முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.085.திருநல்லம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.085.திருநல்லம்

1.085.திருநல்லம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உமாமகேசுவரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
915 |
கல்லா னிழன்மேய கறைசேர் கண்டாவென் றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்த வில்லா லரண்மூன்றும் வெந்து விழவெய்த நல்லா னமையாள்வா னல்ல நகரானே. |
1.085.1 |
இமையவர்கள் கல்லால மர நிழலில் எழுந்தருளிய கறை பொருந்திய கண்டத்தை உடையவனே என்று தமக்குத் தெரிந்த அனைத்து மொழிகளாலும் தோத்திரம் செய்து தொழுது ஏத்த, மேரு வில்லால் அசுரர்தம் மூன்று அரண்களும் வெந்து விழுமாறு செய்தருளிய பெரியவனாகிய சிவபிரான் நம்மையாட்கொள்ளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.
916 |
தக்கன் பெருவேள்வி தன்னி லமரரைத் துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக் கொக்கின் னிறகோடு குளிர்வெண் பிறைசூடும் நக்கன் னமையாள்வா னல்ல நகரானே. |
1.085.2 |
தன்னை இகழ்ந்து தக்கன் செய்த பெரிய வேள்விக்குச் சென்ற அமரர்களை, அவ்வேள்விக் களத்திலேயே பலவகையான துக்கங்களை அடையச் செய்தவனும், ஒளிவிடும் பொன்போன்ற சடைகள் தாழ்ந்து தொங்கக் கொக்கின் இறகோடு குளிர்ந்த வெண்மையான பிறையைச் சூடியிருப்பவனும் திகம்பரனுமாய இறைவன் நம்மை ஆளுதற்பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.
917 |
அந்தி மதியோடு மரவச் சடைதாழ முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும் நந்தி நமையாள்வா னல்ல நகரானே. |
1.085.3 |
மாலைக் காலத்தில் தோன்றும் பிறை மதியோடு பாம்பையும் அணிந்த சடைமுடி தாழ்ந்து தொங்க, முற்பட்ட ஊழிக் காலத்தில் கையில் அனலேந்திப் பழமையான சுடுகாட்டகத்தே எரியில் நின்றாடித் தன்னைச் சிந்தித்தே எச்செயலையும் தொடங்கும் அன்பர்களின் தீராத வினைகள் எல்லாவற்றையும் தீர்த்தருளும் நந்தியாகிய சிவபெருமான், நம்மை ஆட்கொண்டருளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.
918 |
குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ மிளிரும் மரவோடு வெண்ணூ றிகழ்மார்பில் தளிருந் திருமேனித் தையல் பாகமாய் நளிரும் வயல்சூழ்ந்த நல்ல நகரானே. |
1.085.4 |
குளிர்ந்த பிறை மதியைச் சூடி, கொன்றை மலர்களை அணிந்துள்ள சடைகள் தாழ்ந்து தொங்க விளங்கும் பாம்போடு பூணநூல் திகழும் மார்பினாய்த் தளிர் போன்ற திருமேனியை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட சிவபிரான் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.
919 |
மணியார் திகழ்கண்டம் முடையான்
மலர்மல்கு பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித் துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த நணியா னமையாள்வா னல்ல நகரானே. |
1.085.5 |
நீல மணி போன்ற விளங்கிய கண்டத்தினை உடையவனும், மலர்கள் நிறைந்த வளைத்துக் கட்டப்பட்ட நீண்ட சடைமுடியினனும், எமக்குத் தந்தையானவனும் ஆகிய பெருமான் மனத்துணிவோடு மலர் கொண்டு தன் திருவடிகளை விரும்பித் தொழுதேத்தவும் நம்மை ஆட்கொண்டருளவும் நண்ணிய நிலையினனாய் நல்லம் நகரில் எழுந்தருளியுள்ளான்.
920 |
வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும் பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை ஈசன் னெனவுள்கி யெழுவார் வினைகட்கு நாசன் னமையாள்வா னல்ல நகரானே. |
1.085.6 |
மணம் கமழ்கின்ற மலர்களைச் சூடிய மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடும், பூசத்தக்கதாய்ச் சுட்டெடுத்த திருநீறு அணிந்தவனாய், இதழ் விரிந்த கொன்றை மாலையைப் புனைந்தவனாய், ஈசன் எனத் தன்னை நினைந்தேத்துபவர்களின் வினைகளைப் பொடி செய்பவனாய், விளங்கும் இறைவன், நம்மை ஆட்கொண்டருள நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.
921 |
அங்கோல் வளைமங்கை காண வனலேந்திக் கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும் நங்கோ னமையாள்வா னல்ல நகரானே. |
1.085.7 |
அழகிய திரண்ட வளையல்களை அணிந்த உமையம்மை காணக் கையில் அனல் ஏந்தி, தேன் நிறைந்த மணமுடைய கொன்றை மலர்மாலை சூடி, இளமைக் கோலத்தில் சுடுகாட்டை அரங்காகக் கொண்டு எரியாடும் நம் தலைவனாகிய சிவபிரான், நம்மை ஆட்கொள்ளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.
922 |
பெண்ணார் திருமேனிப் பெருமான்
பிறைமல்கு கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால் எண்ணா தெடுத்தானை யிறையே விரலூன்றி நண்ணார் புரமெய்தா னல்ல நகரானே. |
1.085.8 |
உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூற்றிலே கொண்டுள்ள பெருமானும், பிறை மதியை முடியில் சூடிக் கண்பொருந்திய நுதலினனாய் விளங்குவோனும், இறைவனது வரம் பிலாற்றலை மனத்தால் எண்ணாது கயிலை மலையை எடுத்த இராவணனைச் சிறிதே விரலூன்றி அடர்த்தவனும், பகைவர்தம் முப் புரங்களை எய்தழித்தவனுமாகிய சிவபிரான், நம்மை ஆட்கொண்டருள, நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.
923 |
நாகத் தணையானு நளிர்மா மலரானும் போகத் தியல்பினாற் பொலிய வழகாகும் ஆகத் தவளோடு மமர்ந்தங் கழகாரும் நாகம் மரையார்த்தா னல்ல நகரானே. |
1.085.9 |
பாம்பணையில் துயிலும் திருமாலும், தண்ணிய, தாமரை மலர்மேல் எழுந்தருளியுள்ள நான்முகனும், திருமகள்கலைமகளிரோடு போகம் பொருந்தி வாழ, தானும் மலை மகளோடு கூடிப் போகியாய் இருந்து அருள் செய்த, அழகு பொருந்திய பாம்பை இடையில் அரைநாணாகக் கட்டிக் கொண்டிருப்பவன் ஆகிய சிவபிரான், நம்மை ஆள நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.
924 |
குறியில் சமணோடு குண்டர் வண்டேரர் அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும் நறைகொள் பொழில்சூழ்ந்த நல்ல நகரானே. |
1.085.10 |
குறிக்கோள் இல்லாத சமணர்களும் புத்தரும் கூறும் அறிவற்ற சொற்களைக் கேட்டு நாள்களைப் பயனற்றனவாய்ப் போக்காதீர், புள்ளிகளோடு கூடிய பாம்பினை இடையிற் கட்டிய பரமன், நம் பொல்லா வினைகளைத் தீர்க்கும் நிலையில் தேன் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.
925 |
நலமார் மறையோர்வாழ் நல்ல நகர்மேய கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே. |
1.085.11 |
நன்மைகள் நிறைந்த வேதங்களை ஓதும் அந்தணர்கள் வாழும் நல்லம் நகரில் எழுந்தருளிய, கொல்லும் தொழில் வல்ல மழுவைக் கையில் ஏந்திய சிவபிரானை, கொச்சை வயம் என்னும் புகழுடைய தலத்தில் வாழ்ந்த தமிழ் ஞானசம்பந்தன், போற்றிப் பாடிய கலை நலம் வாய்ந்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர், கவலைகள் நீங்கப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநல்லம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நல்லம், என்னும், நகரானே, எழுந்தருளியுள்ளான், நகரில், சிவபிரான், னமையாள்வா, நிறைந்த, பெருமான், கொன்றை, கையில், தாழ்ந்து, குளிர்ந்த, பொருட்டு, திருச்சிற்றம்பலம், திருமுறை, மலர்மல்கு, சூழ்ந்த, விளங்கும், கொண்டு, ஆட்கொண்டருள, பொல்லா, கொச்சை, நகரிடை, விரலூன்றி, சூடிக், தொழுதேத்த, வெந்து, சடைகள், எழுந்தருளிய, கொக்கின், தக்கன், பொருந்திய, திருநல்லம், இறைவன், காலத்தில், வினைதீர்க்கும், சடைதாழ, மதியோடு, அணிந்த