தியாக பூமி - 3.3. நல்ல சேதி
"புல் நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை" - நாலடியார்
தலை தீபாவளிக்குப் பிறகு இன்னும் இரண்டு தீபாவளிகள் வந்துவிட்டுப் போயின. கார்த்திகை முடிந்து, மார்கழி மாதம் பிறந்தது.
பருவ காலங்கள் எந்தப் பஞ்சாங்கம் அல்லது காலெண்டரை வைத்துக் கொண்டு தேதி பார்க்கின்றனவோ, தெரியவில்லை. அதிலும் மற்றப் பருவங்கள் கொஞ்சம் முன் பின்னாக வந்தாலும் வரும். பனிக்காலம் மட்டும் தேதி தவறி வருவது கிடையாது. கார்த்திகை எப்போது முடியப் போகிறது, மார்கழி எப்போது பிறக்கப் போகிறது என்று பார்த்துக் கொண்டேயிருந்து மார்கழி பிறந்ததும், பனியும் தொடங்கிவிடுகிறது. ஜனங்களும், கம்பளிச் சொக்காய், பனிக் குல்லாய் காஷ்மீர்ச் சால்வை, கோரைப் பாய் ஆகியவற்றைத் தேடத் தொடங்குகிறார்கள்.
அந்த மாதங்களில் அதிகாலையில் எழுந்திருப்பதற்குச் சாதாரணமாய் யாருக்கும் மனம் வருவதில்லை. பட்சிகளின் உதய கீதத்தைக் கேட்டதும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்ளத்தான் தோன்றும். ஆனால், மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள் என்பதை நினைத்து அதிகாலையில் பஜனை செய்ய விரும்பும் பக்தர்களும், குடுகுடுப்பாண்டிகளும் மட்டும் பனியையும் குளிரையும் இலட்சியம் செய்யாமல் எழுந்து விடுவார்கள்.
ஒரு நாள் அதிகாலையில் சம்பு சாஸ்திரி வழக்கம் போல் விழித்துக் கொண்டார். ஆனால், உடனே படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. அவசரமாய் எழுந்து என்ன ஆகவேண்டுமென்று தோன்றியது. மூன்று வருஷத்துக்கு முன்பு வரையில் மார்கழி மாதம் என்றால், நெடுங்கரை கிராமத்தில் பிரமாதமாயிருக்கும். அதிகாலையில் வீதி பஜனை நடக்கும். பிறகு சம்பு சாஸ்திரியின் வீட்டில் பூஜை, ஹாரத்தி, பொங்கல் பிரஸாத விநியோகம் எல்லாம் உண்டு. அதெல்லாம் இப்போது பழைய ஞாபகமாகி விட்டது. சாஸ்திரியைச் சாதிப் பிரஷ்டம் செய்த வருஷத்தில், வீதி பஜனை நின்று போயிற்று. காலை வேளையில் பொங்கல் பிரஸாதத்துக்காகவும் அவர் வீட்டுக்கு யாரும் போகவில்லை. 'ஊரார் சாதிப்பிரஷ்டம் பண்ணியது இந்த ஒரு காரியத்துக்கு நல்லதாய்ப் போயிற்று' என்று மங்களம் மனத்திற்குள் எண்ணிக் கொண்டாள்.
அடுத்த வருஷத்தில் சாதிக் கட்டுப்பாடு தளர்ந்து விட்டது. ஊரில் தீக்ஷிதருடைய கிருத்திரிமங்களைப் பொறுக்க முடியாத சிலர் பகிரங்கமாகவே சம்பு சாஸ்திரியின் கட்சி பேசத் தொடங்கினார்கள். பிறகு, பெயருக்கு ஏதோ பிராயச்சித்தம் என்று நடந்தது. இப்போது அக்கிரகாரத்தில் அநேகர் சாஸ்திரி வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
ஆனால், முன்னைப் போல் சம்பு சாஸ்திரிக்கு வாழ்க்கையில் உற்சாகம் இல்லை; முன் மாதிரி பணச் செலவு செய்வதற்கு வேண்டிய வசதிகளும் இல்லை. சாவித்திரி, புருஷன் வீட்டுக்குப் போகாமலிருந்தது அவருடைய உள்ளத்தில் ஒரு பெரிய பாரமாய் இருந்து கொண்டிருந்தது. ஆகவே, ஏகாதசி பஜனை, மார்கழி பஜனை எல்லாம் நின்று போயின.
ஆனால் சாஸ்திரி அதிகாலையில் எழுந்திருப்பது மட்டும் நிற்கவில்லை. தாம் எழுந்திருக்கும்போது சாவித்திரியையும் எழுப்பி விட்டு விட்டுத் தடாகத்துக்குப் போவார். பனிக் காலத்தில், அதிகாலையில் வெத வெத என்று சூடாயிருக்கும் குளத்து ஜலத்தில் ஸ்நானம் செய்வது ஓர் ஆனந்தமாயிருக்கும். பிறகு, சூரியோதயம் வரை காத்திருந்து சூரிய நமஸ்காரம் செய்வார். பனிக் காலத்தில், சூரியன் கிளம்பிக் கொஞ்ச நேரம் வரையில் பனிப் படலம் சூரியனை மறைத்துக் கொண்டிருக்கும். 'இப்படித்தானே மாயையாகிற பனி ஆத்ம சூரியனை ஜீவனுடைய கண்ணுக்குப் புலப்படாமல் மறைத்துக் கொண்டிருக்கிறது?' என்று வேதாந்த விசாரணை செய்வார்.
அவர் வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள், சாவித்திரி எழுந்திருந்து, படங்களுக்கு அலங்காரம் செய்து, விளக்கேற்றி வைத்து, பூஜைக்கு எல்லாம் எடுத்து வைத்திருப்பாள். சாஸ்திரி வந்ததும் பூஜை செய்துவிட்டு வேறு காரியங்களைப் பார்ப்பார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
3.3. நல்ல சேதி - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அதிகாலையில், மார்கழி, சாஸ்திரி, எல்லாம், மட்டும், வீட்டுக்கு, போயிற்று, நின்று, சாவித்திரி, செய்வார், மறைத்துக், சூரியனை, வருஷத்தில், காலத்தில், விட்டது, வரையில், எழுந்து, எப்போது, சாஸ்திரியின், பொங்கல், இப்போது, கார்த்திகை, போகிறது