தியாக பூமி - 3.6. கிரகப் பிரவேசம்
ராஜாராமய்யர் மிகவும் கோபமாயிருந்தார். இது என்ன உலகம், இது என்ன வாழ்க்கையென்று அவருக்கு ரொம்பவும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அவருடைய மனோவசிய சக்தியானது ஸ்ரீதரன் விஷயத்தில் சிறிதும் பயன்படாமற் போனதுதான் அவருடைய கோபத்திற்குக் காரணம்.
மாட்டுப் பொண்ணை அழைத்து வருகிறேன் என்று தங்கம்மாள் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றதிலிருந்து ராஜாராமய்யருக்கு ஸ்ரீதரனைப் பற்றிய கவலை அதிகமாயிற்று. 'அவள் பாட்டுக்கு அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து நிற்கப் போகிறாள்! இவனானால் இந்தச் சட்டைக்காரியை இழுத்துக்கொண்டு அலைகிறானே!' என்பதாக அவருடைய மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்தது. மாட்டுப் பெண் வருவதற்குள் இவனைச் சீர்திருத்தி விடவேண்டும் என்று தீர்மானித்தார்.
ஆகவே, ஒரு நாள் ஸ்ரீதரனை அழைத்துத் தம் எதிரில் நிறுத்திக் கொண்டு, தம்முடைய காந்தக் கண்களின் சக்தியை அவன் பேரில் பிரயோகிக்கத் தொடங்கினார். அவனை விழித்துப் பார்த்த வண்ணம், "ஸ்ரீதரா! உனக்கு இப்போது நல்ல புத்தி வந்து கொண்டிருக்கிறது!..." என்று அவர் ஆரம்பித்ததும், ஸ்ரீதரன் குறுக்கே பேச ஆரம்பித்தான்.
"ஆமாம் அப்பா! எனக்கு புத்தி வந்து கொண்டிருக்கிறது. ஆனால், உங்களுக்குத்தான் புத்தி கெட்டுப் போய் கொண்டிருக்கிறது. நீங்கள் முழிக்கிறதைப் பார்த்தால் பயமாயிருக்கிறது. நான் சொல்றதைக் கேளுங்கள். ஸ்பிரிட் மீடியம், மெஸ்மெரிஸம், ஹிப்னாடிஸம் இந்த கண்றாவியையெல்லாம் விட்டுவிடுங்கள். இந்த மாதிரி மெஸ்மரிஸம், ஹிப்னாடிஸம் என்று ஆரம்பித்தவர்கள் கடைசியில் எங்கே போய்ச் சேர்கிறார்கள் தெரியுமா? லூனடிக் அஸைலத்தில்தான். இந்த ஊர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் முக்கால்வாசிப்பேர் ஹிப்னாடிஸம், அப்பியாசம் செய்தவர்கள் தானாம். ஜாக்ரதை!" என்று ஒரு பிரசங்கம் செய்துவிட்டு, ராஜாராமய்யர் பிரமித்து போய் நின்று கொண்டிருக்கையிலேயே வெளியேறினான்.
அதற்குப் பிறகு ராஜாராமய்யர் இரண்டு, மூன்று தடவை ஸ்ரீதரனுக்குத் தர்மோபதேசம் செய்யலாமென்று முயன்றார். ஒன்றும் பயன்படவில்லை. அவன் நின்று காது கொடுத்துக் கேட்டால்தானே?
இதனாலெல்லாம் ராஜாராமய்யரின் மனது ரொம்பவும் குழம்பிப் போய் இருந்தது. அவருக்குக் கோபம் கோபமாய் வந்தது. அந்தக் கோபத்தை யார் மேல் காட்டுவது என்றும் தெரியவில்லை. கடைசியில் ஹிந்து சமூகத்தின் மேல் காட்டத் தீர்மானித்தார். ஹிந்து சமூகத்திலுள்ள பால்ய விவாகம், வரதக்ஷணை முதலிய வழக்கங்களைப் பலமாகக் கண்டித்துப் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுத வேண்டுமென்று முடிவு செய்தார்.
ராஜாராமய்யர் இத்தகைய மனோ நிலையில் இருந்த போதுதான் ஒரு நாள் திடீரென்று தங்கம்மாள் சாவித்திரியை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். அவர்களைப் பார்த்ததும் ராஜாராமய்யர், "என்ன தங்கம் வருகிறதைப் பத்தித் தகவலே கொடுக்கலையே! ஒரு கடுதாசி போடக் கூடாதா?" என்றார்.
இதற்குள் சாவித்திரி மாமனாரின் அருகில் வந்து நமஸ்காரம் செய்தாள்.
அதைப் பார்த்த ராஜாராமய்யர், "வாடி அம்மா, வா! இந்த வீட்டுக்கு நீ ஒருத்தி தான் பாக்கியாயிருந்தது. வந்துட்டயோல்யோ? எங்களையெல்லாம் பைத்தியமா அடிச்சுட்டான்; உன்னை என்ன பண்ணப் போறானோ!" என்றார்.
தங்கம்மாள், "சரிதான்; வரத்துக்கு முன்னாலேயே அவளை காபரா பண்ணாதேங்கோ! அவர் கிடக்கார்; நீ மேலே மாடிக்குப் போடி, அம்மா!" என்றார்.
தன்னுடைய மாமனார் பெரிய தமாஷ்காரர் என்றும் எப்போதும் வேடிக்கையும் பரிகாசமுமாய்ப் பேசுவார் என்றும் சாவித்திரி கேள்விப்பட்டிருந்தாள். ராஜாராமய்யர் சொன்னதை அந்த மாதிரி பரிகாசம் என்று அவள் நினைத்தாள். வாய்க்குள் சிரித்துக் கொண்டே அவள் மாடிப்படி ஏறிச் சென்றாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
3.6. கிரகப் பிரவேசம் - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ராஜாராமய்யர், புத்தி, கொண்டிருக்கிறது, ஹிப்னாடிஸம், கொண்டு, என்றும், அவருடைய, தங்கம்மாள், என்றார், சாவித்திரி, ஹிந்து, நின்று, கடைசியில், பார்த்த, ஸ்ரீதரன், ரொம்பவும், மாட்டுப், அழைத்துக், தீர்மானித்தார், மாதிரி