சேர மன்னர் வரலாறு - செல்வக்கடுங்கோ வாழியாதன்
கபிலர் வாழ்ந்த காலத்தில், சோழ பாண்டிய நாடுகளில் சிற்றரசர்களும் குறுநிலத் தலைவர்களும் சிறந்திருந்தனரே யன்றி, முடிவேந்தர் எவரும் புலவர் பாடும் புகழ் கொண்டு விளங்கவில்லை. இந் நிலையைக் கபிலர் பாடிய பாட்டுகளைக் காண்போர் நன்கு காணலாம். இந் நிலையால் நாட்டில் வாழ்ந்த பாணர், கூத்தர், பொருநர், புலவர் முதலிய பலரும் செல்வக் கடுங்கோவின் திருவோலக்கம் நோக்கி வருவாராயினர். அவர்கட்கு ஏற்ற வரிசையறிந்து வரையா வள்ளன்மை செய்த கடுங்கோவின் புகழ்க்கு எதிரே அச் சோழ பாண்டியர் பெயரும் பிற செல்வர் சிறப்பும் விளங்கித் தோன்றவில்லை. இதனைப் புலமைக் கண்கொண்டு நோக்கிய கபிலர், வேந்தனை நோக்கி, “சேரலர் பெரும் , விசும்பின்கண் ஞாயிறு தோன்றி ஒளிருங்கால், அங்குள்ள விண்மீன்கள் ஒளியிழந்து அஞ் ஞாயிற்றின் ஒளியில் ஒடுங்கிவிடுகின்றன; அதுபோலவே, நின்புகழ் ஒளியில் ஏனைவேந்தர் அனைவரும் ஒளியிழந்து ஒடுங்கிவிட்டனர்; பரிசிலர் கூட்டம் நின்னை நோக்கி வந்த வண்ணம் இருக்கிறது; அதே நிலையில் அக் கூட்டத்திடையே நின்பால் வந்தபின் பசியும் இல்லை; பசியுடையோரைக் காண்பதும் அரிது; அம் மகிழ்ச்சி யாலன்றோ நின்னை இப் பாசறை இடத்தே காண வந்தேன்[28]” என்று பாடி அவனை மகிழ்வித்தார். வந்தோர் பலருக்கும் விடை கொடுத்த கடுங்கோ - கபிலரை மட்டும் தன்னோடே இருத்திக் கொண்டான். இருந்து வருகையில் ஒருநாள், தான் வந்த வினைத் திறத்தைக் கூறலுற்று, “சான்றீர், என் நாட்டவர்க்குக் கடலும் மலையும் காடும் நின்று போதிய இடம் நல்காமையால், சிறிதாயிருக்கும் அதனை விரிவு செய்தல் வேண்டி இந் நாட்டிற்கு வந்தேன்; இங்கே இடம் பெற்றிருந்த வேந்தர் இந் நிலம் எல்லோர்க்கும் பொது என்று சொல்லிப் போர் தொடுத்தனர். அது பொறாது இவ் வினையை மேற்கொண்டு வருவது கடனாயிற்று” என்று சொல்லி வினைக்கு ஆவன செய்யலுற்றான். கபிலர் வினை வேண்டுமிடத்து அறிவு உதவி வந்தார். இரண்டொரு நாட்குப்பின் ஒரு நாள் வெயில் வெம்மை மிகுதியாக இருந்தது. அதனைப் பொறாமல் கபிலர் வெதும்புவதைக் கடுங்கோ கண்டு விளையாட்டாகச் “சான்றீர், இவ் வெயில் என்னைப் போல் வெம்மை செய்கிறதன்றோ ?'’ என்றான். “வேந்தே, இந்த ஞாயிறு நின்னைப் போல்வது என்றற்கு என் நா இசையாது; இதன் பால் பல குறைகள் உண்டு” என்று சொல்லி, ஞாயிற்றை நோக்கி, “இடம் சிறிது என்ற ஊக்கத்தாலும், போகம் வேண்டியும், நிலம் எல்லார்க்கும் பொது என்னும் சொல் வலியுடையார்க்கு ஏலாது என் கொள்கையாலும் அறப்போர் புரியும் தானையை யுடைய எங்கள் சேரர் பெருமானை, ஏ, ஞாயிற்றே! நீ எவ்வாறு ஒத்தல் கூடும்? நீ பொழுது வரையறுக்கின்றாய், புறங்காட்டி மறைகின்றாய்; நாடோறும் பொழுது தோறும் மாறி மாறி வருவாய்; மாலைப் போதில் மலையில் ஒளிப்பாய்; சேரமான் பால் பொழுது வரையறுத்தல், புறங்காட்டி இறத்தல் முதலிய குற்றம் சிறிதும் இல்லையல்லவா? அவ்வாறு இருக்கவும் நீ நாணமின்றி, ‘பகல் விளங்குதியால் பல்கதிர் விரித்தே[29]”, என்று உள்ளுதோறும் இன்பம் ஊறும் தெள்ளிய தமிழ்ப்பாட்டைப் பாடினார்.
பின் பொருநாள், கபிலர் தானைமறவர் சிலரைக் கண்டார். அவரோடு அளவளாவியதில், வினைமுடியும் வரை அவ் வினைமேல் நின் அவரது நினைப்பு அது முடிந்ததும், தத்தம் மனை மேல் படர்ந்திருந்தமை தெரிந்தது. அவர், செல்வக்கடுங்கோவைக் கண்டு, “வேந்தே , நின் தானை மறவரைக் கண்டேன். பகைவர் மதிலை அழித்தல்லது உணவு கொள்வதில்லை என வஞ்சினம் கூறி, அது முடியுங்காறும் உண்ணாதேயிருந்து முடிந்த பின்பே உண்டொழுகும் உரவோராக இருக்கின்றனர்; பகைவர் ஊரைக் கொண்டன்றி மீள்வதில்லை என உறுதி கொண்டிருந்த அவர்கள், அவ்வூர்களைக் கைக்கொண்டு மகிழ்கின்றனர்; அதனோடமை யாது, வேறு செய்வினை யாது என் வினைமேல் நினைவுறுகின்றனர். ‘இவர்கட்குத் தம் மனைவாழ்வில் நினைவு செல்லாதோ?’ என்ற ஐயம் என் நெஞ்சில் எழத் தொடங்கிற்று. பகைவர் களிறுகளைக் கொன்று அவற்றின் கோடுகளைக் கைக்கொண்டு மனையடைந்து, பின்னர் அவற்றைக் கள்ளுக்கு விற்றுண்டு. உத்தரகுருவில் வாழும் உயர்ந்தோரைப் போல் அச்சம் அறியாத இன்ப வாழ்வில் இனிது இருக்கற்பாலர். நின் பிரிவை ஆற்றாமல் வருந்தி, வினைமுற்றி மீண்டு நீ வந்து கூடும் நாளைச் சுவரில் எழுதி விரல் சிவந்து வழிமேல் விழி வைத்திருக்கும் அணங்கெழில் அரிவையர் மனத்தைப் பிணிப்பது நின் மார்பே. நின் தாணிழலில் வாழும் வீரர் மார்பும் அப் பெற்றியது தானே” என்று கருத்து அமையக் கூறினர்[30]. அவர் கருத்தை அறிந்த வேந்தன் தன் நகர்க்குத் திரும்பினான். வாகை சூடிச் சிறக்கும் அவன் தானையும் மகிழ்ச்சியுடன் மீண்டது.
செல்வக் கடுங்கோ வஞ்சிநகர்க்கண் இருக்கையில் வேனிற் காலம் வந்தது. சேரவேந்தர்க்குரிய முறைப்படி, வேந்தன் மலைவளம் விரும்பிப் பேரியாற்றங் கரையில் நிற்கும் நேரி மலைக்கு அரசியற் சுற்றம் சூழ்வரச் சென்றான். சேர வேந்தர் தங்கிய அவ்விடம் இப்போது நேரிமங்கலம் என்ற பெயருடன் இருக்கிறதென்பது நினைவுகூரத் தக்கது. மலைவாணர், இனியவும் அரியவு மாகிய பொருள்களைக் கொணர்ந்து தந்து சேரவரசனை மகிழ்வித்தனர் அங்கே அவனது திருவோலக்கத்துக்குக் கபிலரும் வந்து சேர்ந்தார்.
கடுங்கோவின் திருவோலக்கத்தில் ஒருபால் அரசியற் சுற்றத்தார் இருந்தனர்; ஒருபால், தானைத் தலைவர், ‘எந்தக் கணத்திலும் மக்கள் இறப்பது உண்மை; அதனால், புகழ் நிற்கப் பொருது இறப்பதே வாழ்க்கையின் பயன்’ என எண்ணும் காஞ்சியுணர்வு பெற்றுக் காட்சி நல்கினர். ஒருசார் விற்படைத் தலைவர், ஒருபுடை நண்புடைய வேந்தர் இருப்பக் கடுங்கோவின் அருகில் மலர்ந்த கண்ணும் பெருத்த தோளும் கொண்டு, கடவுட் கற்பும் நறுமணங் கமழும் நெற்றியும் விளங்க, வேளாவிக் கோமான் பதுமன் கூத்தும் நவிற்றிப் பரிசில் பெற்று மகிழ்ந்தனர். இவற்றைக் கண்ட கபிலர், “பூண் அணிந்து விளங்கிய புகழ்சால் மார்ப, நின் நாண்மகிழ் இருக்கை இனிது கண்டிரும்[31]” என்று பாடினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செல்வக்கடுங்கோ வாழியாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - கபிலர், நின், நோக்கி, கடுங்கோவின், பகைவர், கடுங்கோ, வேந்தர், பொழுது