சேர மன்னர் வரலாறு - செல்வக்கடுங்கோ வாழியாதன்
செல்வக் கடுங்கோ, ஆதனாரை அன்போடு வடவேற்று அவர் பாடியவற்றைக் கேட்டு மிக்க உவகை கொண்டு குன்று போலும் களிறும், கொய்யுளை அணிந்த குதிரையும், ஆனிரையும், நெல்லம் பிறவம் நிரம்பத் தந்து மகிழ்வித்தான். அவன் செயலைக் கண்ட ஆதனார் வியப்பு மிகுந்து, “பூழியர் பெருமகனான எங்கள் செல்வக் கடுங்கோ , வஞ்சி நகரின் புறநிலை அலைக்கும் பொருநை யாற்று மணலினும், அங்குள்ள ஊர்கள் பலவற்றினும் விளையும் நென்மணியினும் பல்லூழி வாழி[15]” என்று வாழ்த்திய பாட்டொன்றைப் பாடி அவன்பால் விடை பெற்றுச் சென்றார்.
அக் காலத்தே, பாண்டி நாட்டின் வடபகுதியில் உற்ற பறம்பு நாட்டின் தலைவனான வேள்பாரிக்கு உயிர்த் தோழராக விளங்கிய கபிலர் என்னும் சான்றோர், அப் பாரி இறந்ததனால், அவனுடைய மகளிர் இருவரையும் மணஞ்செய்து தர வேண்டிய கடமையைத் தான் ஏற்றுக் கொண்டு, பாரி மகளிரை. மணந்து கொள்ளுமாறு சில வேந்தர்களை வேண்டினர். அவர்கள் மறுக்கவே, கபிலர், அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு திருக்கோவலூர்க்குச் சென்று பார்ப்பாரிடையே அவர்களை அடைக்கலப்படுத்தி அரசிளஞ் செம்மல்களை நாடிச் சென்றார். பார்ப் பார்க்கும் அவர்களுடைய பொருட்கும் யாரும் தீங்கும் செய்வது இல்லையாதலால், கபிலர் பாரி மகளிரை அவரிடம் அடைக்கலப்படுத்தினார்.
அப்போழ்து, அவர் சேரநாட்டு வேந்தனான செல்வக் கடுங்கோ, வாழியாதன் சிறப்பைச் சான்றோர் சிலர் எடுத்தோதக் கேட்டு, அவனது சேர நாடு அடைந்தார். அந் நாளில் வாழ்ந்த நல்லிசைச் சான்றோருள், “செறுத்த செய்யுள் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன், இன்று உளனாயின் நன்றுமன்[16]” என வேந்தராலும், உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்[17]” என்று சான்றோர் களாலும், “பொய்யா நாவிற் கபிலன்[18]” என நல்லிசைப் புலமை மெல்லியலாராலும் புகழ்ந்தோதப்படும் பெருஞ் சிறப்புற்று விளங்கியவர் கபிலர்.
கபிலர் சேர நாட்டுக்குப் புறப்பட்ட போது, செல்வக் கடுங்கோ வஞ்சி நகரில் இல்லை; நாட்டில் சிற்றரசர் சிலரிடையே நிகழ்ந்த போர்வினை குறித்துச் சென்று பாசறையில் தங்கியிருந்தான். கபிலர் சென்றடைந்த போது போர் முடிந்துவிட்டது. பொருத வேந்தர் கடுங்கோவைப் பணிந்து திறை நல்கினர். போர் வினையில் புகழ்பெற்ற தானை மறவரும் போர்க்களம் பாடும் பொருநர், பாணர், கூத்தர், புலவர் முதலிய பரிசிலர் பலரும் வேந்தன்பால் பரிசில் பெற்றனர். அவனது அத் திருவோலக்கத்துக்குக் கபிலர் வந்து சேர்ந்தார். அவரது வருகை கேட்ட சேரமான் மகிழ்ச்சி மீதூர்ந்து, காலின் ஏழடி முன் சென்று வரவேற்று, அன்பும் இனிமையும் கலந்த சொல்லாடி மகிழ்ந்தான்.
பின்னர், அவன் வேள்பாரியின் புகழையும் மறைவையும் கபிலர்க்கு உண்டாகிய பிரிவுத் துன்பத்தையும் பிறவற்றையும் பற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு, “சான்றீர், வேள்பாரி இருந்திருப்பானாயின், எங்கள் நாட்டுக்கு உங்கள் வருகை உண்டாகாதன்றோ?" என்றொரு சொல்லைத் தன் உண்மையன்பு விளங்க இனிது எடுத்துரைத்தான். வேந்தராயினும் வினைவல் ராயினும் யாவராயினும் சான்றோர் பரவும் சால்புடைய ராயின், அவரைக் கண்டு பாடிப் புகழ்வது, நல்விசை விளைக்கும் சொல்லேருழவர் இயல்பு என்பதை மறந்து சேரமான் கூறியது கபிலர்க்கு வியப்பைத் தந்தது ஆயினும், அதனை அவ்வாறே கூறாமல், இளையனான செல்வக் கடுங்கோவின் செம்மலுள்ளம் மகிழ்வும், தமது கருத்து விளங்கவும் உரைக்கத் தொடங்கி, முகத்திற் புன்னகை தவழ, “வேந்தே, எங்கள் தலைவனான வேள்பாரி விண்ணுலகம் அடைந்தான்; என்னைக் காத்தளிக்க வேண்டும் என யான் குறையிரந்து வந்தே னில்லை. ‘ஈத்தற்கு இரங்கான், ஈயுந்தோறும் இன்பமே கொள்வன்; அவ்வகையிலும் பெருவள்ளன்மையே உடையன் எனச் சான்றோர் நின்னைப் பற்றிக் கூறினர்; அந்த நல்லிசையே, என்னை ஈர்த்துக் கொணர்ந்து, நின்னால் கொன்று குவிக்கப்பட்ட களிறுகளின் புலால் நாறும் இப் பாசறைத் திருவோலக்கத்திற் சேர்த்துளது; அதனால்தான் யான் வந்துளேன்[19] என்ற கருத்தமைந்த விடையொன்றைப் பாட்டுருவில் கூறினர். அதன் சொன்னலமும் பொருணலமும் செல்வக் கடுங்கோவின் உள்ளத்தைக் கபிலர்பால் பிணிந்து விட்டன; தன்னோடே இருக்குமாறு வேண்டி அவரைத் தன் வஞ்சி நகர்க்கு அழைத்துச் சென்றான்.
வஞ்சிமா நகர்க்கண் இருந்து வருங்கால், செல்வக் கடுங்கோ , வடவேந்தர் இருவரை ஒரு முற்றுகையில் தமிழ்ப்படை செறித்து வென்றதும், அவர்களாற் கைவிடப்பட்ட தானை மறவரை ஆட்கொண்டதும் சான்றோர் சொல்லக் கபிலர் கேட்டுக் கடுங்கோவின் பெருந்தன்மையைப் பாராட்டி, “வேந்தே, நீ கண்டனையேம் என்று புகலடந்த மறவரை உங்கள் சேரர் குடிக்குரிய முறைமையுடன் ஆண்டாய்; அதனால், உலகத்துச் சான்றோர் செய்த நல்லறம் நிலைபெறும் என்பது மெய்யானால், நீ வெள்ளம் என்னும் எண் பலவாகிய ஊழிகள் வாழ்வாயாக[20]” என வாழ்த்தினார்.
- ↑ 15. புறம். 387.
- ↑ 16. புறம். 53.
- ↑ 17. அகம். 78.
- ↑ 18. புறம். 174.
- ↑ 19. பதிற். 61.
- ↑ 20. பதிற். 63.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செல்வக்கடுங்கோ வாழியாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - கபிலர், சான்றோர், செல்வக், கடுங்கோ, கபிலன், கடுங்கோவின், சென்று, கொண்டு, வஞ்சி, எங்கள், பாரி