சேர மன்னர் வரலாறு - செல்வக்கடுங்கோ வாழியாதன்
வடபுலத்துப் பகைவர்கள் அவ்வப்போது புகுந்து செய்த அரம்புகளால் சீரழிந்த இடங்களில், பல உயர்குடியினர் தளர்ந்து சூட்ட நாட்டிலும் பொறை நாட்டிலும் குடிபுகுந்து வருந்தினர். அவர்கள் பால் அருள் பெருகிய சேரமான், நாட்டில் அவர்கள் இனிது வாழ்தற்கென ஊர்களை ஏற்படுத்தி, அவர்கட்கு அந் நிலையை உண்டுபண்ணிப் பகைவர்கள் இருந்த இடம் தெரியாதபடிப் பொருது அவர்களை வேரோடும் கெடுத்தான். இச் செயலை இவனைப்பற்றிக் கூறும் பதிகம், “நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி வெருவரு தானைகொடு செருப் பல கடந்து” சிறப்புற்றான் எனப் பாராட்டிக் கூறுகின்றது.
செல்வக்கடுக்கோ வாழியாதன், இவ்வாறு போர்த் துறையில் மேன்மை எய்தியதற்கு இவனது படைப் பெருமையே சிறந்த காரணமாகும். யானைப் படையிலுள்ள வீரர்கள், அவற்றின் பிடரியிலிருந்து கழுத்துக் கயிற்றிடைத் தொடுத்த தம் காலால் தம்முடைய குறிப்பை யுணர்த்தித் தாம் கருதிய வினையை முடித்துக் கொள்ளும் சால்புடையராவர் குதிரை மறவர் தம் காலடியில் அணிந்த இருப்பு விளிம்பால் தமது கருத்தைக் குதிரைகட்கு உணர்த்திப் போர்க்களத்தில் பகைவர் இருக்குமிடம் தெரிந்து செலுத்தி வெறி கொள்ளும் திறல் வாய்ந்தவர். வேலேந்தும் வீரர் கல்லொடு பொருது பயின்ற வலிய தோளையுடையர். அவர்களும் பனங்குருத்துகளோடு குவளைப்பூ விரவித் தொடுத்த கண்ணி சூடி மதம் செருக்கித் திகழ்வர்[14] போர் யானைகளின் மேல் வானளாவ உயர்ந்திருக்கும் கொடிகள், மலையினின்று வீழும் அருவி போலக் காட்சி நல்கும். அவற்றின் முதுகின் மேல் கட்டப்பெற்றிருக்கும் முரசுகள், காற்றால் அலைப்புண்ட கடல் போல் முழக்கம் செய்யும். போர்க்களத்திற் பகைவர்மேற் பாய்ந்தோட உயர்ந்த குதிரைப் படையும், எறிந்து சிதைந்த வேலேந்தும் வேற்படையும், பன்முறையும் போர் செய்து பயின்ற வீரர் திரளுமே பகைவர் படைக்கடலைக் கலக்கி மலைபோற் பிணங்கள் குவியப் பொருது அழிக்கும் பொற்பு வாய்ந்தன எனப் புலவர் பாடிப் புகழ்ந்துள்ளார்.
உழிஞைப் போர் செய்யுங்கால், கடுங்கோவின் படைமறவர், “இந்த மதிலை எறிந்த பின்னன்றி உணவு கொள்வதில்லை” என வஞ்சினங் கூறி அச் சொல் தப்பா வண்ணம் நாள் பல கழியினும் உண்ணாமேயிருந்து பொரும் பெரிய மனவெழுச்சியுடையர். இவ்வாறே பகைவர் உறையும் ஊர்களையும் நாடுகளையும் கைக் கொண்டாலன்றி உறங்கோம் என உறுதி கொண்டு பன்னாள் உறக்கத்தையும் விட்டொழுகுவர். படைத் தலைவர்களின் உடம்பை நோக்கின், அது போர்ப்புண் வடு நிறைந்து இறைச்சி விற்பார் இறைச்சியை வெட்டுதற்குக் கீழே வைத்துக் கொள்ளும் அடிமணை போலக் காணப்படும்; அவ் வடு தோன்றாதபடி நறிய சந்தனம் பூசிக்கொள்வது அவரது மரபு.
இனி, அறத்துறையிலும் இச் சேரமான் சிறந்து விளங்கினான். மறத்துறையில் களவேள்வி செய்தது போல், அறத்துறையில் அந்தணர் பலரைக் கொண்டு மறை வேள்விகள் பல செய்தான். திருமால் பால் பேரன்பு கொண்டு அவனைத் தன் மனத்தின்கண் வைத்து வழிபட்டான். திருமால் கோயில் வழிப்பாட்டுக்கென ஒகத்தூர் என்னும் நெல்வளம் சிறந்த ஊரை இறையிலி முற்றூட்டாக நல்கினான். இவன் அறநூல் வல்ல அந்தணர்களுக்குப் பெரும் பொருளை நீர்வார்த்துக் கொடுப்பான்; அந் நீர் ஆறாகப் பெருகியோடி அரண்மனை முற்றத்தைச் சேறாக்கிவிடும்; அம் முற்றத் திற்குள் அந்தணரும் பரிசிலரும் இரவலரும் எளிதில் புகுதல் கூடுமேயன்றிப் பகைவர் கனவினும் புகமுடியாது என்று புலவர்கள் புகழ்ந்து கூறுகின்றனர்.
இக் கடுங்கோவுக்கு இசையிலும் கூத்திலும் மிக்க ஈடுபாடு உண்டு. நகர்ப்புறத்திலிருக்கும் புறஞ்சிறைத் தெருவில் வருவது தெரியினும், கூத்தர்களை அன்போடு வருவித்து அவர்களுக்குச் செய்யப்பட்ட தேர்களையும் குதிரைகளையும் அழகுற அணிந்து நல்குவது வழக்கம்.
இத்தகைய செயல்களால், அறவேள்விகளை முன்னிருந்து செய்து முடிக்கும் வேதியர் தலைவனிலும் செல்வக் கடுங்கோவின் அறநூலுணர்வு மிக்கிருந்தது. அதற்கேற்ப அவனது உள்ளமும் வளம் பெற்றிருந்தது. அதனால் அவனது புகழ் தமிழகம் முழுவதும் நன்கு பரவியிருந்தது. நல்லொளி நிகழும் பண்பும் செய்கையும் முடையோர் எங்கே இருக்கின்றனரோ அங்கே நல்லிசைச் சான்றோர் நயந்து சென்று சேர்வது இயல்பு. அதனால் தமிழகத்தில் மேன்மையுற்றிருந்த அந்தணரும் சான்றோரும் கடுங்கோவை நாடி வருவாராயினர்.
அந் நாளில் குடநாட்டில் குன்றின் கட்பாலி என்ற ஊர் ஒன்று இருந்தது. இப்போது அது கோழிக் கோட்டுப் பகுதியில் பாலிக்குன்னு என்ற பெயருடன் விளங்குகிறது அவ்வூரில் ஆதனார் என்னும் நல்லிசைச் சான்றோர் வாழ்ந்தார். அவரைக் குன்றின்கட் பாலி ஆதனார் என அக் காலத்தார் வழங்கினர். பிற்காலத்தே குன்றின்கட் பாலி என்பது குண்டுகட்பாலியென ஏடுகளில் திரிந்து வழங்குவதாயிற்று. அப் பகுதி தமிழ் நலம் குறைந்து கேரளமான காலையில் பாலிக்குன்னு எனச் சிதைந்தது.
பாலியாதனார் வஞ்சி நகர்க்கண் இருந்து அரசு புரிந்து, சான்றோர் பரவும் தோன்றலாய் விளங்குவது தெரிந்து, செல்வக்கடுங்கோ வாழியாதனைக் காணச் சென்றார். இடையில் அரசியற்றலைவர் சிலரைக் கண்டார். அவர்கள் இவர் குடநாட்டவர் எனத் தெரிந்து இவரைத் தொடக்கத்தே வேந்தனிடம் நேரிற் செல்லாவாறு தடுத்தனர். வடவருள் ஒருவராய்க் குடநாட்டவர் போல உருக்கொண்டு வந்திருக் கின்றாரோ என அவர்கள் ஐயுற்றனர். ஆதனார், செல்வக்கடுங்கோவின் மறமாண்பையும் அறவுணர்வை யும் கொடைச் சிறப்பையும் உடன் வந்த கிணைப் பொருநன் இயக்கிய பறையிசைக் கேற்பப் பாடினர். அதன்கண், கடுங்கோவை, “எங்கோன்” என்று பேரன்போடு பாராட்டி, “பகை மன்னர் பணிந்து திறையாகக் கொடுத்த செல்வத்தை நகைப்புல வாணராகிய பரிசிலர்க்கும் இரவலர்க்கும் ஈந்து அவர் நல்குரவை அகற்றி மிகவும் விளங்குக” என்று பாடினர். அது கேட்டதும் அவர்கள் தாம் ஏந்திய குடையைப் பணிந்து அவர்க்கு வணக்கம் செய்து வேந்தனிடம் விடுத்தனர். விடுத்தனர்.
- ↑ 14. பதிற். 69.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செல்வக்கடுங்கோ வாழியாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - பகைவர், கொண்டு, சான்றோர், செய்து, ஆதனார், போர், கொள்ளும், தெரிந்து, பொருது