முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.112.திருஆடானை
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.112.திருஆடானை

2.112.திருஆடானை
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆதிரத்தினேசுவரர்.
தேவியார் - அம்பாயிரவல்லியம்மை.
2681 |
மாதோர்கூறுகந் தேறதேறிய ஆதியானுறை யாடானை போதினாற்புனைந் தேத்துவார்தமை வாதியாவினை மாயுமே. |
2.112. 1 |
அம்பிகையை ஒருபாகமாக உகந்து கொண்டு விடைமேல் ஏறியருளும் முதல்வன் எழுந்தருளிய திருவாடானையை அடைந்து அவ்விறைவனை மலர்களால் அலங்கரித்தும் அர்ச்சித்தும் வழிபடுபவர்களின் வினைகள் அவர்களை வருத்தமாட்டாதனவாய் மாய்ந்துவிடும்.
2682 |
வாடல்வெண்டலை யங்கையேந்திநின் றாடலானுறை யாடானை தோடுலாமலர் தூவிக்கைதொழ வீடுநுங்கள் வினைகளே. |
2.112. 2 |
உலர்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி நின்று ஆடுதலை உடைய சிவபிரானது திருவாடானையை அடைந்து அவ்விறைவனை மலர்தூவித் தொழுதால் உங்கள் வினைகள் யாவும் அழியும்.
2683 |
மங்கைகூறினன் மான்மறியுடை அங்கையானுறை யாடானை தங்கையாற்றொழு தேத்தவல்லவர் மங்குநோய்பிணி மாயுமே. |
2.112. 3 |
மங்கை பங்கனும் மான் கன்றைக் கையில் ஏந்தியவனுமாகிய சிவபிரான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனைத் தம் கைகளைக் கூப்பிப் போற்றவல்லவர்களின் நோய்கள் கெடும் பிணிகள் (வினைகள் மாயும்).
2684 | சுண்ணநீறணி
மார்பிற்றோல்புனை அண்ணலானுறை யாடானை வண்ணமாமலர் தூவிக்கைதொழ எண்ணுவாரிட ரேகுமே. |
2.112. 4 |
சந்தனச் சுண்ணமும் திருநீறும் அணிந்த மார்பில் பூணநூலின்கண் மான்தோலைப் புனைந்துள்ள தலைமைக் கடவுளாகிய சிவபிரானுறையும் திருவாடானையை அடைந்து, அவ்விறைவனை அழகும் மணமும் கூடிய மலர்களைத்தூவிக் கைதொழ எண்ணுபவர்களின் இடர் ஏகும்.
2685 | கொய்யணிம்மலர்க் கொன்றைசூடிய ஐயன்மேவிய வாடானை கையணிம்மல ரால்வணங்கிட வெய்யவல்வினை வீடுமே. |
2.112. 5 |
கொய்யப் பெற்றதும் அழகியதுமாகிய கொன்றை மலர் மாலையைச் சூடிய தலைவன் எழுந்தருளிய திருவாடானையை அடைந்து அவ்விறைவனைக் கைகளால் மலர்தூவித்தொழுது வணங்குபவர்களின் கொடிய வல்வினைகள் அவர்களை விட்டொழியும்.
2686 |
வானிளம்மதி மல்குவார்சடை ஆனஞ்சாடல னாடானை தேனணிம்மலர் சேர்த்தமுன்செய்த ஊனமுள்ள வொழியுமே. |
2.112. 6 |
வானில் விளங்கும் இளம்பிறையைத் தமது திருமுடியில் சூடியவரும் நீண்ட சடைமுடியை உடையவரும், பஞ்ச கௌவியத்தை விரும்பி ஆடுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய திரு ஆடானையை அடைந்து அவ்விறைவர் திருவடிகளில் தேன் பொருந்திய அழகிய மலர்களைச் சேர்ப்பவர்களின் முன் வினைகளாக உள்ளனயாவும் ஒழியும்.
2687 |
துலங்குவெண்மழு வேந்திச்சூழ்சடை அலங்கலானுறை யாடானை நலங்கொண்மாமலர் தூவிநாடொறும் வலங்கொள்வார்வினை மாயுமே. |
2.112. 7 |
விளங்குகின்ற வெண்மழுவைக் கையில் ஏந்தி, சுற்றிய சடைமுடிமீது கொன்றை வில்வமாலைகளை அணிந்துள்ள 148 சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனை அழகும் மணமும் கொண்ட மலர்களைத் தூவித் தொழுது நாள்தோறும் அவன் திருக்கோயிலை வலம்வருவார் வினைகள் மாயும்.
2688 | வெந்தநீறணி மார்பிற்றோல்புனை அந்தமில்லவ னாடானை கந்தமாமலர் தூவிக்கைதொழும் சிந்தையார்வினை தேயுமே. |
2.112. 8 |
தீயிடைவெந்த திருநீற்றை அணிந்தவரும் மார்பின் கண் மான்தோலை அணிந்தவரும், தோற்றக் கேடு இல்லாதவருமான சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவரை மணமலர்களைத்தூவி வழிபடும் சிந்தனையை உடையவர் களின் வினைகள் தேயும்.
2689 | மறைவலாரொடு
வானவர்தொழு தறையுந்தண்புன லாடானை உறையும்ஈசனை யேத்தத்தீவினை பறையுநல்வினை பற்றுமே. |
2.112. 9 |
வேதங்களில் வல்ல அந்தணர்களோடு விண்ணில் உறையும் தேவர்களும் வந்து வணங்கும் நீர்வளம்சான்ற திருவாடானையில் உறையும் ஈசனை ஏத்தத் தீவினைகள் அழியும். நல்வினைகள் வந்துசேரும்.
2690 |
மாயனும்மல ரானுங்கைதொழ ஆயவந்தண னாடானை தூயமாமலர் தூவிக்கைதொழத் தீயவல்வினை தீருமே. |
2.112. 10 |
மாயவனாகிய திருமாலும், தாமரைமலர் மேலுறையும் நான்முகனும் கைகளால் தொழுது வழிபடுதற்குரியவனாகிய அந்தணன் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனைத் தூய மலர்களைத் தூவிக்கைகளால் தொழுபவர்களின் தீய வல் வினைகள் தீரும்.
2691 |
வீடினார்மலி வெங்கடத்துநின் றாடலானுறை யாடானை நாடிஞானசம் பந்தனசெந்தமிழ் பாடநோய்பிணி பாறுமே. |
2.112. 11 |
ஊழிக்காலத்து இறந்தவர்களின் உடல்கள் நிறைந்து எரிந்து வேகும் சுடுகாட்டுள் நின்று உருத்திரதாண்டவமாடும் இறைவன் உறையும் திருவாடானையை அடைந்து ஞானசம்பந்தன் அருளிய இச்செந் தமிழ் மாலையைப் பாடி வழிபடுபவர்களின் நோய்களும் பிணிகளும் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 110 | 111 | 112 | 113 | 114 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஆடானை - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அடைந்து, திருவாடானையை, உறையும், வினைகள், யாடானை, அவ்விறைவனை, சிவபெருமான், னாடானை, கையில், மாயுமே, எழுந்தருளிய, கைகளால், மணமும், திருச்சிற்றம்பலம், கொன்றை, திருமுறை, அணிந்தவரும், தொழுது, மலர்களைத், அழகும், மாயும், தூவிக்கைதொழ, றாடலானுறை, அவர்களை, திருஆடானை, நின்று, வழிபடுபவர்களின், அவ்விறைவனைத், அழியும், மார்பிற்றோல்புனை