முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.039.திருமயிலாடுதுறை
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.039.திருமயிலாடுதுறை
5.039.திருமயிலாடுதுறை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாயூரநாதர்.
தேவியார் - அஞ்சநாயகியம்மை.
1456 | கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை உள்ள முள்கி யுரைக்குந் திருப்பெயர் வள்ளல் மாமயி லாடு துறையுறை வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே. |
5.039.1 |
மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலும், கங்கை வெள்ளம் தாங்கிய சடையனுமாகிய பெருமானை விரும்பிக் காதல் கொள்ளும் இயல்புடைய திரண்ட வளைகள் பெய்யப்பட்ட இப்பெண் உள்ளத்தால் உள்கி அப்பெருமான் திருப்பெயரையே உரைக்கும் தன்மையள் ஆயினள்.
1457 | சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும் பச்சை தீருமென் பைங்கொடி பால்மதி வைத்த மாமயி லாடு துறையரன் கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே. |
5.039.2 |
சடையின்கண் வெண்பிறை வைத்த பெருமை பொருந்திய மயிலாடுதுறைத் தலத்து இறைவனது கொத்தாகப் பொலியும் கொன்றை மலரினைக் கொடுத்தால் தன் சித்தம் தௌந்து, உடல் பூரித்து வளைகளைச் செறிப்பாள் என் பைங்கொடியாகிய இவள் தன் பச்சைவண்ணமும் நீங்கிப் பழைய நிறம் பெறுவாள்.
1458 | அண்டர் வாழ்வும் அமர ரிருக்கையும் கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம் வண்டு சேர்மயி லாடு துறையரன் தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே. |
5.039.3 |
வண்டுகள் சேர்ந்த மயிலாடுதுறைத் தலத்து இறைவனுக்குத் தொண்டுசெய்யும் அடியார் திருப்பாதங்களைச் சூடிச் செறிந்து கொண்டால், தேவ உலக வாழ்வும், தேவர்களது பதவி இன்பங்களும் கண்டு வீற்றிருக்கும் கருத்து எமக்குச் சிறிதும் இல்லை.
1459 | வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான் அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம் மஞ்சன் மாமயி லாடு துறையுறை அஞ்சொ லாளுமை பங்க னருளிலே. |
5.039.4 |
பெருவீரம் உடையானும், பெருமைக்குரிய மயிலாடுதுறையில் உறையும் அழகிய சொல்லை உடையானாகிய உமைபங்கனும் ஆகிய பெருமான் அருளினால் வெவ்விய சினத்தை உடையனாய் விரைந்துவரும் காலன் நம்மிடம் விரைய மாட்டான்; அஞ்சத்தகுவனவாகிய இறப்பும் பிறப்பும் அறுக்கலாம்.
1460 | குறைவி லோங்கொடு மாநுட வாழ்க்கையால் கறைநி லாவிய கண்டனெண் தோளினன் மறைவ லான்மயி லாடு துறையுறை இறைவன் நீள்கழ லேத்தி யிருக்கிலே. |
5.039.5 |
திருநீலகண்டனும், எட்டுத் தோளினனும், வேதம் வல்லவனுமாகிய மயிலாடுதுறை உறையும் இறைவன் நீண்ட கழல்களை ஏத்தி இருந்தால், கொடிய மானிட வாழ்க்கையால் வருகின்ற குறைவு சிறிதும் இல்லாதவராவோம்.
1461 | நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய் கலைகள் ஆயவல் லான்கயி லாயநன் மலையன் மாமயி லாடு துறையன்நம் தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே. |
5.039.6 |
கலைகளை ஆய வல்லவனும், கயிலாயமலை உடையவனுமாகிய பெருமானின் நிலையை சொல்லும் நெஞ்சமே! பெருமைக்குரிய மயிலாடுதுறை இறைவன் நம்தலையின் மேலும் மனத்துள்ளும் தங்குதற்கு எத்துணைப் பெருந்தவம் நீ செய்துள்ளாய்!
1462 | நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன் மாற்றி னான்மயிலாடு துறையென்று போற்று வார்க்குமுண் டோபுவி வாழ்க்கையே. |
5.039.7 |
திருநீறணிந்தவனும், நிமிர்தலுற்ற பொலிவுற்ற சடையினனும், விடையாகிய ஏற்றினை உடையவனும், நம்மை ஆளுடையவனும், புலன்களின் நெறியை மாற்றியவனுமாகிய மயிலாடுதுறை என்று போற்றுகின்ற அடியார்கட்குத் துயரம் மிகுந்த இவ்வுலக வாழ்க்கை உன்டோ?
1463 | கோலும் புல்லு மொருகையிற் கூர்ச்சமும் தோலும் பூண்டு துயரமுற் றென்பயன் நீல மாமயி லாடு துறையனே நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே. |
5.039.8 |
நீல நிறம் உடைய கரிய மயில்கள் ஆடும் துறையினை உடையவனே! முக்கோலும், தருப்பைப்புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும், தோலும் பூண்டு துயரம் அடைந்து பயன் யாது? நுண்ணுணர்வுடையோர்க்கு நூலும் வேண்டுமோ?
1464 | பணங்கொ ளாடர வல்குற் பகீரதி மணங்கொ ளச்சடை வைத்த மறையவன் வணங்கு மாமயி லாடு துறையரன் அணங்கொர் பால்கொண்ட கோல மழகிதே. |
5.039.9 |
படத்தினைக்கொண்டு ஆடுகின்ற அரவனைய அல்குலை உடைய கங்கையை, மணம்கமழும்படி சடையின் கண் வைத்த மறைவடிவானவனும், வணங்கியெழும் மயிலாடுதுறை உறைபவனுமாகிய இறைவன் அம்மையினை ஒருபாகத்தே கொண்டு அருள்செய்யும் திருக்கோலம் மிக அழகியதாகும்.
1465 | நீணி லாவர வச்சடை நேசனைப் பேணி லாதவர் பேதுற வோட்டினோம் வாணி லாமயி லாடு துறைதனைக் காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே. |
5.039.10 |
நீண்ட நிலவினையும், அரவத்தையும் சடையில் விரும்பிச் சூடியுள்ளவனைப் பேணாதவர் பேதுறும்படி விலக்கினோம்; ஒளிபொருந்திய மயிலாடுதுறையினைக் காணில், ஆர்க்கும் கடுந்துயரங்கள் இல்லை.
1466 | பருத்த தோளும் முடியும் பொடிபட இருத்தி னானவ னின்னிசை கேட்டலும் வரத்தி னான்மயி லாடு துறைதொழும் கரத்தி னார்வினைக் கட்டறுங் காண்மினே. |
5.039.11 |
இராவணனது பருத்த தோள்களும் முடிகளும் தூளாகுமாறு இருத்தினவனும், அவனது இன்னிசையைக் கேட்டலும் வரம் அருளியவனும் ஆகிய பெருமானை, மயிலாடுதுறையில் தொழும் கரத்தினை உடையவர்கள் வினை, கட்டற்றுப்போகும் காண்பீராக;
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமயிலாடுதுறை - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மயிலாடுதுறை, இறைவன், துறையரன், மயிலாடுதுறையில், துறையுறை, கூர்ச்சமும், துயரம், தோலும், மேலும், நூலும், கேட்டலும், பருத்த, வேண்டுமோ, வாழ்க்கையால், பூண்டு, அறுக்கலாம், கொன்றை, மயிலாடுதுறைத், பெருமானை, திருச்சிற்றம்பலம், திருமுறை, தலத்து, வாழ்வும், பெருமைக்குரிய, திருமயிலாடுதுறை, பிறப்பும், சிறிதும், உறையும்