தியாக பூமி - 4.5. முல்லைச் சிரிப்பு
"நான் தான் சாருமதி" என்று சாரு சொன்னபோது அவளுடைய முகத்தில் குறுநகை தவழ்ந்தது. அதைப் பார்த்த உமாராணியின் முகத்திலும், சற்று முன்பு தோன்றிய சோகக் குறி மறைந்து புன்னகை மலர்ந்தது.
"அடி சமர்த்து! இங்கே வா! எல்லாரும் கிட்ட வாங்கோ!" என்றாள் உமா.
குழந்தைகள் எல்லாம் அவள் அருகில் வந்து சூழ்ந்து கொண்டன. அவர்களில் ஒரு பெண் "மாமி! உங்க வீட்டு தர்வான் இருக்கானே அவன் வந்து... எங்க மேலே..." என்று புகார் சொல்ல ஆரம்பித்தாள். சாரு உடனே அவளுடைய வாயைப் பொத்தினாள்!
"ஏம்மா அவளுடைய வாயைப் பொத்தறே! அவள் சொல்ல வந்ததைச் சொல்லட்டுமே?" என்றாள் உமா.
அதற்குச் சாரு, "இல்லை, மாமி! உங்க தர்வான் விளையாட்டுக் கோசறம் எங்க மேலே நாயை அவிழ்த்து விடறேன்னு சொன்னான். அதைப் போய் லலிதா உங்க கிட்டப் புகார் சொல்றாளே, அது சரியா?" என்றாள். இப்படிச் சொல்லிவிட்டுச் சாரு கடைக் கண்ணால் தர்வானைப் பார்த்தாள். அந்த தர்வானுடைய கடுவம் பூனை முகத்தில் கூட அப்போது புன்னகை தோன்றியது.
உமா அவனைப் பார்த்து, "ஏண்டா! குழந்தைகள் மேலேயா நாயை அவிழ்த்துவிடறேன்னு சொன்னே? சீ, போ!" என்றாள். தர்வான் வெட்கித் தலை குனிந்து கொண்டு கீழே சென்றான்.
பிறகு உமா, "எல்லாரும் எங்கேயம்மா வந்தேள்?" என்று கேட்டாள்.
அதற்கு லலிதா, "மாமி! எங்கள் பள்ளிக்கூடத்து பில்டிங் பண்டுக்காக ஒரு டிராமா போடப் போகிறோம். அதுக்கு டிக்கெட் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய், அரை ரூபாயில் இருக்கு. உங்களுக்கு எது வேணுமோ அது வாங்கிக்குங்கோ" என்றாள்.
அப்போது சாரு, "ஆனா, உங்களைப் பார்த்தால், நீங்க ஓர் இரண்டு ரூபாய் டிக்கெட்டுதான் வாங்கிக்குவேள் என்று எனக்குத் தோணுகிறது" என்றாள்.
உமா சாருவைப் பார்த்து, விஷமமாக 'அடே அப்பா! இரண்டு ரூபாய்க்கா டிக்கெட் வாங்கணும்? அப்படி என்ன அதிசயமான டிராமா போடப்போறேள்?" என்று கேட்டாள்.
சாரு, "கிருஷ்ண லீலா போடப் போறோம். நான் தான் கிருஷ்ண வேஷம். இப்ப என்னமோ போலே இருக்கேனேன்னு நினைக்காதீங்கோ. வேஷம் போட்டுண்டு வந்தேன்னா நீங்க பிரமிச்சுப் போயிடுவேள்" என்றாள்.
உமாவுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், சிரித்தால் அந்தக் குழந்தை, பரிகாசம் என்று நினைத்துக் கொண்டு வருத்தப்படப் போகிறதென்று எண்ணிச் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
"இதுவரையில் எத்தனை டிக்கெட் வித்திருக்கேள்?" என்று கேட்டாள்.
சாரு, "ஒண்ணுகூட விக்கலை மாமி! எல்லாரும் ஏதாவது வேலையிருக்கு, கீலையிருக்குன்னு சாக்குப் போக்குச் சொல்றா. குழந்தைகள் டிராமாதானேன்னு அவாளுக்கு அலட்சியம் போலேயிருக்கு" என்றாள். இப்படிச் சொன்னபோது சாருவின் குழந்தை உள்ளத்தில் உண்மையாகவே துக்கம் பொங்கி வந்தது. அவள் கண்ணில் ஜலம் துளித்தது.
உமாவுக்கு இதைப் பார்க்கச் சகிக்கவில்லை. உடனே குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு முத்தமிட்டாள்.
"அவா கிடக்கா, நீ வருத்தப்படாதே, கண்ணு! பெரியவாள்ளாம் சுத்த அசடுகள். நீங்க தான் சமத்து. உங்ககிட்ட இருக்கிற டிக்கெட்டையெல்லாம் கொடுத்துடுங்கோ. நானே வாங்கிக்கிறேன். நீங்க இந்த வெயில்லே அலையாமே வீட்டுக்குப் போங்க" என்றாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.5. முல்லைச் சிரிப்பு - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்றாள், ரூபாய், இரண்டு, டிக்கெட், கேட்டாள், தர்வான், குழந்தைகள், அவளுடைய, எல்லாரும், கொண்டு, டிராமா, கிருஷ்ண, குழந்தை, வந்தது, இப்படிச், புன்னகை, முகத்தில், சொன்னபோது, புகார், வாயைப், அப்போது, சிரிப்பு, பார்த்து