முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.016.திருமணஞ்சேரி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.016.திருமணஞ்சேரி

2.016.திருமணஞ்சேரி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மணவாளநாயகர்.
தேவியார் - யாழ்மொழியம்மை.
| 1634 | அயிலாரு
மம்பத னாற்புர மூன்றெய்து குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. |
2.016. 1 |
கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து, குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனாகி, மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்குப் பாவம் இல்லை.
| 1635 | விதியானை
விண்ணவர் தாந்தொழு தேத்திய நெதியானை நீள்சடை மேனிகழ் வித்தவான் மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே. |
2.016.2 |
நீதி நெறிகளின் வடிவினன். தேவர்கள் வணங்கித் தமது நிதியாகக் கொள்பவன். நீண்ட சடைமீது வானத்து மதியைச் சூடியவன். வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரியைத் தனது பதியாகக் கொண்டவன். அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்.
| 1636 | எய்ப்பானார்க்
கின்புறு தேனளித் தூறிய இப்பாலா யெனையு மாள வுரியானை வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே. |
2.016. 3 |
வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகிய இன்பம் தரும் தேன் அளித்து இவ்வுலகத்துள்ளோனாய் அருள்புரிபவன். என்னையும் ஆட்கொண்டருளும் உரிமையன். செல்வங்களாக உள்ள மாடவீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். அவனை மேவி வழிபடுவார் வினைகள் நீங்கும்.
| 1637 | விடையானை
மேலுல கேழுமிப் பாரெலாம் உடையானை யூழிதோ றூழி யுளதாய படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே. |
2.016. 4 |
விடை ஊர்தியன். மேலே உள்ள ஏழு உலகங்களையும் இம்மண்ணுலகையும் தன் உடைமையாகக் கொண்டவன். பல்லூழிக்காலங்களாய் விளங்கும் படைகளை உடையவன். அடியவர் பண்ணிசை பாடி வழிபடும் திருமணஞ்சேரியை அடைந்து வாழ்பவன். அவனை அடையவல்லார்க்கு அல்லல் இல்லை.
| 1638 | எறியார்பூங்
கொன்றையி னோடு மிளமத்தம் வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச் செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே. |
2.016.5 |
ஒளிபொருந்திய கொன்றைமலர்களோடு புதிய ஊமத்தம் மலர்களை மணம் கமழும் தன் செஞ்சடை மீது பொருந்தச் சூடியவன். மான் கன்றை ஏந்திய கையினன். திருமணஞ்சேரியில் செறிந்து உறைபவன். அவனைப் புகழ்ந்து போற்ற வல்லவர்களை இடர்கள் அடையா.
| 1639 | மொழியானை
முன்னொரு நான்மறை யாறங்கம் பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி இழியாமை யேத்தவல் லார்க்கெய்து மின்பமே. |
2.016.6 |
முற்காலத்தே நான்மறைகளையும், ஆறு அங்கங்களையும் அருளியவன். அவற்றைப் பண்ணிசையோடு பிறர் பழியாதவாறு பகர்பவன். வேதாகம விதிகளைப் பின்பற்றி, வானவர்கள் வந்து துதிக்குமாறு திருமணஞ்சேரியில் விளங்குபவன். அத்தலத்தை இகழாமல் போற்ற வல்லவர்க்கு இன்பம் உளதாம்.
| 1640 | எண்ணானை
யெண்ணமர் சீரிமை யோர்கட்குக் கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப் பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே. |
2.016. 7 |
யாவராலும் மனத்தால் எண்ணி அறியப் படாதவன். தம் உள்ளத்தே வைத்துப்போற்றும் புகழ்மிக்க சிவஞானிகட்குக் கண் போன்றவன். மூன்று கண்கள் உடையவன். அட்டமூர்த்தங்களில் மண் வடிவானவன். சிறந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமையம்மையோடு கூடியவனாய் விளங்கும் அவ்விறைவன் புகழைப் பேசுவோர் பெரியோர் ஆவர்.
| 1641 | எடுத்தானை
யெழின்முடி யெட்டு மிரண்டுந்தோள் கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை மடுத்தார வண்டிசை பாடு மணஞ்சேரி பிடித்தாரப் பேணவல் லார்பெரி யோர்களே. |
2.016. 8 |
கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனின் அழகிய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்தவன். மாறுபாடற்ற செம்மை நிலையை உடையவன். வண்டுகள் தேனை மடுத்து உண்ணுதற்கு இசைபாடிச் சூழும் திருமணஞ்சேரியில் உறையும் அவ்விறைவன் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொள்வார் பெரியார்கள்.
| 1642 | சொல்லானைத்
தோற்றங்கண் டானு நெடுமாலும் கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி எல்லாமா மெம்பெரு மான்கழ லேத்துமே. |
2.016. 9 |
வேதாகமங்களைச் சொல்லியவன். உலகைப் படைக்கும் நான்முகன் திருமால் ஆகியோர்களாற் கற்றுணரப்படாத பெருமையன். தாம் அறிந்தவற்றைச் சொல்லித் தொழுது உயர்வுறும் அன்பர்களும் பெரிய தவத்தினை உடையவர்களும் தொழுது வணங்கும் திருமணஞ்சேரியில் உலகப் பொருள்கள் எல்லாமாக வீற்றிருக்கும் அப் பெருமான் திருவடிகளை ஏத்துவோம்.
| 1643 | சற்றேயுந்
தாமறி வில்சமண் சாக்கியர் சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே. |
2.016. 10 |
சிறிதேனும் தாமாக அறியும் அறிவு இல்லாத சமண புத்தர்களின் உரைகள் பொருளற்றனவாய் ஒழியும் வண்ணம் ஒப்பற்ற செம்பொருளாய் விளங்கும் சிவபெருமானை வற்றாத நீர்நிலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியை அடைந்து வழிபட்டு அவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்பவர்களை வினைகள் பற்றா.
| 1644 | கண்ணாருங்
காழியர் கோன்கருத் தார்வித்த தண்ணார்சீர் ஞானசம் பந்தன் றமிழ்மாலை மண்ணாரு மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி பண்ணாரப் பாடவல்லார்க் கில்லை பாவமே. |
2.016. 11 |
கண்களுக்கு விருந்தாய் அமையும் சீகாழிப் பதியில் விளங்கும் சிவபிரானின் திருவுள்ளத்தை நிறைவித்த இனிய புகழ்பொருந்திய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையை, வளம் நிறைந்த மண்சேர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியை அடைந்து பண் பொருந்தப்பாடிப் போற்றுவார்க்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமணஞ்சேரி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சூழ்ந்த, திருமணஞ்சேரியில், மணஞ்சேரி, விளங்கும், பண்ணிசை, உடையவன், அடைந்து, செம்மை, வினைகள், திருமணஞ்சேரியை, மணஞ்சேரிப், சூழப்பட்ட, வயல்களால், யோர்களே, மாவயல், அவ்விறைவன், மூன்று, தொழுது, சொல்லித், யுடையானை, வற்றாத, ரேத்து, கொண்டவன், விளங்குபவன், இன்பம், திருமுறை, திருமணஞ்சேரி, சூடியவன், செஞ்சடை, திருச்சிற்றம்பலம், நிறைந்த, அவனைப்

