புன்னைவனத்துப் புலி - அத்தியாயம் 1
பாண்டிய நாட்டையும் மலையாள தேசத்தையும்
பிரித்து நிற்கும் நீண்ட மேற்கு மலைத் தொடர் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு
பெயருடன் விளங்குகிறது. இந்த மலைத்தொடரை எந்த இடத்திலே பார்த்தாலும்
அதன் இயற்கை வனப்பு அற்புதமாக இருக்கும். எனினும், நாகலாபுரம் மலைச்சாரலின்
சௌந்தரியத்துக்கு ஒப்புவமை இல்லை என்று அந்தப் பகுதியைப் பார்த்தவர்கள்
சொல்வார்கள். அங்கே இயற்கை அரசி பசும் பொன் சிங்காதனத்தில், நீலப் பட்டாடை
உடுத்தி, நவரத்தின மாலைகளை அணிந்து, மணிமகுடம் தரித்து, செம்பவள இதழ்களின்
வழியாக முத்து நகை புரிந்து, கருங்குவளைக் கண்களில் கருணை ஒளி வீசியவாறு
வீற்றிருக்கிறாள் என்று கவிதா ரஸிகர்கள் வர்ணனை செய்வார்கள். மலையும்,
காடும், அருவியும், பொய்கையும், பல நிற மலர்களும் அப்படி ஒரே வர்ண ஜாலமாகக்
காட்சி அளிக்கும்.
அத்தகைய நாகலாபுரம் மலைச் சாரலையொட்டி எத்தனையோ கிராமங்கள் உண்டு. அவற்றில் புன்னைவனம் என்னும் கிராமம் பிரசித்தமானது. அது கிராமம்தான் என்றாலும், பட்டணவாசத்தின் வசதிகள் எல்லாம் அங்கு உண்டு. புன்னைவனத்துக்கும் கொஞ்ச தூரத்தில் பெரிய நீர்த்தேக்கம் ஒன்று இருக்கிறது. அதிலிருந்து விழும் அருவியைக் கொண்டு மின்சார சக்தி உற்பத்தி செய்கிறார்கள். எப்போது மின்சார வசதி இருக்கிறதோ, அப்போது பட்டண வாசத்தின் சகல சௌகரியங்களையும் ஏற்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?
வருஷத்தில் ஒன்பது மாதம் புன்னை வனம் கிராமமாகத் தோற்றமளிக்கும். சாரல் காலத்தில் அதாவது ஜுன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் அது நகரமாக மாறி விடும். (ஜன நெருக்கத்தை அவ்வளவாக விரும்பாத 'நாஸுக்குக்காரர்கள்' அந்த மூன்று மாதமும் அது 'நரக'மாக மாறிவிடும் என்பார்கள்.) அந்த மூன்று மாதங்களிலும் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் ஜனங்கள் தேக சுகத்தையும் மன உல்லாசத்தையும் தேடிப் புன்னைவனத்துக்கு வருவார்கள்.
சென்ற வருஷத்தில் சந்திரசூடனுக்கு அம்மாதிரி தேக சுகத்தையும் மன அமைதியையும் தேடி எங்கேனும் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உதகமண்டலம், கோடைக்கானல், குற்றாலம் முதலிய இடங்களைப் பற்றி யோசித்து, பல காரணங்களினால் அவற்றை ஒதுக்கி விட்டு, புன்னைவனம் போவதென்று முடிவு செய்தான். அம்மாதிரி அவன் முடிவு செய்ததற்குச் சிற்சில முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று புன்னைவனத்தின் இயற்கை எழிலைப் பற்றி ஒரு சிநேகிதன் மூலமாக அவன் கேள்விப்பட்டிருந்தது. இரண்டாவது காரணம், அங்குள்ள ஓட்டல்களில் நல்ல சாப்பாடும் கிடைக்கும் என்பது. மூன்றாவது காரணம் சில நாளைக்கு முன்னால் "புன்னைவனத்துப் புலி" என்ற தலைப்புடன் தினப்பத்திரிகைகளில் வெளியான செய்திகள்.
நாகலாபுரம் மலையின் உட்பகுதிகளில் துஷ்ட மிருகங்கள் எப்போதுமே உண்டு. ஆனால் மலையையொட்டி கீழேயுள்ள கிராமங்களுக்கு அவை வருவது அபூர்வம். அப்படி அபூர்வமாக ஒரு புலி புன்னைவனத்தில் ஒரு நாள் காணப்பட்டதாகவும், பின்னர் அடிக்கடி அங்குமிங்கும் தோன்றி ஆடுமாடுகளைக் கொன்று வருவதாகவும், அதைச் சுட்டுக் கொல்லுவதற்குச் செய்யப்பட்ட முயற்சிகள் இதுவரை பலிக்கவில்லையென்று தினப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. சந்திரசூடன் கலாசாலை மாணாக்கனாயிருந்த போது இராணுவப் பயிற்சிப் படையில் சேர்ந்து துப்பாக்கியை உபயோகிக்க கற்றுக் கொண்டிருந்தான். அப்படிப் பயின்ற வித்தையைக் காரியத்தில் பயன்படுத்துவதற்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக எண்ணினான். புன்னைவனத்துப் புலி தன் துப்பாக்கிக்கு இரையாவதற்காகவே மலை மேலிருந்து கீழே இறங்கி வந்திருக்கிறது என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினான்.
'நாகலாபுரம் சாலை' என்னும் ரயில் நிலையத்தில் இறங்கி முப்பது மைல் தூரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து புன்னைவனத்தை அடைந்தான். அந்த ஊர் அவனுக்கு நிரம்பப் பிடித்திருந்தது. அதைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்ததையெல்லாம் விட அமைதியும் அழகும் இனிமையும் எழிலும் பொருந்தியிருந்தது. இனிய புனல் அருவி அங்கே தவழ்ந்து விளையாடியது. இன்ப மலைச்சாரல்களில் தென்றல் உலாவியது. கனி குலவும் சோலைகளில் கரு வண்டு பண் இசைத்தது. புன்னை மரங்களின் கீழ்ப் பூப் படுக்கை விரித்திருந்தது. அமுத நீர்ப் பொய்கைகளில் குமுதமலர் செழித்திருந்தது. அவன் தங்கியிருந்த ஹோட்டலில் சாப்பாடும் முதல் தரமாயிருந்தது. சென்னையிலுள்ள பாங்கிகாரர்கள் மட்டும் கொஞ்சம் தாராள புத்தியுடன் தான் கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தால், புன்னை வனத்திலேயே தன் வாழ்நாளைக் கழித்து விடலாம் என்று சந்திரசூடன் எண்ணமிட்டான்.
இரண்டு தினங்கள் இவ்விதமாக ஊரைச் சுற்றிப் பார்ப்பதிலும் கற்பனைக் கனவுகள் காண்பதிலும் கழிந்தன. மூன்றாம் நாள் புன்னைவனம் தபால் ஆபீஸுக்குச் சென்றான். கையில் கொண்டு வந்திருந்த பணம் துரிதமாகக் குறைந்து கொண்டு வந்தது. மேலும் பணம் தருவித்துக் கொள்ளச் சென்னைக்குக் கடிதம் எழுத வேண்டும். அதோடு, தனக்கு ஏதேனும் தபால் வந்திருக்கிறதா என்றும் விசாரிக்க வேண்டும். தபால்களைக் காட்டிலும் அதிக ஆவலுடன் 'தீபம்' பத்திரிகையின் அந்த மாதத்து இதழை அவன் எதிர்பார்த்தான். 'விமான விபத்து' என்னும் பாதிக் கதையின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்வதில் அவனுக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தது. உண்மை என்னவென்றால், அந்தப் பாதிக் கதைப் போட்டியில் அவனும் கலந்து கொண்டிருந்தான், தான் எழுதிய பாதிக் கதையை ஒரு வேளை பத்திரிகைக்காரர்கள் ஏற்றுக் கொண்டிருக்கலாம் அல்லவா? அப்படியானால் பணத்துக்கு பணம் ஆயிற்று, புகழுக்குப் புகழ் ஆயிற்று. இல்லையென்றால், தன்னைவிட நன்றாக அந்தக் கதையைப் பூர்த்தி செய்தவர் யார்? எப்படி பூர்த்தி செய்திருக்கிறார்?' - இதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு அவன் மிக்க ஆர்வம் கொண்டிருந்தான்.
தபால் ஆபீஸுக்குச் சந்திரசூடன் போய்ச் சேர்வதற்கும் தபால் கட்டு வந்து சேர்வதற்கும் சரியாயிருந்தது. அவனைப் போல் இன்னும் இரண்டொரு புது மனிதர்களும் அங்கே வந்து காத்திருந்தார்கள். சந்திரசூடன் போஸ்டு மாஸ்டரிடம் தன் பெயரைச் சொல்லி, "ஏதாவது தபால் இருக்கிறதா?" என்று கேட்டான். போஸ்ட் மாஸ்டர் தேடிப் பார்த்து ஒரு தபாலையும், ஒரு சஞ்சிகையையும் எடுத்துக் கொடுத்தார். சஞ்சிகை 'தீபம்' பத்திரிகையின் அந்த மாத இதழ் தான். சந்திரசூடன் இருந்த பரபரப்பில், தபாலைக் கூடக் கவனியாமல் சஞ்சிகையைப் பிரித்துப் புரட்டினான். அவன் எதிர்பார்த்தபடியே 'விமான விபத்து' கதையின் இரண்டாம் பகுதி அதில் வெளியாகியிருந்தது. அவன் எழுதியது அல்ல என்று பார்த்தவுடன் தெரிந்து போய் விட்டது. பரிசு பெற்ற கதைப் பகுதி அவ்வளவு என்ன பிரமாதமாக அமைந்திருக்க முடியும் என்ற எண்ணத்துடன், நின்றபடியே அதைப் படிக்கத் தொடங்கினான்.
ஏறக்குறையப் படித்து முடிக்கும் சமயத்தில் ஒரு பெண்மணி அங்கே வந்தாள். தனக்கு ஏதாவது தபால் உண்டா என்று விசாரித்தாள். இல்லை என்று அறிந்ததும் அவள் பெரிதும் ஏமாற்றமடைந்ததாகத் தோன்றியது.
"தயவு செய்து நன்றாகப் பாருங்கள், ஸார்! 'தீபம்' பத்திரிகை என் பெயருக்கு ஒன்று வந்திருக்க வேண்டுமே?" என்று கெஞ்சும் குரலில் கூறினாள்.
"இல்லை, அம்மா! ஒரே ஒரு 'தீபம்' தான் வந்திருந்தது. அதில் இவருடைய விலாசம் எழுதியிருந்தது. கொடுத்துவிட்டேன்!" என்று போஸ்டு மாஸ்டர் சந்திரசூடனைச் சுட்டிக் காட்டினார்.
உடனே அந்தப் பெண்ணின் பார்வை சந்திரசூடன் மீது சென்றது. அவன் கையில் விரித்து வைத்திருந்த பத்திரிகையை அசூயை கலந்த ஆர்வத்துடன் நோக்கினாள்.
சந்திரசூடனுடைய கவனத்தில் ஒரு பகுதி, பத்திரிகைக் கதையில் சென்றிருந்தது. மற்றொரு பகுதி அந்தப் பெண்மணி தபாலாபீஸுக்குள் வந்ததிலிருந்து நிகழ்ந்தவைகளை மனத்தில் வாங்கிக் கொண்டிருந்தது. அவள் தன் கையிலிருந்த பத்திரிகையை ஆசையுடன் பார்க்கிறாள் என்று அறிந்ததும், உடனே படிப்பதை நிறுத்தி விட்டு, "தங்களுக்குத் 'தீபம்' வேண்டுமானால் இதையே எடுத்துக் கொள்ளலாமே?" என்று கூறிப் புன்னகை புரிந்தான்.
அந்தப் பெண், "ஒரு சில வினாடி பார்க்கவேணும். கொடுத்தால் இங்கேயே பார்த்து விட்டுத் தந்து விடுகிறேன்" என்றாள்.
"அவ்வளவு அவசரம் ஒன்றுமில்லை. தாங்கள் வீட்டுக்கு எடுத்துப் போய்ச் சாவகாசமாய்ப் படிக்கலாம். தங்கள் ஜாகை எங்கே என்று சொன்னால் நானே வந்து திரும்ப வாங்கிக் கொள்கிறேன்" என்றான் சந்திரசூடன்.
அந்தப் பெண் தபால் ஆபீஸின் பலகணி வழியாகச் சுட்டிக் காட்டி, "அதோ, அங்கே தான் என் வீடு! போஸ்டு மாஸ்டரின் வீட்டுக்கு அடுத்த வீடு!...அல்லது தங்கள் இருப்பிடத்தைச் சொன்னால் பத்திரிகையை அனுப்பி விடுகிறேன்" என்றாள்.
"வேண்டாம், வேண்டாம்! அவ்வளவு சிரமம் தங்களுக்கு வேண்டாம். நானே வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்றான் சந்திரசூடன்.
"மிக்க வந்தனம். காலை பத்து மணி வரையில் வீட்டில் இருப்பேன். பிறகு பள்ளிக்கூடம் போய் விட்டு மாலை ஐந்து மணிக்குத் திரும்பி வருவேன்" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் பத்திரிகையை எடுத்துக் கொண்டு சென்றாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 1 - Punnaivanathu Puli - புன்னைவனத்துப் புலி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவன், சந்திரசூடன், அந்தப், தபால், தான், கொண்டு, அங்கே, தீபம், அந்த, வந்து, முடிவு, அவ்வளவு, பகுதி, பத்திரிகையை, பணம், நாகலாபுரம், பாதிக், எடுத்துக், வேண்டாம், பெண், வாங்கிக், போஸ்டு, புலி, என்னும், ஒன்று, புன்னைவனம், உண்டு, இல்லை, மாதம், புன்னை, கொண்டிருந்தான், இயற்கை, விட்டு, பற்றி, செய்து