திருவழுந்தூர் சிவக்கொழுந்து

7
இவ்வாறு கந்தப்ப பிள்ளை மறுபடியும் கதையை
முடித்தார். ஆனால் என் மனம் சமாதானம் அடையவில்லை. அவருடைய கதையில், இடி
விழுந்து சிவக்கொழுந்தின் கண் போனதைக் கூட நான் நம்பினேன். ஏனெனில்,
இம்மாதிரி அபூர்வ சம்பவங்களை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் வனஜா மனோரஞ்சிதமாக
மாறி, சிவக்கொழுந்தை மோசம் செய்த விஷயத்தை மட்டும் என்னால் நம்ப முடியவில்லை.
என்னதான் கண் குருடாயிருந்தாலும் இந்த மாதிரி ஏமாற்றுவது சாத்தியமா?
அப்படிக் கலியாணம் நடந்திருந்தாலும், பின்னால் தெரியாமல் இருந்திருக்குமா?
இப்படி எண்ணி, "அப்புறம், சிவக்கொழுந்துக்குத் தெரியவேயில்லையா? உங்களுடைய மோசத்தைக் கண்டு பிடிக்கவில்லையா?" என்று கேட்டேன்.
"ஸ்வாமி! இந்த எண்ணத்தினால் எத்தனை நாள் தூக்கம் பிடிக்காமல் கஷ்டப்பட்டிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்? தம்பி எப்போது உண்மையைத் தெரிந்து கொள்வானோ, அப்போது அவனுக்கு எப்படிப்பட்ட கோபம் வருமோ, என்ன செய்வானோ என்று எனக்குத் திக்திக்கென்று அடித்துக் கொண்டுதானிருந்தது. இந்த பயத்தினாலும், அவர்கள் பேரில் எனக்கிருந்த பிரியத்தினாலும் அடிக்கடி முந்திரிச் சோலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். நாலு மாசத்துக்கு ஒரு தடவையாவது கட்டாயம் போய் விடுவேன். இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதைப் பார்த்து நானும் சந்தோஷமடைந்தேன்.
இந்த மாதிரி ஒரு தடவை போயிருந்தபோது, வீட்டுக் கூடத்தில் தம்பியின் வாத்தியம் வைத்திருந்ததையும், அதன் பக்கத்தில் சுருதிப் பெட்டி ஒன்று இருந்ததையும் பார்த்தேன். வனஜாவை, "தம்பி இப்போது வாத்தியம் வாசிப்பதுண்டா?" என்று கேட்டேன். சில சமயம் ராத்திரியில் வாசிப்பாங்க; நான் சுருதி போடுவேன்" என்று சொன்னாள்.
நல்ல வேளையாகத் தவுல் எடுத்துக் கொண்டு போயிருந்தேன். அன்று ராத்திரி ரொம்பவும் பிடிவாதம் செய்து தம்பியை நாயனம் வாசிக்கச் சொல்லி, நானும் தவுல் அடித்தேன். ஆகா! அது என்ன வாசிப்பு? என்ன வாசிப்பு! சாமி! அது மனுஷ்யர்களுடைய சங்கீதமல்ல; தேவ சங்கீதம். ஒரு சமயம் அழுகை வரும்; ஒரு சமயம் சிரிப்பு வரும். ஒரு நிமிஷம் எங்கேயோ ஆகாயத்தில் தூக்கிக் கொண்டு போவது போலிருக்கும்; அடுத்த நிமிஷம் மலை உச்சியிலிருந்து பாதாளத்தில் உருட்டி விடுவது போலிருக்கும்; ஒரு சமயம் ஊஞ்சலாடுவது போலிருக்கும், இன்னொரு சமயம் எழுந்திருந்து கூத்தாட வேண்டுமென்று தோன்றும். நடுவில் நடுவில் நான் தவுல் அடிப்பதை நிறுத்திவிட்டு, ஆஹா! ஆஹா! என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பேன்.
இம்மாதிரி தம்பி வாத்தியம் வாசிக்கிற விஷயம் தெரிந்ததிலிருந்து முன்னைக் காட்டிலும் அதிகமாகவே முந்திரிச் சோலைக்குப் போகத் தொடங்கினேன். நாளாக ஆக, தம்பியை ஏமாற்றிய விஷயமாய் எனக்குப் பயம் குறைந்து வந்தது. இனிமேல் அவனுக்கு எங்கே தெரியப் போகிறது என்றே நினைத்து விட்டேன்.
முந்திரிச் சோலையில் தம்பியும் வனஜாவும் போய்த் தங்கி மூன்று, நாலு வருஷம் இருக்கும். ஒரு தடவை நான் அங்கே போயிருந்தபோது, தம்பியின் முன்னால் ஞாபக மறதியாக 'வனஜா' என்று கூப்பிட்டு விட்டேன். உடனே, என் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டேன்.
"வனஜாவா? அது யார் மாமா?" என்றான் சிவக்கொழுந்து.
"இங்கே யாருமில்லை, அப்பா! என் மருமகள் ஞாபகமாகக் கூப்பிட்டு விட்டேன்!"
"அதனால் என்ன மாமா, இவளும் உங்கள் மருமகள் தானே? வனஜா என்ற பெயர் உங்களுக்குப் பிடித்திருந்தால், அப்படியே கூப்பிடுங்களேன்" என்றான்.
"நல்ல வேளை, பிழைத்தோம்" என்று நினைத்துக் கொண்டேன்!
அன்று ராத்திரி வழக்கம் போல் சிவக்கொழுந்து வாத்தியம் வாசித்தான். அவன் சஹானா ராகம் வாசித்த போது என்னால் சகிக்கவே முடியவில்லை. ஒரு பரவசமாய் 'ஆண்டவனே! என்று அலறி விட்டேன். வாசித்து முடிந்ததும், 'தம்பி! கடவுளுக்கு அல்லவா கண்ணில்லை போலிருக்கிறது? இப்பேர்ப்பட்ட நாத வித்தையை உனக்குக் கொடுத்து விட்டு, உன் கண்ணை எடுத்துக் கொண்டு விட்டாரே?' என்று வாய் விட்டுக் கதறினேன்.
அப்போது சிவக்கொழுந்து புன்னகை செய்தபடி, "மாமா! ஸ்வாமி என் கண்ணை எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையில் எனக்குக் கண்ணைக் கொடுத்தார். வனஜாவைக் காட்டிலும் இன்னொருத்தி ஒசத்தி என்று நினைத்தேனே? என்னை விடக் குருடன் யார்?" என்றான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "என்ன சொல்கிறாய், தம்பி" என்றேன்.
"மாமா! எனக்குக் கண்ணில்லையென்று என்னை நீங்கள் ஏமாற்றப் பார்த்தீர்கள். ஆனால் உண்மையில் உங்களைத்தான் நான் ஏமாற்றினேன். முதல் நாள் ஆஸ்பத்திரிக்கு வந்த போதே இவள் வனஜாதான் என்று எனக்குத் தெரியும்" என்றான்.
அச்சமயம் அங்கு வந்த வனஜாவின் முகத்தைப் பார்த்தேன். அவளுடைய புன்சிரிப்பிலிருந்து அவளும் இதற்கு உடந்தைதான் என்று தெரிந்து கொண்டேன்.
"வனஜா! நீயும் சேர்ந்து தான் இந்தச் சூழ்ச்சி செய்தாயா? தம்பிக்குத் தெரியுமென்பது முதலிலேயே உனக்குத் தெரியுமா?" என்று கேட்டேன்.
"இல்லை, மாமா! கல்யாணத்துக்கு மறுநாள் தான் எனக்குத் தெரியும். ஆனால், உங்களுக்குச் சொல்லக் கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாங்க! நீங்க அவரை ஏமாற்ற நினைத்ததற்காக உங்களை தண்டித்தார்களாம்!" என்றாள்.
"எப்படியும் நீங்கள் இரண்டு பேரும் ஒன்றாய்ப் போய் விட்டீர்களல்லவா? நான் தானே பிறத்தி மனுஷனாய்ப் போய்விட்டேன்? எனக்கென்னவேலை இங்கே? நான் போகிறேன்" என்று சொல்ல்விட்டுக் கிளம்பினேன்.
என் மனத்திற்குள் எவ்வளவோ சந்தோஷம். ஆனால் வெளிக்கு மட்டும் கோபித்துக் கொண்டவன் போல் நடித்தேன். அவர்கள் இரண்டு பேரும் ரொம்பவும் சிரமப்பட்டு என்னை சமாதானப்படுத்தினார்கள்.
ஒரு மாதிரியாகக் கோபம் தீர்ந்தபிறகு, "போனது போகட்டும், தம்பி! முதல் நாளே இவள் வனஜாதான் என்று உனக்குத் தெரிந்து விட்டது என்றாயே? அது எப்படித் தெரிந்தது?" என்று கேட்டேன்.
அதற்குச் சிவக்கொழுந்து சொன்ன பதில் என்னை ஆச்சரியத்தில் பிரமிக்கும்படி செய்து விட்டது.
"பகவான் ஒரு அவயத்தை எடுத்துக் கொண்டால், இன்னொரு அவயத்தைக் கூர்மையாக்கி விடுகிறார். மாமா! எனக்குக் கண் போச்சு! ஆனால் காது கூர்மையாச்சு. வளையல் குலுங்கிய போதே வனஜாதான் என்று தெரிந்து கொண்டேன். மேலும் மனோரஞ்சிதம் வந்திருக்க மாட்டாள் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும். சென்ட்ரல் ஸ்டேஷனில் நான் என் பிரதிக்ஞைக்கு பங்கம் செய்து கொண்டிருக்கும் போது, அடுத்த அறையில் அவளுடைய போதைச் சிரிப்பைக் கேட்டேன். அப்போதே என் மனம் 'சீ!' என்று வெறுத்து விட்டது. அப்படிப்பட்டவளா என்னைப் பார்க்க வரப் போகிறாள்? ஒரு நாளுமில்லை. எனக்கேற்பட்ட ஆச்சரியமெல்லாம் நீங்கள் ஏன் அவ்வளவு பெரிய பொய் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் என்பது தான். அதன் காரணமும் நானே ஊகித்துக் கொண்டேன். நான் 'மனோரஞ்சிதம், மனோரஞ்சிதம்' என்று வெறுப்பினால் சொல்லிக் கொண்டிருந்ததைத் தப்பாக நினைத்துக் கொண்டு இப்படி என்னை மோசம் செய்யப் பார்க்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். இவள் 'பட முடியாதினித் துயரம்' என்று பாடியதும் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் எனக்குப் போய் விட்டது. மாமா! நீங்களும் ஒரு சங்கீத ரஸிகர் என்று சொல்லிக் கொள்கிறீர்களே? அந்த நாடகக்காரியின் பாட்டுக்கும், உங்கள் மருமகள் பாட்டுக்கும் எப்படி வித்தியாசம் தெரியாமல் போச்சு? ராகம், குரல், சங்கதிகள் எல்லாம் அப்படியே இருந்தது வாஸ்தவம்தான். ஆனால் அந்த நாடகக்காரியின் பாட்டிலே ஆத்மா கிடையாது; அது தொண்டைக்கு மேலிருந்து வந்த பாட்டு. ஆனால் உங்கள் மருமகளோ இருதய அந்தரங்கத்திலிருந்து பாடினாள். இந்த வித்தியாசம் உங்களுக்குத் தெரியவில்லையா?" என்றான்.
இப்படி மருமகனும் மருமகளும் சேர்ந்து எனக்கு அசட்டுப் பட்டம் கட்டினார்கள். ஆனால் அதைக் குறித்து நான் வருத்தப்படவில்லை. ஐயா! என் தலையிலிருந்து ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. எப்படியாவது குழந்தைகள் இரண்டு பேரும் சந்தோஷமாயிருந்தால் சரி! எனக்கென்ன வந்தது? சாமி! காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது. இந்த உலகத்தின் சுகதுக்கங்களெல்லாம் அனுபவித்தாகிவிட்டது. தம்பியின் நாத வித்தையில் சொர்க்கத்தின் சுகத்தைக் கூட அனுபவித்து விட்டேன். பகவான் எப்போது கூப்பிடுகிறாரோ அப்போது போகத் தயாராயிருக்கிறேன்.
வண்டி விழுப்புரம் ஸ்டேஷனில் நின்றது. கந்தப்ப பிள்ளையின் 'சோக்ரா' பையன் வேறு வண்டியிலிருந்து வந்து ஏறி, அவருடைய பிரிக்காத படுக்கையையும் பெட்டியையும் தூக்கிக் கொண்டான். கந்தப்ப பிள்ளை தவுலை ஒரு தட்டுத் தட்டிப் பார்த்து விட்டு அதைத் தாமே கையில் எடுத்துக் கொண்டு இறங்கினார். "போய் வருகிறேன், ஐயா! பட்டணத்துக்கு வந்தால் பார்க்கிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அன்றிரவு பாக்கி நேரமும் எனக்குத் தூக்கம் வரவில்லை. ஐயம்பேட்டைக் கந்தப்பன் கூறிய அதிசயமான சம்பவங்கள் திரும்பத் திரும்ப ஞாபகம் வந்தன. அவையெல்லாம் உண்மையாக நடந்தவைதானா? அல்லது, அவ்வளவும் கந்தப்ப பிள்ளையின் கற்பனையா? மறுபடியும் அவரைப் பார்க்கும் போது விசாரித்து உண்மை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் நிஜமாயிருந்தாலும் சரி, கதையாயிருந்தாலும் சரி, ஒரு விதத்தில் பரம திருப்தியாயிருந்தது. என்னுடைய கதைகளைப் போல் துயரமாக முடிக்காமல் 'பிள்ளை குட்டிகளுடன் சௌக்கியமாயிருக்கிறார்கள்' என்று மங்களகரமாகக் கதையை முடித்தாரல்லவா?
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவழுந்தூர் சிவக்கொழுந்து - Thiruvazhundhur Sivakozhundhu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், மாமா, தம்பி, தெரிந்து, என்னை, கொண்டேன், எடுத்துக், விட்டேன், என்றான், சமயம், கொண்டு, கேட்டேன், எனக்குத், என்ன, கந்தப்ப, சிவக்கொழுந்து, விட்டது, வனஜா, இரண்டு, போய், பேரும், வாத்தியம், வந்த, நீங்கள், பிள்ளை, இவள், வனஜாதான், தான், தெரியும், எனக்குக், மனோரஞ்சிதம், உங்கள், அப்போது, போலிருக்கும், செய்து, தம்பியின், இப்படி, முந்திரிச், போல், தவுல், மருமகள், போது

