புன்னைவனத்துப் புலி - அத்தியாயம் 11
சந்திரசூடன் பிறகு இரண்டு மூன்று நாள்
புன்னைவனத்தில் இருந்தான். உயிலும் ரிஜிஸ்டர் ஆயிற்று.
இடையில் மனோகரனுக்கும் சந்திரசூடனுக்கும் ஒரு நாள் அடிதடி சண்டை நடந்தது. அப்துல் ஹமீது குறுக்கிட்டு அங்கே கொலை நிகழாமல் தடுத்தான்.
ஆனால் மனோகரனைக் கொலை வழக்கிலிருந்து தப்புவிக்க முடியவில்லை. பெங்களூரில் நடந்த ஒரு கொலை சம்பந்தமாக இரகசியப் போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருந்தது. கடைசியில் பெங்களூர் போலீஸாருக்குத் தடயம் கிடைத்தது. அவர்கள் வந்து மனோகரனைக் கைது செய்து கொண்டு போனார்கள்.
அன்றிரவு வீட்டுக்குத் தீ வைத்தவன் மனோகரனாய்த்தானிருக்க வேண்டும் என்று பண்ணையாருக்கு நிச்சயமாயிருந்தது. அவன் இரவில் திருட்டுத்தனமாக எழுந்து போனதையும், பிறகு திரும்பி வந்து படுத்ததையும் அவர் கவனித்திருந்தார்.
ஆகையினால் அவன் போனதே நல்லதாய்ப் போயிற்று என்று முடிவு செய்து கொண்டார்.
தம்மகனுடைய மனைவியைப் பற்றியும், அவர்களுக்குச் சந்ததி உண்டா என்பது பற்றியும் கூடிய சீக்கிரம் விசாரித்துத் தெரிவிக்கும்படி சந்திரசூடனிடம் கேட்டுக் கொண்டார்.
சந்திரசூடன் இது விஷயமாக ஸி.ஐ.டி. சாயபுவின் உதவியைக் கோரினான். "அதற்கென்ன பார்க்கலாம். சென்னையில் பின்னர் சந்திப்போம்" என்று சொல்லிவிட்டு அப்துல் ஹமீது சாயபு விடை பெற்றுச் சென்றான்.
பிறகு சந்திரசூடனும் சென்னைக்கு வந்து சேர்ந்தான். சில நாளைக்குப் பிறகு மனோன்மணியிடம் கலியாணப் பேச்சை எடுத்தான். பெண்கள் தனிமையாக வாழ்வது இந்த பொல்லாத உலகத்தில் எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்திருந்த மனோன்மணியும் ஒரு மாதிரி மனதைத் திடப்படுத்திக் கொண்டு கலியாணத்துக்குச் சம்மதித்தாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 11 - Punnaivanathu Puli - புன்னைவனத்துப் புலி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பிறகு, வந்து, கொலை