முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.014.திருப்பைஞ்ஞீலி
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.014.திருப்பைஞ்ஞீலி
3.014.திருப்பைஞ்ஞீலி
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர்.
தேவியார் - விசாலாட்சியம்மை.
2943 | ஆரிடம்
பாடி ரடிகள் காடலால் ஓரிடங் குறைவில ருடையர் கோவணம் நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும் பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே |
3.014.1 |
சிவபெருமான் இருடிகளுக்காக வேதத்தை அருளிச் செய்தவர். வசிப்பது சுடுகாடானாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர். அணிவது கோவண ஆடை. சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர். இடபவாகனத்தில் ஏறியவர். தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யத் திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்தருளுகின்றார்.
2944 | மருவிலார்
திரிபுர மெரிய மால்வரை பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான் உருவிலான் பெருமையை யுளங்கொ ளாதவத் திருவிலா ரவர்களைத் தெருட்ட லாகுமே |
3.014.2 |
பகையசுரர்களின் முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு மேரு என்னும் பெருமையுடைய மலையினை வில்லாக வளைத்த சிவபெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். இத்தகைய வடிவ முடையவன் அவன் என்று வரையறை செய்து உணர்த்த இயலாத அப்பெருமானுடைய பெருமையை உணராதவர் அவனருளைப் பெறாதவர். அவர்களின் அறிவைத் தௌவித்தல் இயலுமா?
2945 | அஞ்சுரும் பணிமல ரமுத மாந்தித்தேன் பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான் வெஞ்சுரந் தனிலுமை வெருவ வந்ததோர் குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே |
3.014.3 |
அழகிய வண்டு மலரை அடைந்து தேனைக் குடித்துப் பஞ்சுரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன், வெப்பம் மிகுந்த காட்டில் உமாதேவி அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன்.
2946 | கோடல்கள்
புறவணி கொல்லை முல்லைமேல் பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார் பேடல ராணலர் பெண்ணு மல்லதோர் ஆடலை யுகந்தவெம் மடிக ளல்லரே |
3.014.4 |
காந்தள் மலர்களிலும், முல்லை நிலத்திலுள்ள காடுகளிலுமுள்ள முல்லை மலர்களின் மீதும் அமர்ந்திருக்கும் வண்டுகள் செய்யும் ரீங்காரம் பண்ணிசைபோல் ஒலிக்க, திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் அலியல்லர். ஆணுமல்லர். பெண்ணுமல்லர். திருநடனம் புரிவதில் விருப்பமுடைய அப்பெருமானார் எங்கள் தலைவர் ஆவார்.
2947 | விழியிலா
நகுதலை விளங்கி ளம்பிறை சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான் பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான் கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே |
3.014.5 |
விழியிலாத பற்களோடு கூடிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி, இளம்பிறையையும், கங்கையையும் சடையில் தாங்கியுள்ளவன் சிவபெருமான். பழியிலாத அடியவர்கள் போற்றிப் பாடத் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் தன்னை வணங்குபவர்களின் செல்வ மில்லாத வறுமைநிலையைப் போக்குவான்.
2948 | விடையுடைக்
கொடிவல னேந்தி வெண்மழுப் படையுடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவலான் துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச் சடையிடைப் புனல்வைத்த சதுர னல்லனே |
3.014.6 |
இடபம் பொறித்த கொடியை வலக்கையில் ஏந்தி, வெண்மழுப்படையையுடைய கடவுள் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளான். உடுக்கை போன்ற குறுகிய இடையில் மேகலை என்னும் ஆபரணம் அணிந்து, சீலையால் மறைத்த அல்குலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு, சடையிலே கங்கையைத் தரித்த சதுரன் ஆவான்.
2949 | தூயவன்
தூயவெண் ணீறு மேனிமேல் பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா மேயவன் வேய்புரை தோளி பாகமா ஏயவ னெனைச்செயுந் தன்மை யென்கொலோ |
3.014.7 |
இறைவன் தூயஉடம்பினன். தூய்மையான திருநீற்றைத் தன் திருமேனி முழுவதும் பரவப் பூசியவன். திருப் பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுபவன். மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன். அப்பெருமான் சீவனான என்னைச் சிவனாகச் செய்யும் பண்புதான் என்னே!
2950 | தொத்தின
தோள்முடி யுடைய வன்றலை பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான் முத்தினை முறுவல்செய் தாளொர் பாகமாப் பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே |
3.014.8 |
கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான். அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றான். முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியை ஒருபாகமாக அணைத்துக் கொண்டவன். அப் பெருமானின் திருவடிகளைப் பொருந்தி வாழ்வீர்களாக.
2951 | நீருடைப்
போதுறை வானு மாலுமாய்ச் சீருடைக் கழலடி சென்னி காண்கிலர் பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே |
3.014.9 |
நீர்நிலைகளில் விளங்குகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், திருமாலும் திருமுடியையும், சிறப்புடைய கழலணிந்த திருவடிகளையும் தேடியும் காணாது நிற்க, இவ்வுலகை உடைமைப் பொருளாகக் கொண்ட இறைவன் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் கொன்றைமாலை அணிந்த தலைவனாய் வீற்றிருந்தருளுகின்றான்.
2952 | பீலியார்
பெருமையும் பிடகர் நூன்மையும் சாலியா தவர்களைச் சாதி யாததோர் கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ் ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே |
3.014.10 |
மயிற்பீலி யேந்திப் பெருமை கொள்ளும் சமணர்களும், திரிபிடகம் என்னும் சமயநூலுடைய புத்தர்களும், தங்கள் நூற்பொருளோடு பொருந்தாதவர்களை வாதிட்டு வெல்லும் வல்லமையில்லாதவர்கள். எனவே, அவர்களின் உரைகளைக் கேளாது, வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்து அம்பினைத் தொடுத்து எய்து முப்புரங்களை எரித்தவனும், திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற வனுமான சிவபெருமானின் கழலணிந்த திருவடிகளை நினைந்து வணங்கி வாழ்வீர்களாக!
2953 | கண்புனல்
விளைவயற் காழிக் கற்பகம் நண்புண ரருமறை ஞான சம்பந்தன் பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார் உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே |
3.014.11 |
தண்ணீர் பாய்கின்ற வயல்வளமுடைய சீகாழியில், கற்பகமரம் போன்று அன்பினால் அனைத்துயிர்கட்டும் நலம் சேர்க்கும் அருமறைவல்ல ஞானசம்பந்தன், நற்பண்புடையவர் வணங்கும் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனைப் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், வினைப்பயன்களை நுகர்வதற்காகப் பிறந்துள்ள இப்பூவுலகில் ஓங்கி வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பைஞ்ஞீலி - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னும், திருப்பைஞ்ஞீலி, திருத்தலத்தில், மேவலான், இறைவன், அப்பெருமான், கொண்டவன், வீற்றிருந்தருளுகின்றான், சிவபெருமான், திருத்தலத்திலுள்ள, நினைந்து, கடவுள்பைஞ், விரும்பி, பரவுபைஞ், உமாதேவியை, வாழ்வீர்களாக, வாழ்மினே, பொருந்தி, தலைவர், கழலணிந்த, செய்யும், வில்லாக, பயில்பைஞ், லாகுமே, பெருமையை, திருச்சிற்றம்பலம், அவர்களின், கங்கையைத், முல்லை, திருமுறை, பஞ்சுரம், வீற்றிருந்தருளும்