முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 72.அவை அறிதல்
திருக்குறள் - 72.அவை அறிதல்
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மையவர். |
711 |
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். |
712 |
சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல். |
713 |
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். |
714 |
அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. |
715 |
அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. |
716 |
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லா ரகத்து. |
717 |
குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. |
718 |
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார். |
719 |
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல். |
720 |
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
72.அவை அறிதல் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - வேண்டும், சொற்களின், சொல்லின், ஆராய்ந்து, கூட்டத்தில், அறிவிற், பேசுதல், போன்றது, நன்றாக, அறிந்து, இலக்கியங்கள், சொல்லுக, உடையவர், literature, அவையின்