புன்னைவனத்துப் புலி - அத்தியாயம் 8
புலி ஊர்வலம் அந்த இடத்தை விட்டு நகர்ந்த
பிறகு சாயபு மட்டும் தனியாக நிற்பதைச் சந்திரசூடன் பார்த்தான். அவனை
அணுகிச் சென்று, "நல்ல வேலை செய்தாய், சாயபு!" என்றான்.
"நல்ல சமயத்திலே வந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினீங்க!" என்றான் சாயபு.
"நானா காப்பாற்றினேன்? நீயல்லவா உன் எஜமானை நல்ல சமயத்தில் அசக்கிவிட்டு குறி தவறச் செய்து காப்பாற்றினாய்?"
அப்துல் ஹமீது அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
"அன்றைக்கு மலைமேல் 'புலி புலி' என்று கத்தினாயே? அது எனக்கு எச்சரிக்கை செய்வதறகாகத்தானே? உண்மையைச் சொல்?" என்று சந்திரசூடன் கேட்டான்.
"நம்ம சின்ன எஜமானும் ஒரு சிறு குழந்தைங்க. சில சமயம் விளையாட்டுப் புத்தி வந்திடுங்க! எஜமான் கிட்டச் சொல்லாதேங்க, ஸாமி! நம்ப பிளைப்புப் போயிடப் போவுது!"
"இதோ பார், சாயபு! வெறுமனே வேஷம் போடாதே! நீ பிழைப்புக்காக இவரிடம் வரவில்லை. வேறு காரியார்த்தமாக வந்திருக்கிறாய்? உள்ளதைச் சொல்லு" என்றான் சந்திரசூடன்.
அப்துல் ஹமீது திருதிருவென்று விழித்தான்.
சந்திரசூடன் அவன் காதோடு, "நீ ஸி.ஐ.டி.யைச் சேர்ந்தவன், இல்லையா?" என்றான்.
ஹமீது கண்களை ஒரு சிமிட்டுச் சிமிட்டி, "நீங்க என்னைவிடப் பெரிய ஸி.ஐ.டி.யாக இருக்கீங்களே!" என்றான்.
"உன் பேரில் இன்னொரு குற்றம் இருக்கிறது. 'தீபம்' பத்திரிகையில் கதை எழுதிப் பரிசு வாங்கியது நீதானே?"
சாயபு ஆச்சரியக் கடலில் முழுகியவனாய், "உங்களுக்கு எப்படி அதெல்லாம் தெரிந்தது?" என்று கேட்டான்.
"சென்ற வாரம் மதராசுக்குப் போயிருந்தபோது 'தீபம்' காரியாலயத்துக்குச் சென்று கொஞ்சம் ரகளை செய்தேன். பத்திரிகாசிரியரைப் பார்த்து, 'பரிசு பெற்றவரின் புனைப் பெயர் மட்டும் கொடுத்திருக்கிறீர்கள். விலாசம் கொடுக்கவில்லை. உங்கள் பரிசுத்திட்டமே வெறும் மோசடி!' என்றேன். மனுஷர் பயந்து போய்ப் பரிசு பெற்றவன் பெயர், விலாசத்தைக் கொடுத்ததுடன், உம்முடைய கடித்தத்தையும் காட்டினார்."
"அடே! நம் குட்டு வெளியாயிட்டே? யாரிடமும் சொல்லாதீங்க! நம்ம தமிழ் நடை எப்படி இருந்ததுங்க?"
"தமிழ் நடை நன்றாய்த்தானிருந்தது. ஆனால் கதை முடிவுதான் மோசம். கலியாணத்தில் கொண்டு போய் முடித்திருக்கக்கூடாதா?"
இச்சமயத்தில் சாயபு, "அதோ!" என்றான். அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் பண்ணையார் வந்து கொண்டிருந்தார். சந்திரசூடன், "சரி! இன்னொரு தடவை நாம் சந்திக்க வேண்டும், தெரிகிறதா?" என்றான்.
இருவரும் உடனே பிரிந்து போனார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 8 - Punnaivanathu Puli - புன்னைவனத்துப் புலி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்றான், சாயபு, சந்திரசூடன், ஹமீது, பரிசு, நல்ல, புலி