முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.016.திருக்கொள்ளிக்காடு
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.016.திருக்கொள்ளிக்காடு
3.016.திருக்கொள்ளிக்காடு
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்.
தேவியார் - பஞ்சினுமெல்லடியம்மை.
2965 | நிணம்படு
சுடலையி னீறு பூசிநின் றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம் உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினும் குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே |
3.016.1 |
பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் சாம்பலைப் பூசிப் பேய்களோடு பெரிய கூத்து ஆடுகின்ற இறைவர், உலர்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலியேற்று உண்பர். ஆயினும் அப்பெருமான் உயர்ந்த குணம் உடையவராய்த் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
2966 | ஆற்றநல் லடியிணை அலர்கொண் டேத்துவான் சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள் மாற்றல னாகிமுன் னடர்த்து வந்தணை கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே |
3.016.2 |
நலம் தரும் இறைவனின் திருவடிகளை மலர்கொண்டு போற்றி வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாள் இறுதியை அறிந்து யாவராலும் தவிர்க்க முடியாதவனாகி மார்க்கண்டேயனை நெருங்கி வந்தடைந்த கூற்றுவனைக் காலால் உதைத்த இறைவர் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
2967 | அத்தகு
வானவர்க் காக மால்விடம் வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல் கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே |
3.016.3 |
தாம் வாழ்வான் வேண்டி வணங்கும் வானவர்களைக் காப்பதற்காகக் கொடிய விடத்தை உண்டு தம் கண்டத்தில் அடக்கிய சிவபெருமான், ஊமத்தம் பூவும், வன்னியும் அணிந்த சடைமுடியில் கொத்தாகக் கொன்றைமலர் சூடியவர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
2968 | பாவண
மேவுசொன் மாலை யிற்பல நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர் ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினும் கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே |
3.016.4 |
யாப்பிலக்கணம் பொருந்துமாறு சொல்லைத் தொடுக்கும் மாலை போன்ற பாடல்கள் பலவற்றை நாநயத்துடன் நவிலுமாறு செய்தவர் இறைவர். அவர் உயிர்களாகிய எங்களை அடிமை கொண்டு ஆள்பவராயினும் கோவண ஆடை உடையவர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
2969 | வாரணி
வனமுலை மங்கை யாளொடும் சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர் நாரணி சிலைதனால் நணுக லாரெயில் கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே |
3.016.5 |
கச்சணிந்த அழகிய முலையுடைய உமாதேவியோடு, சிறந்த அழகிய திருவுருவத்துடன் விளங்கும் சிவபெருமான், நாண் பூட்டிய மேருமலையை வில்லாகக் கொண்டு பகைவர்களாகிய முப்புர அசுரர்களின் மதில்களை அக்கினியை அம்பின் நுனியாகக் கொண்டு கொளுத்தியவர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
2970 | பஞ்சுதோய்
மெல்லடிப் பாவை யாளொடும் மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும் வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே |
3.016.6 |
செம்பஞ்சுக் குழம்பு தோய்ந்த மெல்லிய பாதத்தையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள கயிலைமலையில் மகிழ்ந்திருந்து நாள் தோறும் தம்மை வழிபடுபவர்கட்கு அருள் பாலிக்கும் இறைவர், கொடிய சினத்தோடும், கொம்போடும் வேகமாக வந்தடைந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
2971 | இறையுறு
வரிவளை யிசைகள் பாடிட அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர் சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக் குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே |
3.016.7 |
திருக்கையில் விளங்கும் அழகிய வளையல்களையுடைய உமாதேவி இசைபாட, திருவடிகளில் விளங்கும் வீரக்கழல்கள் ஒலிக்க, இறைவர் திருநடனம் புரிகின்றார். அப்பெருமான் பாய்கின்ற கங்கையைத் தடுத்துச் சடையில் தாங்கி, கலைகுறைந்த சந்திரனையும் தலையில் சூடி, திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
2972 | எடுத்தனன்
கயிலையை யியல்வ லியினால் அடர்த்தனர் திருவிர லால்அ லறிடப் படுத்தன ரென்றவன் பாடல் பாடலும் கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே |
3.016.8 |
தன்னுடைய வலிமையினால் கயிலைமலையை அப்புறப்படுத்த எடுத்த இராவணனை, தம் காற்பெரு விரலையூன்றி அம்மலையின்கீழ் அடர்த்து அவறும்படி செய்ய, இராவணன் தவறு ணர்ந்து, தன்னை வருத்திய சிவனைப் போற்றிச் சாமகானம் பாட, இறைவர் இரங்கி வீரவாளை அருளினார். அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
2973 | தேடினா
ரயன்முடி மாலுஞ் சேவடி நாடினா ரவரென்று நணுக கிற்றிலர் பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும் கூடினார்க் கருள் செய்வர் கொள்ளிக் காடரே |
3.016.9 |
பிரமன் திருமுடியினையும், திருமால் திருவடியையும் தேட, அவர்களால் எப்பொழுதும் அணுகமுடியாதவராய் விளங்கும் சிவபெருமான், பக்தர்கள் மனம் ஒன்றி அன்பால் அகம் குழைந்து பாட அருள்செய்வார். அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
2974 | நாடிநின்
றறிவில்நா ணிலிகள் சாக்கியர் ஓடிமுன் னோதிய வுரைகள் மெய்யல பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும் கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே |
3.016.10 |
இறையுண்மையை உணரும் அறிவில்லாத நாணமற்ற சமணரும், புத்தர்களும் முனைந்து சொல்லும் உரைகள் மெய்யானவை அல்ல. அவர்களைச் சாராதுவிட்டு, நான்கு வேதங்களை அருளிய சிவபெருமான், நன்கு பழகிய உமாதேவியோடு திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைக் கண்டு தரிசித்து உய்தி அடையுங்கள்.
2975 | நற்றவர் காழியுண் ஞானசம் பந்தன் குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச் சொற்றமி ழின்னிசை மாலை சோர்வின்றிக் கற்றவர் கழலடி காண வல்லரே |
3.016.11 |
நல்தவத்தோர் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன், குற்றமற்ற பெரும்புகழுடைய திருக்கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை, அழகு தமிழில், இன்னிசையோடு பாடிய இப்பாமாலையைத் தளராது கற்று ஓத வல்லவர்கள் அப்பெருமானின் திருவடிகளைக் காணும் பேறு பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கொள்ளிக்காடு - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருக்கொள்ளிக்காடு, கொள்ளிக், என்னும், திருத்தலத்தில், வீற்றிருந்தருளுகின்றார், இறைவர், அப்பெருமான், சிவபெருமான், கொண்டு, விளங்கும், வீற்றிருந்தருளும், அப்பெருமானார், யாளொடும், உமாதேவியோடு, வன்னியும், ராயினும், திருச்சிற்றம்பலம், திருமுறை, வந்தடைந்த