பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

ஆமாலோ என்று பெரியாரை முன் நின்ற தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,- போம் ஆறு அறியா, புலன் மயங்கி, ஊர் புக்கு, சாமா கண் காணாத வாறு. |
61 |
பெரியோர்களை இவர்க்கு (எம்மோடு மாறுபடல்) ஆகுமோ என்று நினைத்து அறிவிற் சிறியார் தாமாக முன்னின்று மாறுபட்டு வன்மை செய்து நிற்றல் சாதற்குரிய விலங்குகள் செல்லும் வழியினை அறியாதவாறு அறிவு மயங்கலால் ஊரினுள் புகுந்துகண்களை இழந்து வருந்தியதை ஒக்கும்.
கருத்து: பெரியாரோடுமாறுபடுவார் இறுதியை எய்துவர்.
எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரைக், கல்லாத் துணையார் கயப்பித்தல் சொல்லின்,- நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்கு மறைந்து, யானை பாய்ச்சிவிடல். |
62 |
அழகு நிறைந்து பொருந்தியிருக்கின்ற வளையையுடையாய்! எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரை - எல்லா வகையானும் உயர்ந்த அறிஞர்களை கல்லா துணையார் - கல்லாமையைத் துணையாக உடைய அறிவிலார் தாம் அதனுள் மறைந்து நின்று வெறுக்கப் பண்ணுதலைச் சொல்லின் எருக்கம்புதரின்கண் மறைந்து ஒருவன் யானையின்மேல் அம்பு எய்தலோ டொக்கும்.
கருத்து: அறிவுடையாரைக் கல்லார் துன்புறுத்துவாராயின்,அவர் கெட்டொழிதல் உறுதி என்றறிதல் வேண்டும்.
முன்னும் ஒரு கால் பிழைப்பானை ஆற்றவும், பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ?-இன் இசை யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர!-ஈனுமோ, வாழை இரு கால் குலை? |
63 |
இனிய ஓசையையுடைய யாழைப்போல வண்டுகள் ஒலிக்கும் புனல் நிறைந்த மருதநிலத் தலைவனே! வாழை இருகால் குலை ஈனுமோ - வாழை இருமுறை குலைகளை ஈனுமோ (ஈனாது.) (அதுபோல்) முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும் - முன்பு ஒருமுறை பிழை செய்தவனைப் பொறுத்தவர்களா யிருக்கவும் பின்னரும் குற்றம் செய்தால் பொறுப்பார்களோ? (பொறுக்கமாட்டார்கள்.)
கருத்து: சான்றோர் அறிவிலார் செய்த குற்றத்தை ஒருமுறையன்றிப் பொறுக்கமாட்டார்கள்.
நெடுங் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு, நடுங்கிப் பெரிதும் நலிவார், பெரியர்;- அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப!-கெடுமே, கொடும்பாடு உடையான் குடி. |
64 |
அடும்பின் மென்கொடிகள் நிறைந்து அழகு செய்கின்ற சோலைகள் சூழ்ந்த கடல் நாடனே! நீண்ட காலமாகத் தீச்செயல் கைவந்தார் செய்த தீங்கினைக் கண்டு அறிஞர் (இவர் இத்துணைக் காலமாகச் செய்த தீங்கினால் உலகு என்னாயிற்றோ) என்று மனம் நடுக்கமுற்றுப் பெரிதும் வருந்துவார்கள் கொடியதன்மையை உடையானது குடி கெட்டுப் போகும்.
கருத்து: அறிவுடையார் அஃதிலார் செய்த இன்னல்களை நினைத்து வருந்துவாராயின், நினைத்த அளவிலே அவர் குடிகெட்டொழியு மென்பதாம்.
9. புகழ்தலின் கூறுபாடு
செய்த கருமம் சிறிதானும் கைகூடா; மெய்யா உணரவும் தாம் படார்; எய்த நலத் தகத் தம்மைப் புகழ்தல்-'புலத்தகத்துப் புள் அரைக்கால் விற்பேம்' எனல். |
65 |
செய்த செயலின் பயன் சிறிதளவும் கைவருதல் இல்லை செயலின் பயனை உறுதியாகப் பெறுவார் என்று பிறரால் எண்ணவும் படாதவர்கள் நிரம்ப நன்மையிலே பொருந்தத் தம்மைத் தாமே புகழ்தல் வயலின்கண் இருக்கும் புள்ளினை அரைக்கால் பொன்னுக்கு விற்பேம் என்று கூறுதலோ டொக்கும்.
கருத்து:முடிக்கமுடியாத செயலை முடிப்பதாகக் கூறிப் புகழ்தல்கூடாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, செய்த, கருத்து, இலக்கியங்கள், பழமொழி, ஈனுமோ, நானூறு, பதினெண், வாழை, நிறைந்து, மறைந்து, கீழ்க்கணக்கு, ஆற்றவும், பிழைப்பானை, புனல், கண்டு, அரைக்கால், விற்பேம், செயலின், புகழ்தல், குடி, பொறுக்கமாட்டார்கள், கால், குலை, அறிவிலார், நினைத்து, எல்லாத், செய்து, சிறியார், சங்க, பெரியாரை, திறத்தும், இறப்பப், டொக்கும், அவர், தாம், அழகு, துணையார், சொல்லின், முன்னும்