முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.032.திருவாரூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.032.திருவாரூர்
6.032.திருவாரூர்
போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2405 | கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி |
6.032.1 |
அநுபவப் பொருளை ஞானதேசிகன் பால் உணர்ந்தவர்கள் உண்ணும் கனியே! திருவடிகளைச் சார்ந்தவர்கள் அடையும் நற்பேறே! உன்னையன்றிப் பிறிதொருபற்றற்றவர்களுக்குக் கிட்டும் அமுதமே! துயர் துடைத்து அடியேனை ஆட்கொண்டவனே! பிறர் ஒப்பாகமாட்டாத வலியவனே! தேவர்கள் போற்றும் அமுதமே! பகைவர்களின் மும்மதில்களை அழித்த சிவனே! திருவாரூர் திருமூலட்டானனே! நீ வாழ்க.
2406 | வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி |
6.032.2 |
கப்பல்கள் செல்லும் கடலின் நஞ்சை உண்டவனே! மத யானையின் உதிரப்பசுமை கெடாத தோலினைப் போர்த்தியவனே! தேனொடு மலரும் நறுங்கொன்றை மாலையை அணிந்தவனே! உன்னால் கொல்லப்பட்ட புலித்தோலை ஆடையாக உடுத்த இளையவனே! அழகிய நெற்றிக் கண்ணை உடையவனே! தேவர் தலைவனே! ஆல நிழலில் அமர்ந்து அறத்தை மௌன நிலையில் சனகர் முதலியோருக்கு அருளியவனே! ஒப்பற்ற பொற்குன்றே! சிவனே! திருமூலட்டானத்து உறைபவனே! நீ வாழ்க.
2407 | மலையான் மடந்தை மணாளா போற்றி நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி இலையார்ந்த மூவிலைவே லேந்தீ போற்றி சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி |
6.032.3 |
பார்வதி மணவாளனே! இளைய காளையே உடையவனே! என் நெஞ்சில் நிலையாக நிற்பவனே! நெற்றிக் கண்ணனே! இலைவடிவாய் அமைந்த முத்தலைச் சூலம் ஏந்தியவனே! ஏழ்கடலும் ஏழ் உலகமும் ஆகியவனே! வில்லால் மும்மதில்களை எரித்த சிவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! உன் திருவடி வாழ்க.
2408 | பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி |
6.032.4 |
பொன்னார் மேனியனே! பூதப்படையனே! சிறப்பு நிலைபெற்ற நான்கு வேதங்களும் ஆனவனே! மான் குட்டியை ஏந்திய கையினனே! உன்னையே தியானிப்பவருக்கு உள் பொருளாய் அகக்கண்களுக்குக் காட்சி வழங்குகின்றவனே! உலகுக்கு ஒப்பற்ற தலைவனே! சென்னியில் வெண்பிறை சூடியவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! நீ வாழ்க.
2409 | நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி |
6.032.5 |
விடம் தங்கிய கழுத்தினனே! ஞானயோக வடிவினனே! சூரியன் ஒருவனுடைய பற்களைத் தகர்த்த வேந்தனே! வெண்பிறையை முடிமாலையாகச் சூடியவனே! எல்லாம் ஒடுங்கிய இருளில் கூத்தாடுதலை உகந்தவனே! திருநீறு பூசிய சோதியே! சிவந்த சடையை உடையவனே! திருமூலட்டானனே! உன் திருவடி வாழ்க.
2410 | சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி அங்கமலத் தயனோடு மாலுங் காணா செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி |
6.032.6 |
சங்கரனே! சதாசிவனே! படம் எடுக்கும் பாம்பை அணிந்தவனே! புண்ணியனே! தாமரையில் உள்ள பிரமனும், திருமாலும் காணமுடியாத தீப்பிழம்பின் வடிவானவனே! திருமூலட்டானத்து உறைபவனே! உன் திருப்பாதங்கள் வாழ்க.
2411 | வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி செம்பொனே மரகதமே மணியே போற்றி |
6.032.7 |
நறுமணம் கமழும் கொன்றைப் பூ அணிந்த சடையனே! சடையில் வானில் உலவும் பிறையையும் ஒளிவீசும் பாம்பினையும் சூடியவனே! பூங்கொம்பு போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகனே! கழலணிந்த திருவடிகளால் கூற்றுவனை உதைத்த தலைவனே! விரும்பும் அடியார்க்குக் கிட்டுதற்கு இனிய செல்வமே! நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவனே! செம்பொன், மரகதம், மாணிக்கம் போன்றவனே! திருமூலட்டானத்தில் உறைகின்றவனே! நீ வாழ்க.
2412 | உள்ளமா யுள்ளத்தே நின்றாய் போற்றி வள்ளலே போற்றி மணாளா போற்றி வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி தௌளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி |
6.032.8 |
என் உள்ளத்தில் நிலைத்திருப்பவனே உன்னை விரும்புவார் உள்ளத்தை என்றும் நீங்காது இருப்பவனே! வள்ளலே! மணவாளனே! இந்திரனுடைய தோளை நீக்கிய வலிமையுடையவனே! வெண்ணிறக் காளையை ஏறும் உலகியலிலிருந்து வேறு பட்டவனே! எல்லாருக்கும் மேம்பட்டவனே! தௌந்த நீரை உடைய கங்கையைச் சடையில் ஏற்றவனே! திருமூலட்டானத்தில் உள்ளவனே! நீ வாழ்க.
2413 | பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி |
6.032.9 |
பூக்கள் நிறைந்த சடைமுடியை உடையவனே! தூயவனே! தேவர்கள் துதிக்கும் பரம்பொருளே! தெய்வத்தன்மை நிரம்பிய தேவர்களுக்கும் தேவனே! திருமாலுக்குச் சக்கரம் அளித்தவனே! இம்மனிதப் பிறப்பெடுத்தும் வீணாகச் சாகாமல் பிறவிப் பிணியிலிருந்து காப்பாற்றி என்னை ஆண்டவனே! சங்கினை ஒத்த வெள்ளிய நீற்றினை அணிந்த பெருந்திறமை உடையவனே! காளை வடிவம் எழுதிய கொடியை உடையவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! நீ வாழ்க.
2414 | பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி அருமந்த தேவர்க் கரசே போற்றி சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி |
6.032.10 |
பிரமனுடைய ஐந்தாம் தலையை நீக்கிய பெரியோனே! பெண்ணுருவும், ஆணுருவுமாய் இருப்பவனே! நான்கு கைகளும் முக்கண்களும் உடையவனே! அமுதத்தை உண்ணும் தேவர்களுக்கு அரசே! ஒரு காலத்தில் இராவணனுடைய இருபது தோள்களையும் கால்களையும் தலைகளையும் நெரித்த திருவடியை உடையவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! நீ வாழ்க.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 30 | 31 | 32 | 33 | 34 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - போற்றி, போற்றிதிருமூலட், நின்பாதம், உடையவனே, திருமூலட்டானத்தில், உறைபவனே, மானாய், சூடியவனே, நான்கு, தலைவனே, திருவாரூர், போற்றும், நின்றாய், மேனியனே, திருவடி, விகிர்தா, சடையில், இருப்பவனே, நீக்கிய, அணிந்த, சடையாய், ஆகியவனே, சங்கரனே, வேதங்களும், திருமூலட்டானத்து, உண்ணும், அமுதமே, மைந்தா, திருச்சிற்றம்பலம், திருமுறை, தேவர்கள், மும்மதில்களை, ஒப்பற்ற, பார்வதி, நெற்றிக், அணிந்தவனே, திருமூலட்டானனே, மணவாளனே