முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.015.திருவெண்காடு
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.015.திருவெண்காடு
3.015.திருவெண்காடு
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்.
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
2954 | மந்திர
மறையவை வான வரொடும் இந்திரன் வழிபட நின்ற எம்மிறை வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய அந்தமு முதலுடை யடிக ளல்லரே |
3.015.1 |
பஞ்சாக்கர மந்திரத்தைத் தனி நடுப்பகுதியில் கொண்ட வேதங்களும், தேவர்களும், இந்திரனும் வழிபட வீற்றிருக்கின்ற எங்கள் இறைவனாய், வெந்த வெண்ணீற்றினைத் திருமேனியில் பூசித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் அந்தமும், ஆதியுமாகிய அடிகள் அல்லரோ?
2955 | படையுடை
மழுவினர் பாய்புலித் தோலின் உடைவிரி கோவண முகந்த கொள்கையர் விடையுடைக் கொடியர்வெண் காடு மேவிய சடையிடைப் புனல்வைத்த சதுர ரல்லரே |
3.015.2 |
இறைவர் மழுவைப் படையாக உடையவர். பாய்கின்ற புலித்தோலை ஆடையாக உடையவர். கோவணத்தை உகந்து அணிந்தவர். இடபவடிவம் பொறிக்கப்பட்ட கொடியுடையவர். திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் சடையிலே கங்கையைத் தாங்கிய திறமையானவர் அல்லரோ?
2956 | பாலொடு
நெய்தயிர் பலவு மாடுவர் தோலொடு நூலிழை துதைந்த மார்பினர் மேலவர் பரவுவெண் காடு மேவிய ஆலம தமர்ந்தவெம் மடிக ளல்லரே |
3.015.3 |
இறைவர் பாலொடு, நெய், தயிர் மறற்றும் பலவற்றாலும் திருமுழுக்கு ஆட்டப்படுபவர். யானைத்தோலைப் போர்வையாகவும், புலித்தோலை ஆடையாகவும் அணிந்தவர். முப்புரி நூலணிந்த மார்பினர், சிவஞானிகள் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கல்லால மரத்தின்கீழ் வீற்றிருந்து அறம் உரைத்த எம் தலைவர் அல்லரோ?
2957 | ஞாழலுஞ்
செருந்தியு நறுமலர்ப் புன்னையுந் தாழைவெண் குருகயல் தயங்கு கானலில் வேழம துரித்தவெண் காடு மேவிய யாழின திசையுடை யிறைவ ரல்லரே |
3.015.4 |
புலிநகக் கொன்றையும், செருந்தியும், நறுமணமிக்க புன்னை மலர்களும், தாழையும், குருக்கத்தியும் விளங்கும் கடற்கரைச் சோலையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில், யானையின் தோலையுரித்த ஆற்றல் உடையவராயும், யாழிசை போன்ற இனிமை உடையவராயும் உள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் அல்லரோ?
2958 | பூதங்கள்
பலவுடைப் புனிதர் புண்ணியர் ஏதங்கள் பலவிடர் தீர்க்கு மெம்மிறை வேதங்கண் முதல்வர்வெண் காடு மேவிய பாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே |
3.015.5 |
எம் இறைவர், பூதகணங்கள் பல உடைய புனிதர். புண்ணிய வடிவினர். தம்மை வழிபடுபவர்களின் குற்றங்களையும், துன்பங்களையும் தீர்த்தருளுபவர். அவர் வேதங்களில் கூறப்படும் முதல்வர். திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர்தம் பாதங்கள் அனைவராலும் தொழப்படும் நிலையில் விளங்கும் பரம்பொருள் அல்லவோ?
2959 | மண்ணவர்
விண்ணவர் வணங்க வைகலும் எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை விண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவிய அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே |
3.015.6 |
மண்ணுலகத்தோரும், விண்ணுலகத்தோரும், மற்றுமுள்ள தேவர்களும் தினந்தோறும் எங்கள் இறைவனை வழிபட்டுப் போற்றுகின்றனர். வானளாவிய சோலைகளையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப் பெருமானின் திருவடிகளை வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை.
2960 | நயந்தவர்க்
கருள்பல நல்கி யிந்திரன் கயந்திரம் வழிபடநின்ற கண்ணுதல் வியந்தவர் பரவுவெண் காடுமேவிய பயந்தரு மழுவுடைப் பரம ரல்லரே |
3.015.7 |
விரும்பி வழிபடும் அடியவர்கட்கு வேண்டுவன வேண்டியவாறு அருளி, இந்திரனின் வெள்ளையானை வழிபட அதற்கும் அருள்புரிந்தவர் நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் ஆவார். அனைவரும் அந்த இன்னருளை வியந்து போற்றும்படி திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பயந்தரு மழுப்படையுடைய பரமர் அல்லரோ?
2961 | மலையுட
னெடுத்தவல் லரக்கன் நீள்முடி தலையுட னெரித்தருள் செய்த சங்கரர் விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய அலையுடைப் புனல்வைத்த அடிகள் அல்லரே |
3.015.8 |
கயிலைமலையை எடுத்த கொடிய அரக்கனாகிய இராவணனின் நீண்டமுடி, தலை, உடல் ஆகியவற்றை நெரித்து, பின் அவன் தவறுணர்ந்து சாமகானம் பாட, அருள் செய்த சங்கரர், மதிப்புடைய திருநீற்றினைப் பூசியவர். அலையுடைய கங்கையைச் சடையில் தாங்கித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமான் அவர் அல்லரோ?
2962 | ஏடவிழ்
நறுமலர் அயனு மாலுமாய்த் தேடவுந் தெரிந்தவர் தேர கிற்கிலார் வேடம துடையவெண் காடு மேவிய ஆடலை யமர்ந்தஎம் அடிகள் அல்லரே |
3.015.9 |
பூவிதழ்களுடைய நறுமணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் திருமுடியையும், திருஅடியையும் காணத்தேடியும் காண்பதற்கு அரியவராய் நெருப்புமலையாய் விளங்கியவரும், பலபல வேடம் கொள்பவருமான இறைவன் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து திருநடனம் புரிதலை விரும்பிய அடிகள் அல்லரோ?
2963 | போதியர்
பிண்டியர் பொருத்தம் இல்லிகள் நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார் வேதியர் பரவுவெண் காடு மேவிய ஆதியை யடிதொழ அல்லல் இல்லையே |
3.015.10 |
புத்தரும், சமணரும் பொருத்தம் இல்லாதவராய், இறையுண்மையை உணர்த்தும் நீதிகளை எடுத்துரைத்தும், நல்வாழ்வு இல்லாமையால் அவற்றை நினைத்துப் பார்த்தலும் செய்யாதவர் ஆயினர். எனவே அவர்களைச் சாராது, வேதம் ஓதும் அந்தணர்கள் பரவித் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அனைத்துலகுக்கும் முதற்பொருளாகிய சிவபெருமான் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லையாம்.
2964 | நல்லவர்
புகலியுள் ஞான சம்பந்தன் செல்வன்எம் சிவனுறை திருவெண் காட்டின்மேற் சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர் அல்லலோ டருவினை அறுதல் ஆணையே |
3.015.11 |
பசுபுண்ணியம், பதிபுண்ணியம் செய்த நல்லவர்கள் வசிக்கின்ற திருப்புகலியுள் அவதரித்த ஞானசம்பந்தன், செல்வனாகிய எம் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவெண்காட்டின் மேல் பாடிய அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் பக்தியோடு ஓதவல்லவர்களுடைய துன்பங்களோடு அவற்றிற்குக் காரணமான அருவினையும் அறும் என்பது நமது ஆணையாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவெண்காடு - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவெண்காடு, திருத்தலத்தில், என்னும், சிவபெருமான், அல்லரோ, அடிகள், ரல்லரே, வீற்றிருந்தருளும், வீற்றிருந்தருளுகின்ற, இறைவர், பரவுவெண், வீற்றிருந்து, பாதங்கள், பொருத்தம், புனிதர், உடையவராயும், விளங்கும், அல்லல், இல்லையே, துன்பம், அல்லரே, கிற்கிலார், சங்கரர், பயந்தரு, புலித்தோலை, ளல்லரே, தேவர்களும், எம்மிறை, திருச்சிற்றம்பலம், திருமுறை, வீற்றிருக்கின்ற, எங்கள், பாலொடு, மார்பினர், அணிந்தவர், உடையவர், புனல்வைத்த, துதிக்கின்ற