முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.092.திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.092.திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்
1.092.திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
இது படிக்காசு சுவாமியருளியபோது வட்டந்தீர ஓதியது.
992 |
வாசி தீரவே, காசு நல்குவீர் மாசின் மிழலையீர், ஏச லில்லையே. |
1.092.1 |
குற்றம் அற்ற வீழிமிழலையில் எழுந்தருளியுள்ள இறைவரே, அடியேனுக்கு வழங்கியருளும் காசில் உள்ள உயர்வு தாழ்வு நீங்குமாறு செய்து அக்காசினை நல்குக. அதனால் உமக்குப் பழிப்பு இல்லை.
993 |
இறைவ ராயினீர், மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை, முறைமை நல்குமே. |
1.092.2 |
எல்லோருக்கும் இறைவராக விளங்கும் பெருமானீரே, வேதங்களின் ஒலி நிறைந்த திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, கறை படிந்ததாக அளிக்கப்படும் காசில் உள்ள அக்கறையை நீக்கி முறையாக அளித்தருளுக.
994 |
செய்ய மேனியீர், மெய்கொண் மிழலையீர் பைகொ ளரவினீர், உய்ய நல்குமே. |
1.092.3 |
சிவந்த திருமேனியை உடையவரே, மெய்ம்மையாளர் வாழும் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, படம் எடுக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டுள்ளவரே, அடியேங்கள் உய்யுமாறு வாசியில்லாததாகக் காசு அருளுக.
995 |
நீறு பூசினீர், ஏற தேறினீர் கூறு மிழலையீர், பேறு மருளுமே. |
1.092.4 |
திருவெண்ணீற்றை அணிந்தவரே, ஆனேற்றில் ஏறி வருபவரே, பலராலும் புகழப்பெறும் திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, காசு அருளுவதோடு எமக்கு முத்திப் பேறும் அருளுவீராக.
996 |
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர் நாம மிழலையீர், சேம நல்குமே. |
1.092.5 |
காமனை எரிந்து அழியுமாறு செய்த புகை பொருந்திய அழல் விழியை உடையவரே! புகழ் பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே! எமக்குச் சேமத்தை அருளுவீராக.
997 |
பிணிகொள் சடையினீர், மணிகொண் மிடறினீர் அணிகொண் மிழலையீர், பணிகொண்டருளுமே. |
1.092.6 |
கட்டப்பட்ட சடையை உடையவரே, நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே, அழகு பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எம்மைப் பணி கொண்டு அருளுவீராக.
998 |
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர் கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. |
1.092.7 |
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, உயர்வுடைய திருவீழிமிழலையில் உறைபவரே, கங்கை சூடிய திருமுடியை உடையவரே, எங்களது ஐயுறவைப் போக்கியருளுக.
999 |
அரக்க னெரிதர, இரக்க மெய்தினீர் பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. |
1.092.8 |
இராவணன் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரிய இரக்கம் காட்டியருளியவரே, எங்கும் பரவிய புகழ் உடைய திருவீழிமிழலையில் உறைபவரே, எமக்கு அளிக்கும் காசில் உள்ள குறையைப் போக்கியருளுக.
1000 |
அயனு மாலுமாய், முயலு முடியினீர் இயலு மிழலையீர், பயனு மருளுமே. |
1.092.9 |
நான்முகனும் திருமாலும் அடிமுடி காண முயலும் பேருருவம் கொண்டருளியவரே, எல்லோரும் எளிதில் வழிபட இயலுமாறு திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, எமக்கு வீட்டின் பத்தையும் அருளுவீராக.
1001 |
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார் வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. |
1.092.10 |
ஒன்றொன்றாக மயிர் பறித்த தலையினை உடைய சமணர்கள் அறிய வேண்டுபவராகிய உம்மை அறியாது வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில் உறைபவரே, அடியேங்கள் உம்மைப் பிரிந்து வாழ்தல் இயலாது.
1002 |
காழி மாநகர், வாழி சம்பந்தன் வீழி மிழலைமேல், தாழு மொழிகளே. |
1.092.11 |
இத்திருப்பதிகம் சீகாழிப் பதியாகிய பெரிய நகருள் தோன்றி வாழும் ஞானசம்பந்தன் திருவீழிமிழலை இறைவர் மேல் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகளைக் கொண்டதாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 90 | 91 | 92 | 93 | 94 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மிழலையீர், திருவீழிமிழலையில், உடையவரே, அருளுவீராக, திருவீழிமிழலை, எழுந்தருளியவரே, எமக்கு, பொருந்திய, எழுந்தருளியிருப்பவரே, காசில், உறைபவரே, நல்குமே, தவிர்மினே, முடியினீர், போக்கியருளுக, வாழும், திருவிருக்குக்குறள், திருமுறை, திருச்சிற்றம்பலம், அடியேங்கள், மருளுமே