தியாக பூமி - 4.3. 'ஸ்ரீமதி சாருமதி தேவி'
"வலது கையால் கொடுப்பது இடது கைக்குத் தெரியாதபடி கொடுக்க வேண்டும்" என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? இது எவ்வளவு அருமையான ஆப்த வாக்கியம் என்பதை உமாராணி வெகு சீக்கிரத்தில் தெரிந்து கொண்டாள். புகழ்ச்சிக்கு ஆசைப் பட்டுத் தர்மம் செய்வதில் பலன் குறைவு என்பதுதான் மேற்படி வாக்கியத்தின் உண்மைக் கருத்து. ஆனால், வேறொரு விதத்திலும் அது மிகவும் உபயோகமான உபதேசமாகும். இந்த நாளில் ஒருவர் செய்யும் தர்மம் பிரசித்தியாகிவிட்டால் அதைக் காட்டிலும் அவருக்கு உபத்திரவம் உண்டாக்கக் கூடியது வேறொன்றுமில்லை. அப்புறம் அவருக்கு மனநிம்மதி என்பதே இல்லாமற் போய் விடுகிறது. இந்த ஏழைத் தேசத்தில் தர்மத்தை எதிர்பார்க்கும் ஸ்தாபனங்களும், காரியங்களும் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை நடத்துவோரெல்லாம் மேற்படி தர்மப் பிரபுவைத் தேடி வருகின்றனர்.
'இவர்தான் இந்தப் பெரிய தர்மத்தைச் செய்தாரே வேறு தர்மங்களுக்கு வேறு மனுஷர்களைத் தேடிப் போவோம்' என்று யாரும் நினைப்பதில்லை. ரயிலில் ஏற்கெனவே கூட்டமாயுள்ள வண்டியிலேயே இன்னும் கூட்டமாக ஜனங்கள் ஏறுவதைப் பார்த்திருக்கிறோமல்லவா? அந்த மாதிரி ஒரு நல்ல காரியத்துக்குப் பணம் கொடுத்தவரிடமேதான் மற்றவர்களும் வருகிறார்கள். உண்மையான தர்மத்தை நடத்துவோரைத் தவிர, போலி மனிதர்களும் மோசக்காரர்களும் வருகிறார்கள். வந்து அவருடைய பிராணனை வாங்கிவிடுகிறார்கள். அந்தத் தர்மப் பிரபு இல்லையென்று சொன்னாலோ வருகிறவர்களுக்குக் கோபம் பொங்குகிறது. "ஒரு நாளும் கொடுக்காத மகாலக்ஷ்மிதான் இன்றைக்கும் இல்லை என்று சொல்லிவிட்டாள், தினமும் கொடுக்கிற மூதேவி, உனக்கென்ன வந்தது?" என்ற கொள்கையின்படி, தர்மம் செய்தவர்களுக்கு முடிவில் எப்போதும் வசவுதான் கிடைக்கிறது.
உமாராணியின் அநுபவமும் இந்த மாதிரிதான் இருந்தது. 'அடாடா! நாம் மீனாக்ஷி ஆஸ்பத்திரிக்கு ஐந்து லட்சம் கொடுத்ததை ஏன் விளம்பரப்படுத்தினோம்? அநாமதேயமாகக் கொடுத்திருக்கக் கூடாதா?' என்று அடிக்கடி அவள் எண்ணமிட்டாள்.
சென்னையில் எவ்வளவு தர்ம ஸ்தாபனங்கள், பொது நலக் கழகங்கள் உண்டோ அவ்வளவிலிருந்தும் நன்கொடை கோரி அவளுக்குக் கடிதங்கள் வந்தன. ஒரு நகரத்தில் இவ்வளவு அநாதாசிரமங்களும், இலவசக் கல்வி ஸ்தாபனங்களும், மாதர் முன்னேற்றக் கழகங்களும், அமெச்சூர் நாடக சபைகளும், சங்கீத சபாக்களும், ஜீவகாருண்ய சங்கங்களும் இருக்கக் கூடுமென்று உமாராணி கனவிலும் எதிர்பார்க்கவில்லை. தினந்தோறும் புதிய புதிய ஸ்தாபனங்களிலிருந்து அவளுக்குக் கடிதங்கள் வந்து குவிந்தன. திறப்பு விழாக்கள், வருஷபூர்த்திக் கொண்டாட்டங்கள் முதலியவற்றுக்கு அவளுக்கு வந்த அழைப்புக் கடிதங்களுக்கோ அளவில்லை. கடிதங்களை அனுப்பிவிட்டு, அந்தந்த ஸ்தாபனங்களின் நிர்வாகிகள் உமாராணியை நேரில் பார்ப்பதற்கும் வந்தார்கள். உண்மையாக வந்தவர்களுடன் போலி மனிதர்களும் வந்தார்கள். சிலர், ஏதாவது ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு உமாராணியுடன் பேசிவிட்டு வரலாமென்று வந்தார்கள்.
இம்மாதிரி ஒரு இளம்பெண் - பெரிய பணக்காரி - நவநாகரிகத்தில் சிறந்தவள் - அழகோ சொல்ல வேண்டாம் - ஒரு புன்சிரிப்புக்கு உலகம் மூன்றையும் கொடுக்கலாம் - இப்படிப்பட்டவள் புருஷன் முதலிய தொந்தரவு ஒன்றுமில்லாதவளாய், சுதந்திரமாயிருக்கிறாள் என்றால், அவளைப் பார்ப்பதற்கும் அவளுடன் சிநேகம் செய்து கொள்வதற்கும் இஷ்டப்படுகிறவர்கள் ஒரு பெரிய பட்டணத்தில் எவ்வளவோ பேர் இருப்பார்கள் அல்லவா?
ஆகவே, உமாராணியின் பங்களாவில் எப்போதும் வருகிறவர்களும் போகிறவர்களுமாய் ஜே ஜே என்று இருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.3. 'ஸ்ரீமதி சாருமதி தேவி' - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - தர்மம், வந்தார்கள், எப்போதும், உமாராணியின், மனிதர்களும், இருந்தது, கடிதங்கள், பார்ப்பதற்கும், வருகிறார்கள், அவளுக்குக், தர்மப், மேற்படி, உமாராணி, எவ்வளவு, அவருக்கு, தர்மத்தை, எவ்வளவோ, ஸ்தாபனங்களும், அல்லவா