முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.022.திருக்குடவாயில்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.022.திருக்குடவாயில்

2.022.திருக்குடவாயில்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோணேசுவரர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
| 1699 | திகழுந்
திருமா லொடுநான் முகனும் புகழும் பெருமான் அடியார் புகல மகிழும் பெருமான் குடவாயின் மன்னி நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022. 1 |
குடவாயில் என்னும் தலத்தில் நிலைபெற்று விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், எல்லோராலும் அறியப்பெறும் திருமால், பிரமன் ஆகியோரால் புகழ்ந்து போற்றப்படும் தலைவனும், அடியவர்கள் தன்னைத் துதித்துப் போற்ற மகிழும் பெருமானும் ஆவான்.
| 1700 | ஓடுந்
நதியும் மதியோ டுரகம் சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல் குழகன் குடவா யில்தனில் நீடும் பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022. 2 |
குடவாயிலில் நீடி விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான் பெருகி ஓடி வந்த கங்கையையும், பிறைமதியையும், பாம்பையும் சூடிய சடையை உடையவன். பழமையான தனது கொடியில் விடை இலச்சினை பொருந்தியவன். இளமைத் தோற்றம் உடையவன்.
| 1701 | கலையான்
மறையான் கனலேந் துகையான் மலையா ளவள்பா கம்மகிழ்ந்த பிரான் கொலையார் சிலையான் குடவா யில்தனில் நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022.3 |
குடவாயில் என்னும் தலத்தில் நிலைத்து விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், பீதாம்பர ஆடையணிந்த திருமால், வேதங்களை ஓதும் நான்முகன் என்பவராகவும், கனலைக் கையில் ஏந்திய உருத்திரனாகவும், அறக்கருணைபுரியும் மலைமகள் பாகனாகவும் மறக்கருணைபுரிய, கொலைத் தொழிலுக்குரிய வில்லை ஏந்தியவனாகவும் விளங்குபவன்.
| 1702 | சுலவுஞ்
சடையான் சுடுகா டிடமா நலமென் முலையாள் நகைசெய் யநடம் குலவுங் குழகன் குடவா யில்தனில் நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022. 4 |
குடவாயிலில் விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், சுற்றிய சடைக் கற்றையை உடைய முடியன், அழகிய தனபாரங்களை உடைய உமையம்மை கண்டு மகிழச் சுடுகாட்டை ஆடுகளமாகக்கொண்டு நடம்புரியும் இளையோன்.
| 1703 | என்றன்
உளமே வியிருந் தபிரான் கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக் குன்றன் குழகன் குடவா யில்தனில் நின்ற பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022. 5 |
குடவாயிலில் பலரும் அறியப்படுவதாய் நிற்கும் பெருங்கோயிலில் நிலவும் பெருமான், என் உள்ளத்தில் விரும்பி உறையும் தலைவன் ஆவான். ஒளி குன்றிய நீலமணி போன்ற மிடற்றினன். கயிலாய மலையில் உறைபவன்.
| 1704 | அலைசேர்
புனலன் அனலன் அமலன் தலைசேர் பலியன் சதுரன் விதிரும் கொலைசேர் படையன் குடவா யில்தனில் நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022. 6 |
குடவாயிலில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய இறைவன்: அலைகள் வீசும் கங்கையை அணிந்தவன்: அனல் ஏந்தியவன்: தலையோட்டில் பலி பெறுபவன்: சதுரப்பாடு உடையவன்: நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய சூலத்தை ஏந்தியவன்.
| 1705 | அறையார்
கழலன் அழலன் இயலின் பறையாழ் முழவும் மறைபா டநடம் குறையா அழகன் குடவா யில்தனில் நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022. 7 |
குடவாயிலில் நிறைவாக அமைந்த பெருங் கோயிலில் விளங்கும் இறைவன், ஒலிக்கின்ற வீரக் கழலை அணிந்தவன்: அழல் ஏந்தியவன்: இசைமரபுடன் கூடிய பறை, யாழ் முழவுடன் வேதங்கள் பாட நடனமாடும் அழகன்.
| 1706 | வரையார்
திரள்தோள் அரக்கன் மடியவ் வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான் வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும் வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. |
2.022. 8 |
மலை போன்றுயர்ந்த மதில்கள் சூழ்ந்த குடவாயிலில் நிலைபெற்ற கயிலைமலை போன்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் இறைவன், மலை போன்று திரண்ட தோள்களை உடைய இராவணன் மடியுமாறு அவன் பெயர்த்த கயிலைமலை அவன்மீது அழுந்திப் பொருந்தத் தன் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவான்.
| 1707 | பொன்னொப்
பவனும் புயலொப் பவனும் தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான் கொன்னற் படையான் குடவா யில்தனில் மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. |
2.022. 9 |
குடவாயிலில் நிலை பெற்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் பெருமான், பொன்னிறத்தினனாகிய பிரமனும், புயல் நிறத்தினனாகிய திருமாலும் தனக்கு உவமையாகாதவனாய்த் தழலுருவில் உயர்ந்து தோன்றியவன், கொல்லும் தொழில் புரியும் நல்ல படைக்கலன்களை ஏந்தியவன்.
| 1708 | வெயிலின்
நிலையார் விரிபோர் வையினார் பயிலும் முரையே பகர்பா விகள்பால் குயிலன் குழகன் குடவா யில்தனில் உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே. |
2.022. 10 |
குடவாயிலில் உயர்ந்துள்ள பெருங்கோயிலில் உயர்ந்தோனாய் விளங்கும் இறைவன், வெயிலில் காய்பவராகிய சமணர்கள், விரித்துப் போர்த்த போர்வையினராகிய புத்தர்கள் ஆகிய சொன்னவற்றையே மீண்டும் மீண்டும் கூறும் பாவிகள்பால் பதியாதவன்; இளமையான தோற்றத்தை உடையவன்.
| 1709 | கடுவாய்
மலிநீர் குடவா யில்தனில் நெடுமா பெருங்கோ யில்நிலா யவனைத் தடமார் புகலித் தமிழார் விரகன் வடவார் தமிழ்வல் லவர்நல் லவரே. |
2.022. 11 |
வேகம் வாய்ந்த ஆற்றுநீரின் வளம் உடைய குடவாயில் நகரில் விளங்கும் நீண்டுயர்ந்த சிறந்த பெருங்கோயிலில் விளங்கும் இறைவனை, நீர் நிலைகளோடு கூடிய புகலிப் பதியின னாகிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் அருளிய மாலையாக அமைந்த இப்பதிகத்தை ஓதவல்லவர் நன்மைகளை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குடவாயில் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெருங்கோ, பெருங்கோயிலில், விளங்கும், யில்தனில், பெருமான், குடவாயிலில், யில்நிலா, எழுந்தருளிய, குழகன், ஏந்தியவன், இறைவன், உடையவன், வரையார், குடவாயில், யில்மகிழ்ந், அமைந்த, கயிலைமலை, மீண்டும், பவனும், மகிழ்ந்துறையும், அணிந்தவன், என்னும், திருக்குடவாயில், திருச்சிற்றம்பலம், திருமால், தலத்தில், மகிழும், தபிரான், நிலவும், நிலையார், திருமுறை

