தியாக பூமி - 3.2. சதியாலோசனை
ராஜாராமய்யரும் அவருடைய நண்பர்களும் நடத்திய ஆவி உலகச் சோதனை அகால மரணத்துக்கு உள்ளான விஷயத்தை நாம் துயரத்துடன் தெரிவிக்க வேண்டியதாயிருக்கிறது. மேஜை ஒரு முழ உயரம் கிளம்பியதற்கு மேல் அவர்களுடைய சோதனையில் வேறு எவ்விதப் பலனும் ஏற்படவில்லை. ஆகவே, எல்லோரும் ஒருவாறு சலிப்பு அடையும் தருணத்தில், இங்கிலாந்திலிருந்து மிஸ் மேரியா ஹாரிஸன் என்னும் பெண்மணி வந்து சேர்ந்தாள். இவள் ஒரு பிரசித்தி பெற்ற 'மீடியம்'; அதாவது, ஆவி உலகவாசிகளைத் தன்னுடைய தேகத்தின் மீது ஆவிர்ப்பவிக்கச் செய்யக்கூடிய சக்தி வாய்ந்தவள். ராஜாராமய்யர் - பீடர்ஸன் சங்கத்தார் இந்த 'மீடியம்' அம்மாளுக்கு வரவேற்பு அளித்தார்கள். இவர்களுடைய ஆராய்ச்சியில் அந்த அம்மாள் மிகவும் சிரத்தை காட்டி, தானே அவர்களுக்கு உதவி செய்வதாகவும் சொன்னாள்.
பலநாள் முயற்சிக்குப் பிறகு ஒரு நாளைக்கு அந்த அம்மாள் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அதாவது, அவள் பேரில் ஆவிகள் ஆவிர்ப்பவித்து, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலாயின. ஆனால், பதில் வாயினால் சொல்லவில்லை; 'மீடிய'த்தின் கையைப் பிடித்துப் பதில்களை எழுதிக் காட்டின.
முதலில், மிஸ்ஸஸ் பீடர்ஸனுடைய ஆவி ஆவிர்ப்பவமாயிற்று. பீடர்ஸன் துரை பூலோகத்தில் தங்களுடைய வாழ்க்கையைப்பற்றிக் கேட்டதற்கு, "அதெல்லாம் எனக்கு மறந்து போய்விட்டது; இந்த உலகத்துக்கு வந்த பிறகு பூலோக விஷயங்கள் ஒன்றும் ஞாபகம் இருப்பதில்லை" என்று ஆவி சொல்லிற்று. பிறகு, தான் இருக்கும் உலகம் அற்புதமான அழகு வாய்ந்தது என்றும், எங்கே பார்த்தாலும் புஷ்பக் காட்சியாயிருக்கிறது என்றும், வானவில்லின் வர்ணங்கள் எங்கும் காணப்படுகின்றன என்றும், எப்போதும் சுகந்தம் வீசுகிறது என்றும், இப்படிப்பட்ட ஆச்சரிய உலகத்துக்குப் பீடர்ஸன் துரையும் சீக்கிரத்தில் வந்து சேரவேண்டுமென்றும் எழுதித் தெரிவித்தது.
இந்த எழுத்து ஒருவாறு தம் மனைவியின் கையெழுத்தைப் போல் இருக்கிறதென்று பீடர்ஸன் துரை சொன்னார்.
பிறகு, ராஜாராமய்யருடைய தகப்பனார், 'மீடியம்' அம்மாளின் மீது ஆவிர்ப்பவித்தார். அவர் எழுதிய கையெழுத்து மிஸ்ஸஸ் பீடர்ஸனின் எழுத்துக்கு முற்றும் மாறாக, ஆண்பிள்ளைக் கையெழுத்தைப் போல் இருந்தது. இதைப் பார்த்ததுமே அங்கே கூடியிருந்தவர்களெல்லாம் அதிசயப்பட்டுப் போனார்கள். ஆனால் ராஜாராமய்யருக்கு அதைவிட ஆச்சரியம் அளித்தது என்னவென்றால், தம்முடைய தகப்பனார் ஓர் அட்சரங்கூட இங்கிலீஷ் தெரியாதவராயிருந்தும், இப்போது இவ்வளவு சுத்தமான் இங்கிலீஷ் எப்படி எழுதுகிறார் என்பது தான். மேலும் வைத்தீசுவரய்யர் தாம் வசிக்கும் உலகத்தைப் பற்றி வர்ணித்ததும், மிஸ்ஸஸ் பீடர்ஸன் வர்ணித்ததும், ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. மேலும் அவர், "இந்த உலகத்தில் சாதி, மத வித்தியாசம் ஒன்றும் கிடையாது. கிறிஸ்தவர்களும், ஹிந்துக்களும் ஒன்றுதான். எல்லாரும் பர மண்டலத்திலுள்ள ஏசு பிதாவைத்தான் வணங்குகிறோம்" என்றார். தம் தகப்பனார் உயிர் வாழ்ந்த போது, அவர் கிறிஸ்தவர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்தார் என்பது ராஜாராமய்யருக்கு ஞாபகம் வந்தபோது, பரலோகத்தில் அவருடைய மாறுதல் ஆச்சரியமாய்த்தான் இருந்தது. ஆனால் இது எல்லாவற்றையும் விட, அவரை அதிசயத்தினால் திகைக்கப் பண்ணிய விஷயம் வேறொன்று: "வருஷாவருஷம் நான் தங்களை உத்தேசித்து சிராத்தம் பண்ணுகிறேனே, அன்று தாங்கள் பூலோகத்துக்கு வருவதுண்டா?" என்று ராஜாராமய்யர் கேட்டதற்கு, வைத்தீசுவரய்யரின் ஆவி எழுதிய பதிலாவது:-"ஆமாம்; வருஷம் ஒரு தடவை நான் என்னுடைய கல்லறைக்கு வருகிறேன். அங்கே நீ போட்டிருக்கும் புஷ்பங்களின் சுகந்தத்தை உட்கொண்டு விட்டுத் திரும்புகிறேன்!"
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
3.2. சதியாலோசனை - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பீடர்ஸன், என்றும், இருந்தது, மீடியம், தகப்பனார், மிஸ்ஸஸ், எழுதிய, கையெழுத்தைப், மேலும், என்பது, இங்கிலீஷ், வர்ணித்ததும், ராஜாராமய்யருக்கு, ஒன்றும், தன்னுடைய, அதாவது, ஒருவாறு, ராஜாராமய்யர், அம்மாள், அவருடைய, கேட்டதற்கு, ஞாபகம்