சேர மன்னர் வரலாறு - செல்வக்கடுங்கோ வாழியாதன்
ஒரு நாள், செல்வக்கடுங்கோ, கபிலரோடு சொல்லாடி யிருக்கையில் அவருடைய கையை அன்போடு பற்றினான். அது பூப்போல் மென்மையாக இருந்தது. அவனுக்கு அது புதுமையாக இருக்கவே, அவன் கபிலரை நோக்கி, ‘நும்முடைய கை மென்மையாக இருக்கிறதே, என் கை அவ்வாறு இல்லையே!” என்று வியந்தான். அவன் “நின்னுடைய” என்னாமல் “நும்முடைய கை” எனப் பன்மையிற் கூறியதனால், அது தன்னையும் தன்னையொத்த பிற புலவரையும் குறித்ததாகக் கொண்டு, “வேந்தே, நின்னைப் பாடுவோர் கைகள் நாடோறும் ஊன்துவையும் கறிசோறும் உண்டு வருந்துதல் அல்லது பிறிது தொழில் அறியா; ஆதலால் ‘நன்றும் மெல்லிய பெரும்’ என்றும், களிறுகளைச் செலுத்தும் தோட்டி தாங்கவும், குதிரைகளின் கடுவிசை தாங்கவும், வில்லிடைத் தொடுத்து அம்பு செலுத்தவும், பரிசிலர்க்கு அரும்பொருளை அள்ளி வழங்கவும் வேண்டியிருப்பதால், ‘வலியவாகும் நின் தாள்தோய் தடக்கை[21]’ என்றும் அழகு திகழப் பாடினார். உவகை மிகுதியால், கடுங்கோ உள்ளம் நாணி உடல் பூரித்தான்.
செல்வக் கடுங்கோ அரசியற் பணியில் ஈடுபட்ட டிருக்குங்கால் கபிலர் சேர நாட்டைச் சுற்றிப் பார்த்து வந்தார். அந் நாட்டின் மலைவளமும் பிறவளங்களும் அவர்க்கு மிக்க இன்பத்தைச் செய்தன. கடலிலிருந்து எடுக்கப் பெற்ற முத்துகளைப் பந்தர் என்னும் ஊரினர்[22] தூய்மை செய்து மேன்மை யுறுவித்தனர்; கொடுமணம்[23] என்னும் ஊரிலிருந்து அரிய கலங்கள் செய்யப் பெற்று வந்தன. காட்டு முரம்பு நிலப் பகுதியில் முல்லையும் பிடவமும் பூத்து அழகிய காட்சி நல்கின. முல்லைப் பூவின் தேனையுண்டு பிடவத்தைச் சூழ்ந்து முரலும் வண்டினம், சேர நாட்டு மறவர் அணியும் பனந் தோட்டுக் கண்ணியில் விரவப்படும் வாகைப் பூவின் துய்போலத் தோன்றின. அங்கு வாழ்பவர் அந் நிலத்தை உழுத சாலின்கண் மணிகள் பல கிடைக்கப் பெற்றனர்.[24] நெல்விளையும் வயற் பகுதியில் வாழ்ந்தோர் வயலில் நெல் விளைந்த போது, நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் நெல்லைத் தொகுத்து வயற்புறத்தே நிற்கும் காஞ்சி மரங்களின் நீழலிற் குவித்துக் கள் விற்பார்க்குக் கொடுத்து அதனை வாங்கியுண்பர். களிமயக்குற்ற சிலர் தம் தலையிற் சூடிய ஆம்பற் கண்ணியை மொய்க்கும் வண்டுகளை ஓப்பி மகிழ்வர்[25] இப் பகுதிகளை ஆளும் சிற்றரசர், சில காலங்களில் தமது வலியையும் கடுங்கோலின் பெறாவலியையும் ஆராய்ந்து போர் தொடுப்பதும், அதனால் அந் நாடுகள் வளன் அழிவதும் கபிலர் நினைவை வருத்தின. அவர் கடுங்கோவை வேண்டி, “வேந்தே , நின் பகைவர் பணிந்து திறைதருவா ராயின், அதனை யேற்றுப் போரை நிறுத்துக; அவர் நாடுகள் செல்வ வளத்தால் புலவர் பாடும் புகழ்பெற்று விளங்கும்[26]“ என்று இயம்பினர்.
செல்வக்கடுங்கோ ஆட்சி புரிந்து வருகையில் சோழ பாண்டிய நாட்டுத் தலைவர்களிற் சிலர் கொங்கு நாட்டில் வஞ்சி சூடிப் போர் செய்தனர். பொறை நாட்டிற்குத் தென் கிழக்கிலுள்ள பகுதிகளில் அவர்கள் முன்னேறி வந்தனர். சேரர் படைத் தலைவர்களும் சிற்றரசர்களும் அவர்களை அப் பகுதிகளில் புகுதல் கூடாது என விலக்கினர். அவர்கள் அவ்வுரைகளைக் கேளாது இப் பகுதி தமிழ் வேந்தர் மூவருக்கும் பொதுமையானது ; சேரர்க்கே சிறப்பாக உரியது எனல் கூடாது என மறுத்துப் போருடற்றினர். இச் செய்தி செல்வக் கடுங்கோவுக்குத் தெரிவிக்கப்பட்டது இது சோழ பாண்டியர்க்கும் பொது என்ற அச் சொல்லைக் கேட்கப் போறாது தனது பெரும் படையைத் திரட்டிச் சென்று எதிர்த்து வந்த வேந்தரை முறையே பொருத வென்றி எய்தினான். மேலும், தன் நாட்டவர்க்கு வாழிடம் சிறிது என்று சொல்லி முன்னையினும் விரிவான நிலப்பகுதியைத் தன் நாட்டோடு சேர்த்துக் கொண்டான். பின்பு அங்கே பாசறை நிறுவி, அந் நாட்டில் போர்வினையால் கெட்ட குடிகளைத் திருத்திப் பொறை நாட்டினும் பூழி நாட்டினும் போதிய இடமின்றி வருந்திய நன்மக்களைக் குடியேற்றிச் செவ்விய காவல் முறைகளை நன்கு வகுத்திருந்தான். சின்னாட்குப்பின் வினை முடிந்ததும் வேந்தன் மீளாமை கண்ட கபிலர், கொங்கு நாட்டில் அவன் தங்கியிருந்த பாசறைக்கு வந்து சேர்ந்தார். அவரோடு வேறு சில சான்றோரும் வந்தனர். அவர்களைச் சேரமான் அன்போடு வரவேற்று இன்புற்றான். பின்பு நாட்டின் நலமறிவான் போல அச் சான்றோரை நோக்கினான். அவர்களும் அக் குறிப்பறிந்து, நாட்டின் நல மிகுதியை எடுத்து விளம்பினர். மகிழ்ச்சி மீதூர நம் செல்வக் கடுங்கடுங்கே; கபிலரை நோக்கினான்; அவர், “பகைவரால் கெட்ட குடிகளை நல்வாழ்வு பெறுவித்த வேந்தே, தான்வாழ ஏனோர் தன் போல் வாழ்க என்ற அசையாக் கொள்கையுடையை நீ; நின்னைப் போலவே நின் முன்னோரும் இருந்தமையால், இனிய ஆட்சியைச் செய்தனர்; நிலம் நற்பயன் விளைவித்தது; வெயிலின் வெம்மை தணியுமாறு மழை தப்பாது பெய்தது; அதற்கேற்ப வெள்ளிமீன் உரிய கோளிலே நின்றது; நாற்றிசையிலும் நாடு நந்தா வளம் சிறந்து விளங்கிற்று[27]” என்று பாடிப் பாராட்டினர். அப் பாட்டைக் கேட்ட வேந்தரும் சான்றோரும் பிறரும் அவர் கூறியதை உடன்பட்டு உவகையுற்றனர்.
- ↑ 21. புறம், 14,
- ↑ 22. பந்தர் இப்போது பொன்னாளி வட்டத்தல் பந்லூர் என்ற பெயருடன் இருக்கிறது.
- ↑ 23. கொடுமணம் திருவாங்கூர் அரசில் குள்ளத்தூர் வட்டத்தில் உளது. பதிற் 67.
- ↑ 24. பதிற் 66.
- ↑ 25. பதிற். 62.
- ↑ 26. பதிற். 62.
- ↑ 27. பதிற். 59.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செல்வக்கடுங்கோ வாழியாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - அவர், நாட்டில், நாட்டின், கபிலர், நின், செல்வக், அவன்