்தர்கள் சேரும் கருவூர் ஆனிலையில் விளங்கும் மேலான இறைவனின் திருவடிகளை அடைந்து வாழுங்கள்.
1774 | கந்த
மார்பொழிற் காழி ஞானசம் பந்தன் சேர்கரு வூரு ளானிலை எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர் சிந்தை யிற்றுய ராய தீர்வரே. |
2.028. 11 |
மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் கருவூர் ஆனிலையை அடைந்து எம் தந்தையாகிய இறைவன் மேல் பாடிய இப்பதிகப்பாடல் பத்தையும் ஓத வல்லவர் மனத்துயர் தீர்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கருவூரானிலை - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ளானிலை, கருவூர், விளங்கும், ஆனிலையில், உடையவர், னார்கரு, திருமேனியில், சேர்கரு, தாளினால், இறைவனின், அடைந்து, வல்லவர், எல்லாமாய், பண்பினர், திருச்சிற்றம்பலம், திருமுறை, மன்பரே, திருக்கருவூரானிலை, சூடியவர், தலைவர்