முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அமரர் கல்கியின் நூல்கள் » தியாக பூமி » 3.14. சாவித்திரியின் சங்கல்பம்
தியாக பூமி - 3.14. சாவித்திரியின் சங்கல்பம்
ஆஸ்பத்திரியில் சாவித்திரிக்கு நன்றாய்ச் சுயஞாபகம் வந்ததிலிருந்து, அவள் தான் ஏற்கெனவே பட்ட கஷ்டங்களைப்பற்றி எண்ணியதோடு வருங்காலத்தைப் பற்றியும் எண்ணத் தொடங்கினாள். இந்தத் துர்ப்பாக்கியவதியின் தலையில் பகவான் ஒரு குழந்தையை வேறே கட்டி விட்டார். இனிமேல் என்ன செய்வது? எங்கே போவது?
கல்கத்தாவுக்குப் போவது என்ற நினைப்பே அவளுக்கு விஷமாக இருந்தது! குழந்தைப் பிராயத்தில் அவளை ஒரு சமயம் ஒரு தேனீ கொட்டிவிட்டது. அப்போது அது ரொம்பவும் வலித்தது. இன்று சாவித்திரி கல்கத்தாவில் தான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி நினைத்துக்கொண்டால், ஏக காலத்தில் ஆயிரம் தேனீக்கள் தன் தேக முழுவதும் கொட்டிவிட்டது போல் அவளுக்கு அத்தனை வேதனை உண்டாயிற்று. போதும், ஏழேழு ஜன்மத்துக்கும் போதும். மறுபடியும் கல்கத்தாவுக்குப் போய் அவர்களுடைய முகத்தில் விழிப்பது என்பது இயலாத காரியம். முடியவே முடியாது!
நெடுங்கரையிலோ வீடு பூட்டிக் கிடக்கிறது. திறந்திருந்தால் தான் என்ன? அங்கே எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? அப்பா சம்மதித்தாலும் சித்தியும் பாட்டியும் தன்னை வைத்துக்கொண்டிருக்கச் சம்மதிப்பார்களா? ஒவ்வொரு நிமிஷமும் தன்னை ஏசிக் காட்ட மாட்டார்களா? "போ! போ!" என்று பிடுங்கி எடுத்துவிட மாட்டார்களா? அப்பாவையும் அவர்கள் வதைத்து விடுவார்களே? தன்னால் அப்பாவுக்கு இத்தனை நாளும் நேர்ந்த கஷ்டமெல்லாம் போதாதா?
அப்பாவுக்குக் கஷ்டம்! தன்னால்! - இதை நினைத்துச் சாவித்திரி தன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டாள். தன்னால் அப்பாவுக்குக் கஷ்டம் என்ற எண்ணம் இந்த நிமிஷம் வரையில் அவள் மனத்தில் இருந்தது. இப்போது அது மாறிற்று. 'என்ன? அப்பாவுக்கு என்னால் கஷ்டமா? அவரால் எனக்குக் கஷ்டம் இல்லையா?' என்று எண்ணினாள். தான் அநுபவித்த இத்தனை துன்பங்களுக்கும் யார் காரணம்? அப்பாதான் இல்லையா? 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கொடு என்று நான் அழுதேனா? இந்த ஸ்ரீதரனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்று இவரிடம் சொன்னேனா? இவரை யார் என்னை இப்படிப்பட்ட புருஷனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கச் சொன்னது? அறியாத பிராயத்தில் என்னை இப்படிப்பட்ட கதிக்கு ஆளாக்கினாரே? கல்யாணம் செய்ததற்குப் பதில் என்னைப் படிக்க வைத்து இதோ இந்த ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸுகளைப்போல் என்னையும் ஒரு நர்ஸாகச் செய்திருக்கப்படாதா?..."
ஆம்; சாவித்திரிக்கு உணர்வு தெளிந்ததிலிருந்து அவள் இந்த நினைவாகவே இருந்தாள். ஆகா! இந்த நர்ஸுகள் எவ்வளவு உற்சாகமாயிருக்கிறார்கள்? எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள்? சுயமாகச் சம்பாதித்து ஜீவனம் செய்வதைப் போல் உண்டா? இவர்களுக்குக் கவலை ஏது? பிறருடைய கையை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லையல்லவா? ஒருவரிடம் பேச்சுக் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை யல்லவா? பெண் ஜன்மம் எடுத்தவர்களில் இவர்கள் அல்லவா பாக்கியசாலிகள்?
இப்படிச் சதாகாலமும் சிந்தனை செய்துகொண்டிருந்தாள் சாவித்திரி. சிந்தனை செய்யச் செய்ய அவர்களைப் போல் தானும் சுதந்திர வாழ்க்கை வாழ வேண்டுமென்ற ஆசை அவள் மனத்தில் அபரிமிதமாக வளர்ந்து கொண்டிருந்தது. இனிமேல், தான் பிறந்த வீட்டிலேயோ, புகுந்த வீட்டிலேயோ போய் வயிறு வளர்ப்பதில்லையென்னும் திடசங்கல்பம் அவளுடைய மனத்தில் ஏற்பட்டது. உயிர் வாழ்ந்தால், இந்த நர்ஸுகளைப் போல் சுய ஜீவனம் செய்து சுதந்திரமாக வாழவேண்டும்; இல்லாவிடில் எந்த வகையிலாவது உயிரை விட்டுவிடவேண்டும். பிறர் கையை எதிர்பார்த்து, பிறருக்கு அடிமையாகி வாழும் வாழ்க்கை இனிமேல் வேண்டாம். சாவித்திரி இவ்வாறு சங்கல்பம் செய்து கொள்ளும் சமயத்தில் தொட்டிலில் கிடக்கும் குழந்தை விரலை ருசி பார்த்துச் சப்புக்கொட்டும் சத்தம் கேட்கும். 'ஐயோ! இந்தச் சனியன் ஒன்றை ஸ்வாமி நம் தலையில் கட்டி விட்டாரே? நாம் செத்துப் போவதாயிருந்தால் இதை என்ன செய்வது?' என்ற ஏக்கம் உண்டாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
3.14. சாவித்திரியின் சங்கல்பம் - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சாவித்திரி, கஷ்டம், மனத்தில், கல்யாணம், செய்து, தன்னால், இனிமேல், இப்படிப்பட்ட, சாவித்திரிக்கு, இல்லையா, தலையில், ஆஸ்பத்திரியில், சுதந்திரமாக, வீட்டிலேயோ, வாழ்க்கை, சிந்தனை, ஜீவனம், எவ்வளவு, அப்பாவுக்குக், கொட்டிவிட்டது, பிராயத்தில், இருந்தது, அவளுக்கு, செய்வது, போதும், இத்தனை, அப்பாவுக்கு, சங்கல்பம், மாட்டார்களா, கல்கத்தாவுக்குப்