முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.110.திருவிடைமருதூர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.110.திருவிடைமருதூர்

1.110.திருவிடைமருதூர்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
| 1185 |
மருந்தவன் வானவர் தானவர்க்கும் பெருந்தகை பிறவினொ டிறவுமானான் அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ் இருந்தவன் வளநக ரிடைமருதே. |
1.110.1 |
பிறவி நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குபவனும், தேவர்கட்கும் அசுரர்கட்கும் தலைவனாய் விளங்குபவனும், உயிர்களின் பிறப்பு இறப்பிற்குக் காரணமானவனும், அரிய தவம் உடைய சனகாதி முனிவர்களோடு கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து அறம் உரைத்தருளியவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.
| 1186 |
தோற்றவன் கேடவன் றுணைமுலையாள் கூற்றவன் கொல்புலித் தோலசைத்த நீற்றவ னிறைபுன னீள்சடைமேல் ஏற்றவன் வளநக ரிடைமருதே. |
1.110.2 |
உயிர்களின் தோற்றத்திற்கும் கேட்டிற்கும் காரணமானவனும், இணையான தனங்களை உடைய உமையம்மையை ஒருகூறாகக் கொண்டவனும், கொல்லும் தொழிலில் வல்ல புலியினது தோலை இடையில் கட்டியவனும், மெய்யெலாம் திருநீறு அணிந்தவனும், பெருகிவந்த கங்கையை நீண்ட சடைமுடிமேல் ஏற்று உலகைக் காத்தவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.
| 1187 |
படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன் நடைநவி லேற்றினான் ஞாலமெல்லாம் உடைதலை யிடுபலி கொண்டுழல்வான் இடைமரு தினிதுறை யெம்மிறையே. |
1.110.3 |
மழுவைத் தனக்குரிய ஆயுதமாகக் கொண்டவனும், பால் போன்று வெள்ளிய திருநீற்றை மேனிமேல் பூசியவனும், இனிய நடையைப் பழகுகின்ற விடை ஏற்றை உடையவனும், உடைந்த தலையோட்டில் பலி கொண்டு உலகெலாம் திரிந்துழல்பவனும் ஆகிய எம் தலைவனாகிய சிவபெருமான் இனிது உறையும் நகர் இடைமருதாகும்.
| 1188 |
பணைமுலை யுமையொரு பங்கனொன்னார் துணைமதிண் மூன்றையுஞ் சுடரின்மூழ்கக் கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற இணையிலி வளநக ரிடைமருதே. |
1.110.4 |
பருத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், பகைவராகிய அசுரர்கட்குத் துணையாக இருந்த மூன்று அரணங்களையும் தீயில் மூழ்கி அழியுமாறு கணையைச் செலுத்தி அழித்தவனும், காலனைச் செற்ற ஒப்பிலியும் ஆகிய சிவ பெருமானது வளநகர் இடைமருது ஆகும்.
| 1189 |
பொழிலவன் புயலவன் புயலியக்கும் தொழிலவன் றுயரவன் துயரகற்றும் கழலவன் கரியுரி போர்த்துகந்த எழிலவன் வளநக ரிடைமருதே. |
1.110.5 |
ஏழ் உலகங்களாக இருப்பவனும், மேகங்களாகவும் அவற்றை இயக்கி மழையைப் பெய்விக்கும் தொழிலைப் புரிவோனாக இருப்பவனும், துன்பங்களைத் தருபவனாகவும் அவற்றைப் போக்கும் கழலணிந்த திருவடிகளை உடையவனாக விளங்குபவனும், யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்து அழகனாக விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.
| 1190 |
நிறையவன் புனலொடு மதியும்வைத்த பொறையவன் புகழவன் புகழநின்ற மறையவன் மறிகட னஞ்சையுண்ட இறையவன் வளநக ரிடைமருதே. |
1.110.6 |
குறைவற்ற நிறைவாக விளங்குபவனும், கங்கையோடு திங்களைத் திருமுடியில் வைத்துச் சுமக்கும் சுமையை உடையவனும், புகழ் வடிவினனாக விளங்குபவனும், எல்லோராலும் புகழப்படும் வேதங்களாக விளங்குபவனும், சுருண்டு விழும் அலைகளை உடைய கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்ட தலைவனும் ஆகிய சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.
| 1191 |
நனிவளர் மதியொடு நாகம்வைத்த பனிமலர்க் கொன்றையம் படர்சடையன் முனிவரொ டமரர்கண் முறைவணங்க இனிதுறை வளநக ரிடைமருதே. |
1.110.7 |
நாள்தோறும் ஒரு கலையாக நன்றாக வளர்தற்குரிய பிறை மதியோடு பாம்பையும் உடனாக வைத்துள்ளவனும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை சூடிய விரிந்த சடைமுடியை உடையவனும் ஆகிய சிவபிரான் முனிவர்களும் தேவர்களும் முறையாக வணங்க இனிதாக உறையும் வளநகர் இடைமருதாகும்.
| 1192 |
தருக்கின வரக்கன தாளுந்தோளும் நெரித்தவ னெடுங்கைமா மதகரியன் றுரித்தவ னொன்னலர் புரங்கண்மூன்றும் எரித்தவன் வளநக ரிடைமருதே. |
1.110.8 |
செருக்குற்ற அரக்கனாகிய இராவணனின் தாள்களையும், தோள்களையும் நெரித்தவனும், நீண்ட கையை உடைய பெரிய மத யானையை அக்காலத்தில் உரித்துப் போர்த்தவனும், பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.
| 1193 |
பெரியவன் பெண்ணினொ டாணுமானான் வரியர வணைமறி கடற்றுயின்ற கரியவ னலரவன் காண்பரிய எரியவன் வளநக ரிடைமருதே. |
1.110.9 |
எல்லோரினும் பெரியவனும், பெண் ஆண் வடிவாக விளங்குபவனும், வயிற்றிடையே கீற்றுக்களாகிய கோடுகளை உடைய பாம்பணைமேல் கடலிடையே துயிலும் கரியவனாகியதிருமால் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன் ஆகியோர் காணுதற்கரிய எரியுருவாய் ஓங்கி நின்றவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.
| 1194 |
சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன புந்தியி லுரையவை பொருள்கொளாதே அந்தண ரோத்தினொ டரவமோவா எந்தைதன் வளநக ரிடைமருதே. |
1.110.10 |
சிந்திக்கும் திறனற்ற சமணர்களும், புத்தர்களும் கூறிய அறிவற்ற உரைகளைப் பொருளுடைய உரைகளாகக் கொள்ளாதீர். அந்தணர்களின் வேத ஒலியோடு விழவொலி நீங்காத வளநகர் ஆகிய இடைமருது எந்தையாகிய சிவபிரான் உறையும் இடமாகும் என்று அறிந்து சென்று வழிபடுமின்.
| 1195 |
இலைமலி பொழிலிடை மருதிறையை நலமிகு ஞானசம்பந்தன்சொன்ன பலமிகு தமிழிவை பத்தும்வல்லார் உலகுறு புகழினொ டோங்குவரே. |
1.110.11 |
இலைகள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த இடைமருதில் உறையும் சிவபிரானை, அருள்நலம் மிகுந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பயன்மிகு தமிழ்ப் பாடல்களாலியன்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் உலகில் நிறைந்து விளங்கும் புகழ்கள் அனைத்தையும் பெற்று ஓங்கி வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 108 | 109 | 110 | 111 | 112 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவிடைமருதூர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ரிடைமருதே, வளநகர், விளங்குபவனும், இடைமருதாகும், உறையும், சிவபிரானது, கொண்டவனும், சிவபெருமானது, உடையவனும், இருப்பவனும், சிவபிரான், இடைமருது, தனங்களை, உயிர்களின், முனிவரொ, காரணமானவனும், திருவிடைமருதூர், திருமுறை, திருச்சிற்றம்பலம், உமையம்மையை

