முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.090.திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.090.திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்
1.090.திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
969 |
அரனை யுள்குவீர், பிரம னூருளெம் பரனையே மனம், பரவி யுய்ம்மினே. |
1.090.1 |
சிவபிரானைச் சிந்தித்துப் போற்ற விரும்பும் அன்பர்களே, பிரமனூரில் விளங்கும் பரனையே மனத்தால் பரவிப் போற்றி உய்வீர்களாக.
970 |
காண வுள்குவீர், வேணு நற்புரத் தாணு வின்கழல், பேணி யுய்ம்மினே. |
1.090.2 |
சிவபிரானைக் கண்டு தொழ எண்ணும் அன்பர்களே, வேணுபுரத்தில் விளங்கும் தாணுவின் திருவடிகளைப் பேணி உய்வீர்களாக.
971 |
நாத னென்பிர்காள், காத லொண்புகல் ஆதி பாதமே, ஓதி யுய்ம்மினே. |
1.090.3 |
சிவபெருமானை எம் தலைவன் எனக் கூறும் அன்பர்களே! அன்போடு ஒளி விளங்கும் புகலிப் பதியில் விளங்கும் ஆதியின் திருவடிப் பெருமைகளை ஓதி உய்வீர்களாக.
972 |
அங்க மாதுசேர், பங்க மாயவன் வெங்குரு மன்னும், எங்க ளீசனே. |
1.090.4 |
அருள் வழங்கும் குறிப்போடு உமையம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவன், வெங்குருவில் நிலையாக உள்ள எங்கள் ஈசன் ஆவான்.
973 |
வாணி லாச்சடைத், தோணி வண்புரத் தாணி நற்பொனைக், காணு மின்களே. |
1.090.5 |
ஒளி பொருந்திய, பிறைமதி பொருந்திய சடைமுடி உடையவனாய்த் தோணிபுரத்தில் விளங்கும் ஆணிப் பொன் போன்ற இறைவனைக் கண்டு தொழுவீர்களாக.
974 |
பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும் ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே. |
1.090.6 |
பாம்பு பொருந்திய சடைமுடியோடு பூந்தராயில் விளங்கும் பெருமானை, ஏந்திய தனபாரங்களை உடைய உமையம்மையின் கணவன் என்று கூறுவார்கள்.
975 |
கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம் அரசை நாடொறும், பரவி யுய்ம்மினே. |
1.090.7 |
கருமை பொருந்திய கண்டத்தை உடையவனாய்ச், சிரபுரத்துள் எழுந்தருளிய அரசனை நாள்தோறும் பரவி உய்வீர்களாக.
976 |
நறவ மார்பொழிற், புறவ நற்பதி இறைவ னாமமே, மறவ னெஞ்சமே. |
1.090.8 |
தேன் பொருந்திய சோலைகளை உடைய புறவமாகிய நல்ல ஊரில் எழுந்தருளிய இறைவன் திருநாமங்களை, நெஞ்சமே! நீ மறவாதே.
977 |
தென்றி லரக்கனைக், குன்றிற் சண்பைமன் அன்று நெரித்தவா, நின்று நினைமினே. |
1.090.9 |
தென் திசையிலுள்ள இலங்கை மன்னனாம் இராவணனாகிய அரக்கனைச் சண்பை மன்னனாகிய சிவபிரான் கயிலை மலையிடைப்படுத்து அன்று நெரித்த வரலாற்றை நின்று நினைத்துப் போற்றுவீர்களாக.
978 |
அயனு மாலுமாய், முயலுங் காழியான் பெயல்வை யெய்திநின், றியலு முள்ளமே. |
1.090.10 |
பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி முயலும் பரம்பொருளாகிய சீகாழிப் பதியில் விளங்கும் இறைவனது கருணைப் பொழிவைச் சார்ந்து நின்று நினைக்கும் என் உள்ளம்.
979 |
தேர ரமணரைச், சேர்வில் கொச்சைமன் நேரில் கழனினைந், தோரு முள்ளமே. |
1.090.11 |
புத்தர் சமணர் ஆகியோரை அணுகாத, கொச்சை வயத்து மன்னனாகிய சிவபிரானின் ஒப்பற்ற திருவடிகளை நினைந்து தியானிக்கும் என் உள்ளம்.
980 |
தொழும னத்தவர், கழும லத்துறை பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே. |
1.090.12 |
கழுமலத்தில் உறையும் குற்றமற்ற ஞான சம்பந்தன் அருளிய மொழிகளாகிய, இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி, பெருமானைத் தொழும் மனத்தவர் ஆகுக.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 88 | 89 | 90 | 91 | 92 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விளங்கும், பொருந்திய, யுய்ம்மினே, உய்வீர்களாக, அன்பர்களே, நின்று, மன்னனாகிய, முள்ளமே, உள்ளம், சம்பந்தன், எழுந்தருளிய, திருவிருக்குக்குறள், திருச்சிற்றம்பலம், திருமுறை, திருப்பிரமபுரம், பதியில், பரனையே