தியாக பூமி - 4.6. பூர்வ ஞாபகம்
குழந்தைகள் போன பிறகு உமாவுக்கு அடிக்கடி அவர்களுடைய ஞாபகம் வந்து கொண்டிருந்தது. முக்கியமாக, சாருவின் மலர்ந்த முகமும், கலீரென்ற சிரிப்பும், வெடுக்கென்ற பேச்சும், கண்ணீர் ததும்பிய கண்களும் உமாவின் மனக்கண்ணின் முன்னால் எப்போதும் தோன்றிக் கொண்டிருந்தன.
அந்தக் குழந்தையை மறுபடி எப்போது பார்ப்போம் என்று இருந்தது. டிக்கெட் புத்தகத்தை எடுத்துப் பார்த்தாள். நாடகம் நடப்பதற்கு இன்னும் மூன்று நாள் இருப்பது தெரிய வந்தது. 'அடாடா! இன்று ராத்திரியே இருக்கக் கூடாதா?' என்று தோன்றிற்று.
சாருவின் பேச்சுக்களும் செய்கைகளும் ஒவ்வொன்றாய் உமாராணிக்கு ஞாபகம் வந்து கொண்டிருந்தன. அவை அவ்வளவு தூரம் தன்னுடைய உள்ளத்தில் பதிந்துவிட்டன என்பது உமாவுக்கு அதிசயமாயிருந்தது. குழந்தை எதிரில் இருந்தபோதும், அவள் போனபோதுங்கூட அவ்வளவு தெரியவில்லை. அவள் போய்விட்ட பிறகு தான் தன்னுடைய உள்ளத்தை எவ்வளவு தூரம் கவர்ந்து விட்டாள் என்பது நன்றாய்த் தெரிந்தது.
குழந்தை தான் என்ன சமர்த்து! என்ன சூடிகை! முகத்திலே எவ்வளவு களை! எவ்வளவு சாதுர்யமாய்ப் பேசுகிறது! - இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கே சமர்த்து அதிகம்.
அந்த வயசில் தான் எப்படி இருந்தாள் என்பதை உமா யோசித்துப் பார்த்தாள். அதை நினைக்கவே அவளுக்கு வெட்கமாயிருந்தது. கிழிச்சல் பாவாடையைக் கட்டிக்கொண்டு நடுத்தெருவில் உட்கார்ந்து வீடு கட்டி விளையாடியதெல்லாம் ஞாபகம் வந்தது. சிவராத்திரிக்குக் கண் விழிப்பதற்காக, "சீசந்தி அம்பாரம் சிவராத்திரி அம்பாரம்" என்று பாடிக் கொண்டு வீடு வீடாகப் போய் எண்ணெய் தண்டியதும் நினைவு வந்தது. அப்போது தனக்கு அ, ஆ என்று எழுதக் கூடத் தெரியாது. இந்தக் காலத்துக் குழந்தைகளோ ஏழு, எட்டு வயதில் டிராமா போடுகின்றன!
ஆமாம்; சாருவுக்கு ஆறு, ஏழு வயதுதான் இருக்கும். ஆறு, ஏழு, வயது! ஆறு - ஏழு-! அந்தக் குழந்தை இருந்தால் அதற்கும் இப்போது ஏழு வயது தான் இருக்கும்.
உமாவுக்கு, சொப்பனத்தில் கண்டது போல், ஏழு வருஷத்துக்கு முந்தி நடந்த அந்த அதிசயச் சம்பவம் ஞாபகம் வந்தது.
ஒரு யுவதி கையில் ஒரு சின்னஞ் சிறு குழந்தையுடன் சென்னை நகரின் வீதிகளில் வெறி பிடித்தவள் போல் ஓடுகிறாள். கொஞ்ச நேரம் வரையில் அவள் மனத்தில் பொங்கிய ஆத்திரம் அவளுடைய தேகத்துக்கும் பலம் அளித்து வருகிறது. திடீரென்று அவளுடைய சக்தி குன்றுகிறது; மூச்சு வாங்குகிறது. இனிமேல் ஓடினால் உயிர் போய் விடுமென்று தோன்றுகிறது.
அவளுக்கு உயிரை விடுவதைப் பற்றிக் கவலையில்லை. உண்மையில் அவள் மரணத்தை மனப்பூர்வமாக வேண்டுகிறாள். ஆனால், தனக்குப் பின்னால் அந்தக் குழந்தையை இந்த உலகத்தில் விட்டு விட்டுப் போக மட்டும் மனம் வரவில்லை. ஆகவே, இரண்டு பேரும் ஏக காலத்தில் மரணமடைய வேண்டுமென்று தீர்மானிக்கிறாள். ஜன சஞ்சாரமில்லாத ஜலப் பிரதேசத்தைத் தேடிச் செல்கிறாள்.
உலகந்தான் எவ்வளவு ஆச்சரியமானது! எப்போது நாம் யாராவது மனுஷ்யர்களைப் பார்க்க மாட்டோ மா, யாரேனும் வந்து உதவி செய்யமாட்டார்களா என்று தவித்துக் கொண்டிருக்கிறோமோ, அப்போது நம் கண்ணில் யாரும் எதிர்படுவதில்லை. கண்ணில் எதிர்ப்படுகிறவர்கள் கூட நம்மருகில் வராமல் தூரமாய் ஒதுங்கிப் போகிறார்கள். ஆனால், எப்போது நாம் ஒருவரையும் பார்க்க வேண்டாம். ஒருவர் கண்ணிலும் படவேண்டாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோமோ, அப்போது எங்கிருந்தோ மனுஷ்யர்கள் வந்து சேர்கிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.6. பூர்வ ஞாபகம் - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஞாபகம், வந்தது, எவ்வளவு, அப்போது, எப்போது, குழந்தை, உமாவுக்கு, அந்தக், அவளுக்கு, அம்பாரம், இருக்கும், பார்க்க, கண்ணில், கொண்டிருக்கிறோமோ, காலத்துக், அவளுடைய, இந்தக், தன்னுடைய, அவ்வளவு, பார்த்தாள், என்பது, கொண்டிருந்தன, சமர்த்து, சாருவின், குழந்தையை