தியாக பூமி - 3.15. சாவடிக் குப்பம்
நல்லானின் மச்சான், சம்பு சாஸ்திரியைப் பார்த்த அன்று இரவு வெகு உற்சாகமாகச் சாவடிக் குப்பத்தில் தன் வீட்டுக்குப் போனான். அந்தச் செய்தியை நல்லானுக்குச் சொன்னால் அவன் ரொம்பவும் சந்தோஷமடைவானென்று அவனுக்குத் தெரியும்.
"இன்னிக்கு நான் ஒத்தரைப் பார்த்தேன்! அது யாருன்னு சொல்லு பார்க்கலாம்" என்றான் நல்லானிடம்.
"நீ யாரைப் பார்த்தா என்ன, பாக்காட்டி என்ன? எனக்குச் சாஸ்திரி ஐயாவைப் பார்க்காமே ஒரு நிமிஷம் ஒரு யுகமாயிருக்கு. நெடுங்கரைக்கு ஒரு நடை போய் அவங்களைப் பார்த்துட்டு வந்தாத்தான் என் மனசு சமாதானம் ஆகும். இல்லாட்டி, நான் செத்துப் போனேன்னா என் நெஞ்சு கூட வேவாது" என்றான்.
"அப்படியானா, நெடுங்கரைக்குப் போயிட்டு வர்ற பணத்தை எங்கிட்டக் கொடு" என்றான் சின்னசாமி.
"என்னத்திற்காக உங்கிட்டக் கொடுக்கிறது?"
"கொடுத்தேன்னா, சாஸ்திரி ஐயாவை நான் இவ்விடத்துக்கே வரப் பண்றேன்."
"என்னடா ஒளற்றே!" என்று நல்லான் கேட்டான்.
"நான் ஒண்ணும் ஒளறலை. சாஸ்திரி ஐயா இப்போது நெடுங்கரையில் இல்லை. இந்த ஊரிலேதான் இருக்காரு. இன்னிக்கு அவரைத்தான் பார்த்தேன்" என்றான்.
நல்லான் தூக்கி வாரிப் போட்டுக்கொண்டு எழுந்திருந்தான். "அடே இந்த வெஷயத்திலே மட்டும் எங்கிட்ட விளையாடாதே! நெஜத்தை நடந்தது நடந்தபடி சொல்லு!" என்றான்.
சின்னசாமி விவரமாகச் சொன்னான். அவன் எதிர் பார்த்தபடியே நல்லானுக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. கடைசியில் "போவட்டும்; இந்த மட்டும் ஐயாவைப் பார்த்துப் பேசறத்துக்கு ஒனக்குத் தோணித்தே; அது நல்ல காரியந்தான். ஐயா எவ்விடத்திலே இறங்கியிருகாருன்னு கேட்டுண்டாயா?" என்றான்.
"அது கேக்க மறந்துட்டேன்; ஆனா, ஐயாவைத்தான் நான் சாவடிக் குப்பத்துக்குக் கட்டாயம் வரணும்னு சொல்லியிருக்கேனே?"
"அட போடா, முட்டாள்! நீ சொன்னதுக்காக ஐயா வந்துடுவாங்களா? அவங்களுக்கு ஏற்கெனவே என் மேலே கோபமாச்சேடா, அவங்க பேச்சைத் தட்டிண்டு நான் பட்டணத்துக்கு வந்ததுக்காக? என்னைத் தேடிக்கிட்டு எங்கேடா வரப்போறாரு?" என்றான் நல்லான்.
ஆகவே, முடிவில் சின்னசாமிக்கு அவன் சாஸ்திரியாரைப் பார்த்து வந்ததன் பலனாக வசவுதான் கிடைத்தது. நல்லானுடன் அவனுடைய மனைவியும் சேர்ந்து கொண்டு தன் தம்பியைத் திட்டினாள். "மறந்துட்டேன், மறந்துட்டேங்கறயே வெக்கமில்லாமே? சோறு திங்க மறப்பயா?" என்று அவள் கேட்டாள்.
பிறகு இரண்டு நாள் நல்லானும் அவன் மச்சானுமாகச் சேர்ந்து, அந்தப் பக்கத்திலுள்ள பிராம்மணாள் ஹோட்டலில் எல்லாம் போய், "நெடுங்கரை சம்பு சாஸ்திரியார் இருக்காரா?" என்று கேட்டார்கள். "நெடுங்கரையையும் காணும், சம்பு சாஸ்திரியையும் காணும்" என்ற பதில் தான் வந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
3.15. சாவடிக் குப்பம் - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்றான், சாவடிக், நல்லான், சாஸ்திரி, மட்டும், மறந்துட்டேன், சேர்ந்து, காணும், நல்லானுக்குச், சின்னசாமி, பார்த்தேன், இன்னிக்கு, ஐயாவைப், சொல்லு