முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.072.திருநீலக்குடி
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.072.திருநீலக்குடி

5.072.திருநீலக்குடி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர்.
தேவியார் - நீலநிறவுமையம்மை.
1790 | வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர் செத்த போது செறியார் பிரிவதே நித்த நீலக் குடியர னைந்நினை சித்த மாகிற் சிவகதி சேர்திரே. |
5.072.1 |
தேடிவைத்த செல்வமும், மனைவியும், மக்களும் நீர் செத்தபோது உம்மைச் செறியார்; பிரிவதே இயல்பாம்; நாள் தோறும் நீலக்குடியரனை நினையும் சித்தம் ஆகின்சிவகதி சேர்வீர்.
1791 | செய்ய மேனியன் தேனொடு பால்தயிர் நெய்ய தாடிய நீலக் குடியரன் மைய லாய்மற வாமனத் தார்க்கெலாம் கையி லாமல கக்கனி யொக்குமே. |
5.072.2 |
சிவந்த திருமேனியனாய்த் தேனும், பாலும், தயிரும், நெய்யும் கொண்டு திருமுழுக்காடும் நீலக்குடி அரனின்மேல் காதல் கொண்டு மறவாத மனத்தினர்க்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல அப்பெருமான் புலப்பட்டு அருள்புரிவான்.
1792 | ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு கூற்றன் மேனியிற் கோலம தாகிய நீற்றன் நீலக் குடியுடை யானடி போற்றி னாரிடர் போக்கும் புநிதனே. |
5.072.3 |
நீலக்குடி உடைய பெருமான், கங்கையாற்றுடன் கூடிய நீண்ட சடையையுடையவன். உமாதேவியை ஒரு கூற்றிற் கொண்ட இயல்பினன். திருமேனிக்கு அழகு தருவதாகிய திருநீற்றை உடையவன். திருவடி போற்றினார் இடர்களைப் போக்கும் புனிதன்.
1793 | நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல் ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர் நீலன் நீலக் குடியுறை நின்மலன் கால னாருயிர் போக்கிய காலனே. |
5.072.4 |
நான்கு முனிவர்களுக்கு இன்னருள் புரிய ஆலமரத்தின் நன்னிழலின் கீழ் இருந்தோன்; ஆலகால நஞ்சு உண்ட கண்டத்துடன் பொருந்திய நீலநிறம் உடையவன். நீலக்குடி உறையும் மலமற்றவன்; காலன் உயிர் போக்கிய கடவுள்.
1794 | நேச நீலக் குடியர னேயெனா நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால் ஈச னோர்சரம் எய்ய எரிந்துபோய் நாச மானார் திரிபுர நாதரே. |
5.072.5 |
" நேசத்துக்குரிய நீலக்குடி அரனே!" என்னாத கீழ்மை உடையவராய் நெடுமால் செய்த மாயத்தால் திரிபுரத்து அசுரர்கள் ஈசன் ஓரம்பு எய்ய எரிந்து சாம்பலாய்ப் போய் நாசமாயினர்.
1795 | கொன்றை சூடியைக் குன்ற மகளொடும் நின்ற நீலக் குடியர னேயெனீர் என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர் பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே. |
5.072.6 |
என்றும் பொய்யாகிய உலக வாழ்வை உகந்து இறுமாப்பு அடைகின்ற நீர் இறக்கும்போது நுமக்கு அறியவொண்ணுமோ? ஒண்ணாதாதலால் கொன்றை சூடும் கடவுளுமாகிய மலை மகளோடும் நின்ற நீலக்குடி அரனே என்று உரைப்பீர்களாக!
1796 | கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர் ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக் குடியரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந் தேனன்றே. |
5.072.7 |
கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி அமண் ஒழுக்கமுடையவர்கள் விரைந்து கடல் நீரிற் புக - நூக்கிவிட, என்வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி அரனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன்.
1797 | அழகி யோமிளை யோமெனு மாசையால் ஒழுகி ஆவி யுடல்விடு முன்னமே நிழல தார்பொழில் நீலக் குடியரன் கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே. |
5.072.8 |
"யாம் அழகியவர்கள்; இளையவர்கள்" எனும் ஆசையால் ஒழுகி, உயிர் உடலைவிட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே, நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி அரனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக.
1798 | கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள் பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன் நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன் சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே. |
5.072.9 |
கற்றையாகிய செஞ்சடையில், குளிர்ந்த கதிர்களை வீசும் வெண்திங்களைப்பற்றிப் பாம்புடன் வைத்த கடவுளாகிய நெற்றிக்கண்ணுடைய நீலக்குடி அரன், தேவர் சுற்றிவந்து தொழும் கழலணிந்த சோதிவடிவினன் ஆவன்.
1799 | தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள் அரக்க னாருட லாங்கொர் விரலினால் நெரித்து நீலக் குடியரன் பின்னையும் இரக்க மாயருள் செய்தன னென்பரே. |
5.072.10 |
நீலக்குடி அரன் தருக்கடைந்து திருக்கயிலையைத் தாங்கிய செறிந்த தோளை உடைய இராவணன் உடலை ஓர் திருவிரலால் நெரித்துப் பின்னையும் இரக்கமாகி அருள் புரிந்த கருணைத் திறம் உடையவன் என்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநீலக்குடி - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நீலக்குடி, குடியரன், உடையவன், குடியர, என்றும், பின்னையும், கொன்றை, தாங்கிய, அரனுடைய, செறிந்த, மாயத்தால், பாம்புடன், கழலணிந்த, போக்கும், மனைவியும், திருச்சிற்றம்பலம், திருமுறை, செறியார், பிரிவதே, திருநீலக்குடி, கொண்டு, போக்கிய