சேர மன்னர் வரலாறு - செல்வக்கடுங்கோ வாழியாதன்
சின்னாள்கள் கழித்தன. கபிலருக்குப் பாரி - மகளிரின் நினைவு வந்தது. மலையமான் நாட்டை நோக்கிச் செல்லும் கருத்துட் கொண்டார். தன் னிடத்தில் பேரன்பு செலுத்தும் கடுங்கோவுக்கு அதனை வெளிப்படக் கூறுதற்கு அஞ்சிக் குறிப்பாகத் தெரிவிக்க நினைத்தார். சேரமான் கொடைமடத்தை ஏனைச் சான்றோர்க்குத் தெரிவிப்பது போல, “சான்றீர், நீவிர் வேண்டுமாயின், செல்வக் கடுங்கோவைச் சென்று காண்மின்; அவன் பகைவர்பால் பெற்ற யானைகளை மிகைபட நல்குவான்; தன் நாட்டில் விளையும் நெல்லை, மரக்காலின் வாய் விரிந்து கெடுமளவு மிகப்பலமாக அளந்து தருவான்[32] என்ற கருத்து அடங்கிய பாட்டொன்றைப் பாடினர். பிறிதொருகால், பாணன் ஒருவனைச் செல்வக் கடுங்கோ, வாழியாதனிடத்தில் ஆற்றுப் படுக்கும் பொருளில், “பாணனே, எங்கள் பெருமானான செல்வக்கடுங்கோ, போர்ப்புகழ் படைத்த சான்றோர்க்குத் தலைவன், நேரி மலைக்கு உரியவன்; அம் மலையில் மலர்ந்திருக்கும் ‘காந்தட் பூவின் தேனையுண்ட வண்டு பறக்க இயலாது அங்கேயே சூழ்ந்து கிடக்கும். நீ அவன்பால் சென்றால், உனக்கும் உன் சுற்றத்தாருக்கும் கொடுமணம் என்ற ஊரில் செய்யப்படும் அரிய அணிகலங்களையும், பந்தர் என்னும் மூதூரிற் செய்யப்படும் முத்து மாலைகளையும் தரப் பெறுவாய்[33]” என்று பாடினர். இதன்கண் உண்ண லாகாத காந்தட் பூவின் தேனைப் படிந்துண்டதனால் வண்டினம் பறக்க இயலாது கெடுவது போலக் கடுங்கோவுக்கு உரியதாதலால் கைக் கொள்ளலாகாத நேரிமலையைக் கருதிப் போர் தொடுத்தமையால், பகை வேந்தர் கெட்டனர் என்ற கருத்துப் பொதுவாகவும், கடுங்கோவை அடைந்து அவன் தரும் கலங்களைப் பெறுவோர், தங்கள் நாட்டை மறந்து அவன் தாணிழலிலே கிடந்து வாழ்வர் என்று கருத்துச் சிறப்பாவும் உள்ஸ்ரீத்தப்பட்டிருப்பதைச் சேரமான் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டான்.
கடுங்கோவுடன் கபிலர் இருந்து வருகையில், சேர நாட்டின் வடக்கில் உள்ளது எனத் தாலமி முதலியோர் குறிக்கும் ஆரியக (Ariyake) நாட்டு[34] வேந்தனான பிரகத்தன் என்பான் கடுக்கோவின் நண்பனாதலால் அவனைக் காண வந்தான். அந்த ஆரியக வேந்தனுடன் இருந்து சின்னாள் பழகிய போது அவனுக்குத் தமிழரது அகப்பொருள் நெறியை அறிவுறுத்த வேண்டிய நிலைமை கபிலர்க்கு உண்டாயிற்று. அகப்பொருள் ஒழுக்கத்தைப் பண்டையோர் தமிழ் என்றே குறிப்பதுண்டு. “தள்ளாப் பொருள் இயல்பின் தண்மிழ்[35]” என்று பரிபாடல் குறிப்பது காண்க. அவன் பொருட்டுக் குறிஞ்சிப் பாட்டு எனப்படும் அழகிய பாட்டைப் பாடி அதன் வாயிலாகக் கபிலர் தமிழரது தமிழ் ஒழுக்கத்தின் தனி மாண்பை அவனுக்கு அறிவுறுத்தினார்.
ஒருகால், கடுங்கோ வாழியாதன் நேரிமலைக்கு வட கிழக்கில், பேரி யாற்றுக்கும் அயிரை யாற்றுக்கும் இடையில் வானளாவ உயர்ந்த கோடுகளும் மிகப் பல அருவிகளும் கொண்டு நிற்கும் அயிரை மலைக்குத் தன் சுற்றம் சூழச் சென்றான். அங்கே அவன் தங்கிய இடம் இப்போது தேவிகுளம் எனப்படுகிறது. அங்கே கொற்ற வைக்குக் கோயில் உண்டு. அதனைச் சேர வேந்தர் வழிபடுவது மரபு, அங்கே தங்கி இருக்கையில் கபிலர், வாழியாதனுடைய தானைச் சிறப்பும், அவனது தலைமைப் பண்பும் அரசமாதேவியின் நன்மாண்பும், பிறவும் முறைப்படத் தொகுத்தோதி, வானுலகம் கேட்குமாறு முழங்கும் அருவிகள் உச்சியினின்றும் இழியும் இந்த அயிரைமலை போல, “தொலையாதாக நீ வாழும் நாளே[36] என்று வாழ்த்தினார். அவ் வாழ்த்தின் கண், கடவுளர் கடன், உயர் நிலையுலகத்து ஐயர் கடன், முதியர் கடன் ஆகிய கடன் பலவும் இறுத்தது போல, எனக்குப் பரிசில் தந்து புரவக்கடன் ஆற்றுக என்ற குறிப்பையும் உள்ஸ்ரீத்திப் பாடினார். சின்னாட்குப்பின், வாழியாதன் கபிலருடன் கொங்கு நாட்டிற்குச் சென்றான். கபிலர்க்கு அவன்பால் விடைபெற்று மலையமான் நாட்டுத் திருக்கோவ லூர்க்குப் போக வேண்டும் என்ற எண்ணம் மிகுந்தது. சேரமானும் அவர் கருத்தை மதித்து, சிறுபுறம் என நூறாயிரம் காலம் பொன் கொடுத்து, நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான். இந் நன்றா என்னும் குன்று, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நாணா என மருவி வழங்கிற்று. இந் நாளைப் பவானியை நாணா என்று கூறுகின்றனர். திருஞான சம்பந்தர் திருப்பதிகம் நாணாவைக் குன்றென்று கூறுகிறது. நன்றாவின் மேலிருந்து காட்டிய நாடு கொல்லிக் கூற்றமாகும். அங்குள்ள ஊர்களில் ஒன்று கபிலக் குறிச்சி எனப் பெயர் கொண்டு நிலவுவது இதற்குச் சான்று பகர்கிறது.
இது நிற்க, கடுங்கோவிடம் விடை பெற்றுக் கபிலர் சென்ற சின்னாட்குப்பின், சேரமான் வஞ்சிநகர் சென்று சேர்ந்தான், சில ஆண்டுகட்குப் பின், மதுரைக்கு வட கிழக்கில் வாழ்ந்த பாண்டி நாட்டுத் தலைவனொருவ னுக்கும் பாண்டி வேந்தனுக்கும் போர் உண்டாயிற்று. அப் போரில், பாண்டியனுக்குத் துணையாகச் செல்வக் கடுங்கோ ஒரு பெரும் படையுடன் பாண்டி நாடு அடைந்து சிக்கல் என்னும் இடத்தே பகை வேந்தனை எதிர்த்துப் போர் உடற்றினான். அப் போரில் பகைவர் எறிந்த வேற்படை ஒன்று செல்வக் கடுங்கோவின் மார்பிற்பட்டுப் பெரும் புண் செய்தது. அவனும் தன் அரிய உயிரைக் கொடுத்து என்றும் பொன்றாத பெரிய புகழைப் பெற்றான். அங்கேயே அவன் பள்ளிப் படுக்கப் பட்டதனால், பின் வந்த சான்றோர், அவனை, சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று சிறப்பித்தனர். அந்தச் சிக்கல் என்னும் இடம், இப்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரகோச மங்கைப் பகுதியில் உள்ளது.
சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு அரசு வீற்றிருந்தான். என்று பதிகம் கூறுகிறது.
- ↑ 32. பதிற். 66.
- ↑ 33. பதிற். 67.
- ↑ 34. ஆரியகம், குட நாட்டின் வடக்கில் உள்ளது; ஆரியாவர்த்தத் இதனின் வேறு; அது இமயத்துக்கும் விந்தமலைக்கும் இடைப்பட்டது.
- ↑ 35. பரி. 9:25.
- ↑ 36. பதிற். 70.
தேடல் தொடர்பான தகவல்கள்:
செல்வக்கடுங்கோ வாழியாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - அவன், செல்வக், என்னும், கடுங்கோ, கபிலர், கடன், வாழியாதன், பாண்டி, போர், சேரமான், அங்கே