முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.017.திருவிசயமங்கை
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.017.திருவிசயமங்கை
3.017.திருவிசயமங்கை
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - விசயநாதேசுவரர்.
தேவியார் - மங்கைநாயகியம்மை.
2976 | மருவமர்
குழலுமை பங்கர் வார்சடை அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாம் குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள் விரவிய பொழிலணி விசய மங்கையே |
3.017.1 |
நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமா தேவியை ஒருபாகத்தில் கொண்ட, நீண்ட சடையில் பாம்பணிந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில், குரவம், சுரபுன்னை, கோங்கு, வேங்கை ஆகிய மரங்கள் நிறைந்து விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவிசயமங்கை ஆகும்.
2977 | கீதமுன்
னிசைதரக் கிளரும் வீணையர் பூதமுன் னியல்புடைப் புனிதர் பொன்னகர் கோதனம் வழிபடக் குலவு நான்மறை வேதியர் தொழுதெழு விசய மங்கையே |
3.017.2 |
கீதங்களை முன்னே இசைக்க விளங்கும் வீணையினை உடையவரும், பூதகணங்கள் சூழ விளங்கும் புனிதரான சிவபெருமானின் பொன்னகர் என்பது, இடபதேவர் வழிபட விளங்குவதும், நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள் தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும். கோதனம் வழிபட - பசுக்கூட்டங்கள் வழிபட என்றும் பொருள் உரைப்பர். ஒரு காலத்தில் இவ்வூர் கோவந்த புத்தூர் என வழங்கப்பட்டதாகக் கூறுவர்.
2978 | அக்கர
வரையினர் அரிவை பாகமாத் தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர் தக்கநல் வானவர் தலைவர் நாள்தொறும் மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே |
3.017.3 |
உருத்திராக்கத்தையும், பாம்பையும் அணிந்த இடுப்பையுடையவரும், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவரும், சிறந்த நல் இடபத்தை வாகனமாக உடைய சோதி வடிவான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமை வாய்ந்த நகர், தகுதியுடைய நல்ல தேவர்களும், அவர்களுடைய தலைவர்களும் நாள்தோறும் வணங்கிப் போற்றுகின்ற திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும். அக்கு - உருத்திராக்கம். இதனை அக்கு மாலை கொடங்கையி வெண்ணுவார் (தி.3 ப.307 பா.3) என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கால் அறிக.
2979 | தொடைமலி
யிதழியுந் துன்னெ ருக்கொடு புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர் படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள் விடைமலி கொடியணல் விசய மங்கையே |
3.017.4 |
கொன்றை மாலையும், நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட எருக்க மாலையும் பக்கங்களிலே விளங்கும் சடைமுடியுடைய அடிகளாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் அழகிய நகரம், மழுவை ஆயுதமாக உடையவரும், பசிய கண்களையுடைய வலிமையுடைய வெண்ணிற எருதுவை கொடியாக உடைய சிவபெருமானின் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
2980 | தோடமர்
காதினன் துதைந்த நீற்றினன் ஏடமர் கோதையோ டினித மர்விடம் காடமர் மாகரி கதறப் போர்த்ததோர் வேடம துடையணல் விசய மங்கையே |
3.017.5 |
இறைவன் இடப்பாகத்தில் தோடணிந்த காதினன். நன்கு குழையத் திருநீறு பூசிய மேனியன். காட்டிலே வசிக்கின்ற பெரிய யானை கதறும்படி அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட ஒப்பற்ற திருக்கோலத்தையுடைய அண்ணலான சிவபெருமான், பூவிதழ்களை அணிந்த கூந்தலையுடைய உமாதேவியொடு இனிது வீற்றிருக்கும் இடம் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
2981 | மைப்புரை
கண்ணுமை பங்கன் வண்டழல் ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர் அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர் மெய்ப்பட வருள்புரி விசய மங்கையே |
3.017.6 |
நீலோற்ப மலர் போன்ற கண்ணுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டவன் இறைவன். சிறந்த நெருப்புப் போன்ற திருமேனியுடையவன். எம்மை ஆளும் அவரின் நகர் நீரும், மலரும் கொண்டு தேவர்கள் உண்மையாக வழிபட அவர்களுக்கு அருள்புரிந்த திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும். பூவும், நீரும் கொண்டு அன்புடன் வழிபடுபவர்களின் பூசையை ஏற்று இறைவன் அருள் செய்வான் என்று கூறுவது அன்பில்லாதவர்களின் பூவையும், நீரையும் இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதைப் புலப்படுத்தும். பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர்தமை நாணியே (தி.5 ப.90 பா.9) என்ற திருநாவுக்கரசரின் திருவாக்கை இங்கு நினைவுகூர்க.
2982 | இரும்பொனின்
மலைவில்லின் எரிச ரத்தினால் வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர் சுரும்பமர் கொன்றையும் தூய மத்தமும் விரும்பிய சடையணல் விசய மங்கையே |
3.017.7 |
பெரிய மேருமலையாகிய வில்லினால் எய்யப்பட்ட நெருப்பாகிய அம்பினால் திரிபுரங்களைப் பொடி செய்த பெரும் வீரமுடையவன் இறைவன். வண்டுகள் அமர்கின்ற கொன்றை மலர் மாலையையும், தூய ஊமத்தை மலரையும் விரும்பி அணிந்த சடைமுடியுடைய தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும்.
2983 | உளங்கைய
இருபதோ டொருபதுங் கொடாங் களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத் தளர்ந்துட னெரிதர வடர்த்த தன்மையன் விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே |
3.017.8 |
தன்னுடைய வழியில் இம்மலை தடுக்கின்றது என்று மனம் கசந்து, இருபது தோள்களும், பத்துத் தலைகளும் கொண்டதால் தான் வலிமையுடையவன் என்று எண்ணி, எடுத்தற்கு அரிய கயிலை மலையினைப் பெயர்த்தெடுக்க முயன்ற அரக்கனான இராவணன் தளர்ந்து உடல் நெரியும் படி அடர்த்த தன்மையுடைய சிவபெருமான், ஒளிவீசும் ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும்.
2984 | மண்ணினை
யுண்டவன் மலரின் மேலுறை அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர் தண்ணறுஞ் சாந்தமும் பூவு நீர்கொடு விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே |
3.017.9 |
மண்ணினை உண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அளத்தற்கரிய தலைவனான சிவபெருமானது ஊர், குளிர்ச்சி பொருந்திய நறுமணம் கமழும் சந்தனமும், பூவும் நீரும் கொண்டு விண்ணவர் தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
2985 | கஞ்சியுங்
கவளமுண் கவணர் கட்டுரை நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார் செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர் விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே |
3.017.10 |
கஞ்சி உண்ணும் புத்தர்களும், கவனமாக உணவு உண்ணும் சமணர்களும் உரைக்கின்ற கருத்துக்கள் நஞ்சினும் கொடியனவாகும். நம்மவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளார். சிவந்த சடைமுடியுடைய தேவாதி தேவனின் நல்ல நகரம் வித்தியாதரர்கள் தொழுது வணங்கும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
2986 | விண்ணவர்
தொழுதெழு விசய மங்கையை நண்ணிய புகலியுள் ஞானசம் பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே |
3.017.11 |
விண்ணவர்கள் தொழுது வழிபடும் திருவிசயமங்கை என்னும் திருத்தலத்தை அடைந்து, திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் சிவபுண்ணியச் செல்வர்களாவர். அவர்கள் சிவகதி அடைவது உறுதியாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவிசயமங்கை - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவிசயமங்கை, மங்கையே, என்னும், சிவபெருமான், தொழுதெழு, திருத்தலமாகும், இறைவன், நீரும், விளங்கும், தொழுது, திருத்தலம், அணிந்த, சடைமுடியுடைய, கொண்டு, பொன்னகர், விண்ணவர், பூவும், சிவகதி, மாலையும், கொன்றை, உண்ணும், மண்ணினை, தலைவனான, காதினன், வீற்றிருந்தருளுவது, வானவர், நறுமணம், கமழும், கோங்கு, சுரபுன்னை, திருமுறை, திருச்சிற்றம்பலம், கூந்தலையுடைய, கோதனம், உமாதேவியை, சிறந்த, மிக்கவர், போற்றும், உடையவரும், சிவபெருமானின், வீற்றிருந்தருளும்