சேர மன்னர் வரலாறு - செல்வக்கடுங்கோ வாழியாதன்
பொறை நாடு என்பது, மலையாள மாவட்டத்தில் உள்ள பொன்னானி, பாலைக்காடு, வைநாடு, வள்ளுவ நாடு, குறும்பர் நாடு, கோழிக்கோடு, ஏர் நாடு ஆகிய வட்டங்களைத் தன்கண் கொண்டது. பொன்னானி வட்டத்தில் உள்ள இரும்பொறை நல்லூர், வடக்கில் குறும்பர் நாடு முதல் தெற்கில் பொன்னானி வட்டம் வரையில் பொறை நாடு பரந்திருந்தமைக்குச் சான்று பகர்கிறது. மேலும், இந் நாடு கிழக்கிற் கொங்கு நாட்டில் பூவானியாறு வரையிற் பரந்திருந்தது. பவானிக் கருகில் காவிரியோடு கலக்கும் பூவானி யாறும், அவினாசி வட்டத்திலுள்ள இரும்பொறை யென்னும் ஊரும் பொறை நாட்டின் பரப்புக்கு வரம்பு காட்டுகின்றன.
இப் பொறை நாட்டில், குறும்பர் நாட்டுப் பகுதியில், மாந்தரம் என்றொரு மலைமுடியும் அதனை யடுத்து மாந்தரம் என்றோர் மூதூரும் உண்டு. அவ் வூரைத் தலைநகராகக் கொண்டு வேந்தர் சிலர் ஆண்டு ‘ வந்தனர். அவர்களும் பொறை நாட்டரசர்களேயாதலால், மாந்தரன் என்றும், மாந்தரம் பொறையன் என்றும், மாந்தரம் சேரல் இரும்பொறை என்றும் சான்றோர்களால் அவர்கள் வழங்கப்பெற்றனர். மாந்தரம் மாந்தை எனவும் வழங்கிற்று[1]. தொண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் இரும் பொறை என வழங்கப்பெற்றனர். வள்ளுவ நாட்டுப் பகுதியில் இருந்த ஒரு கிளையினர் கடுங்கோ எனப்பட்டனர். இவர்களின் வேறாகக் குட்டுவர், குடக்கோ என இரு கிளை யுண்டென்பது முன்பே கூறப்பட்டது. இவற்றோடு தொடர்புடைமை தோன்றக் குடக்கோச் சேரமான், குட்டுவன் சேரல் இரும்பொறை என்றும், மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்றும் பிறவாறும் கூறிக் கொள்வது மரபு.
இவ் வேந்தர்கள், இமயவரம்பன் நெடுஞ்சேராதன் காலத்துக்கு முன்பிருந்தே , சேர நாட்டில் இருந்து வரும் தொன்மையுடையராவர், மாந்தரஞ்சேரர்களுள் மாந்தரம் பொறையன் கடுங்கோ என்பவன் மிக்க பழையோனாகக் காணப்படுகின்றான். செங்குட்டுவன் காலத்தில் விளங்கிய பரணர் என்னும் சான்றோரால், இம் மாந்தரம் பொறையன் இறந்த காலத்தில் வைத்துக் குறிக்கப்படும் கின்றான்; அதுவே இதற்குப் போதிய சான்றாகிறது.
இந்த மாந்தரன், உயர்ந்தோர் பரவும் ஒள்ளிய குணம் படைத்தவன். அப் பகுதியில், அவன் காலத்தில் விளங்கிய வேந்தருள், அவனே மேலோனாகக் கருதப் பட்டான். நிறையருந் தானையும் பெருங்கொடை வன்மையும் அவன்பால் சிறந்து விளங்கின. இவனைப் பாடிச் சென்ற இரவலர் பெரும் பொருளும் பெரு மகிழ்ச்சியும் கொண்டே திரும்புவர். ‘மந்திரம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற, குறையோர் கொள்கலம் போல உவ இனி வாழி நெஞ்சே[2]’ என்று பரணர் பாராட்டிக் கூறுகின்றனர். இவனது ஆட்சியில், மழை வளம் தப்பாவாறு நாளும் கோளும் உரிய விடத்தில் நின்றன. நாட்டில் எவ்வகை அச்சமும் மக்கட்கு ஏற்படவில்லை; எல்லோரும் இன்பமாக வாழ்ந்தனர். மாந்தரன் தனக்குரிய கல்வி முற்றும் குறைவறக் கற்று உயர்ந்தான். பகைவர் வலியைக் கடந்த வாள் வேந்தர் பலர், அவனுக்கு அடங்கி, அருங்கலங் களையும் களிறுகளையும் திறையாகத் தந்து அவன் ஆணைவழி நின்றனர். நடுநிலை திறம்பாத செங் கோன்மையால் அவன் கெடாத புகழ் பெற்று விளங்கினான். அவனது புகழ் விசும்பு முற்றும் பரந்திருந்தது. அவனுடைய வாளாற்றலைப் பகைவர் நன்கு தெரிந்தனர். அவனை அறக்கடவுள் துணையாய் நின்று வாழ்த்தியது. அதனால், அவனை “அறன் வாழ்த்த நன்கு ஆண்ட விறல் மாந்தரன்[3]” என்று சான்றோர் பரவினர்.
மாந்தரம் பொறையன் கடுங்கோவின் அரசியற் செயல்கள், இவற்றின் வேறாக நூல்களில் ஒன்றும் காணப்படவில். அதற்குப்பின், ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறைஎன்பான் சேரமானாய் விளக்க முற்றான். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முதலியோர் காலத்தில் கொங்கு நாட்டில் வடக்கே பூவானி யாறு வரையும், கிழக்கே கொங்கு வஞ்சி (தாராபுரம்) வரையும் பரவியிருந்த பொறை நாட்டைக் கீழ்க் கொங்கு நாட்டுக் கருவூர் வரையில் பரப்பிய முதற் சேரமான் இந்த ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையாவன். அக் காலத்தே, அப் பகுதியையும் காவிரிக்கு வடகரை யிருந்தனர். கோப்பெருஞ் சேரல் அச் சோழ வேந்தருடன் ஒள்ளிய வாட்போர் செய்து கீழ்க் கொங்கு நாட்டையும் அதற்கு நேரே காவிரியின் வடகரையில் கொல்லிமலை விச்சி (பச்சை) மலைவரையில் இருந்த மழநாட்டையும் வென்று மேம்பட்டான். பின்னர்ச் சோழரோடு உறவு கொண்டு கருவூர்க்கு அண்மையில் ஓடும் ஆண் பொருநை யாற்றை வரம்பறுத்து அதன் கரையிலிருந்த ஊரின் பழம் பெயரை மாற்றிக் கருவூர் என்ற பெயரையும், அந் நகர்க்கு நேர் வடகரையில் விளங்கிய மழநாட்டுப் பேரூரின் பெயரை மாற்றி முசிறியென்ற பெயரையும் இட்டு, இவை தன் சேரநாட்டிற் குரியவை என இன்றுகாறும் விளங்குமாறு செய்தான். இடைக்காலக் கல்வெட்டுகள் பலவும், கருவூரைக் கருவூரான வஞ்சிமா நகரம்[4] என்றும், அமராவதி யென்று இப்போது மருவி வழக்கும் ஆற்றை ஆன்பொருநை[5] என்றும் கூறுகின்றன. இச் செயல்களால் இவ் வேந் தனைச் சான்றோர் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருச் சேரல் இரும்பொறை என வழங்கலுற்றனர். கருவூரும் முசிறியும் சேர நாட்டின் கடற்கரைப் பெரு நகரங்கள் என்று முன்பே கூறினோம்; அவற்றின் நினைவாகவே, காவிரிக்கரையில் கருவூரும் முசிறியும் பெயர்பெற்றன.
- ↑ 1. குறுந். 166.
- ↑ 2. அகம். 142.
- ↑ 3. பதிற். 90.
- ↑ 4. A. R. No. 166 of 1936-7
- ↑ 5. Ibid 335 of 1927 - 8
தேடல் தொடர்பான தகவல்கள்:
செல்வக்கடுங்கோ வாழியாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - மாந்தரம், என்றும், சேரல், நாடு, பொறை, இரும்பொறை, பொறையன், கொங்கு, நாட்டில், மாந்தரன், காலத்தில், அவன், கருவூர், ஒள்வாள், விளங்கிய, கொண்டு, பொன்னானி, குறும்பர், பகுதியில்