சேர மன்னர் வரலாறு - செல்வக்கடுங்கோ வாழியாதன்
போலவும் புகழ்க் கூறுகள் பலவற்றை அறியா தொழிந்தனர்.
அந்துவஞ் சேரலுக்குப் பொறையன்தேவிபால் ஒரு மகன் பிறந்து செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற பெயருடன் விளங்கினான். அவன் இளமை முதலே சான்றோரிடையே பழகிப் பயின்றான். அதனால், உயர்ந்தோரிடத்துப் பணிவும், நண்பரிடத்தில் அன்பும் கொண்டு, அவர் மனம் வருந்தாவாறு அஞ்சித் தன்னைக் காத்தொழுகும் நற்பண்பும், காதல் மகளிர்க் கல்லது தன் மார்பு காட்டாத மறமும், நிலம் பெயரினும் சொல் பெயராத வாய்மையும் இயல்பாகக் கொண்டிருந்தான். பெரியோரைத் துணை கொண்டு அவர் உவக்குமாறு வணங்கும் மென்மையும், எத்தகைய பெரியராயினும் பகைவரைக் கண்டு அஞ்சி வணங்கி வாழ்வதைக் கனவிலும் கருதாத ஆண்மையும் அவன் குணஞ்செயல் களில் மிக்குத் தோன்றின. பகைமையுள்ளத்தால் மாற்றவர் கூறும் புறஞ்சொற்களைச் சிறிதும் கேளாத அவனது பொறைக்குணம் சான்றோர் பாடும் சால்பு மிகுந்து விளங்கிற்று.
பண்டை நாளில், தங்கள் நாட்டிலும் குடியிலும் தோன்றி, அறநெறியிலும் மற்ற நெறியிலும் சான்றாண்மை குன்றாது ஒழுகிப் புகழ் கொண்டு உயர்ந்து விண்ணுலகு அடைந்தவர்களை நினைந்து பாராட்டி விழா அயர்வது தமிழ் வேந்தர் இயல்பு அன்றோ ? அது சேர வேந்தர்பால் சிறந்து திகழ்ந்தது. அக் காலை, தம் முன்னோர்களுடைய புகழ் பொருந்திய வரலாற்றைப் புலவர் பாடக் கேட்டு மகிழ்வதும், பாணர் பாட்டில் இசைக்கக் கூத்தர் நாடகமாடிக் காட்டக் கண்டு இன்புறுவதும் வழக்கம். அதனைச் செய்தால் துறக்கத்தில் வாழும் அச் சான்றோர் மகிழ்வர் என்பது கருத்து. இக் கருத்தே பற்றிச் செல்வக்கடுங்கோ இவற்றை மிகுதியாகச் செய்து சிறந்தான். போர்களில் வெற்றி பெறும்போதெல்லாம் களவேள்விகள் செய்து போர்க் கடவுளாகிய கொற்ற வையை மகிழ்வித்தான்.
முதியவர்களாகிய தாய் தந்தையர்க்கும் சான் றோர்க்கும் தம் மக்களைத் தொண்டுசெய்ய விடுவது பண்டையோர் நெறிகளுள் ஒன்றன்றோ! அவர்கள் மெய்வன்மையொடு வாழ்ந்த காலத்தில் செய்த நன்றியை நினைந்து இவ்வாறு செய்வது கடன் என்றும், இஃது உலகிற் பிறந்தவுடனே அமையும் கடனாதல் பற்றித் தொல்சுடன் என்றும் தமிழ்ச் சான்றோர் கருதினர். முனிவர்களாகிய முது சான்றோர்க்கு அரசிளஞ் சிறுவர்களைத் தொண்டு செய்ய விடுத்த செய்திகள் பலவற்றைப் புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. இம் முறையை மேற்கொண்டு நம் செல்வக் கடுங்கோ தன்னுடைய சிறுவர்களை முதியோர்களுக்குத் தொண்டு செய்ய விடுத்துத் தன் தொல்கடனை இறுத்தான். சான்றோரும், “இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்[10]” என்று இச் செல்வக் கடுங்கோவைப் பாராட்டியுள்ளனர். இவனுக்கு, முன்னோனாகிய செங்குட்டுவன் தன் மகன் குட்டுவன் சேரலைப் பரணர்க்குத் தொண்டு செய்ய விடுத்த செய்தியை ஐந்தாம்பத்தின் பதிகம் கூறிற்று.
செல்வக் கடுங்கோ அரசு கட்டில் ஏறிய சில ஆண்டுகட்குப் பின், சேர நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த சதகன்னர வேந்தன், வேறொரு வடநாட்டு வேந்தனைத் துணையாகக் கொண்டு தமிழ் நாட்டிற் புகுந்து குறும்பு செய்தான். இது கடுங்கோவுக்குத் தெரிந்தது. இச் செய்தியைச் சோழ பாண்டியர்கட்கு அறிவித்து, இச் செயலைப் பொருள் செய்யாது விடின், “பொதுமை சுட்டிய மூவருலகம்[11]” எனப்படும் தமிழகம் சிறப்புழியும் என்பதையும் அறிவுறுத்தினான். சின்னாட் கெல்லாம் சோழ பாண்டியர் விடுத்த பெரும்படைகள், வஞ்சி நகரிலிருந்து வடநாடு நோக்கிப் புறப்பட்டன. செல்வந் கடுங்கோ, நால்வகைத் தமிழ்ப் படையும் உடன் வரச் சேர வாறு[12] கடந்து வானவாசி நாட்டுட் புகுந்து சத கன்னர்க்குரிய நகரமொன்றை முற்றுகை செய்தான்.
தமிழ்ப்படை செறித்து முற்றியிருந்த இடம், பகைவரைத் தாக்கற்கு எளிதாயும் அப் பகைவர் முற்போந்து பொருதற்கு ஏலாததாயும் இருந்தது. பகைவரை எறிதற்கேற்ற இடங்கண்ட பின்னல்லது தமிழர் போர்வினை தொடங்கார். இதனை இடனறிதல் என்ற பகுதியில் திருவள்ளுவர் கூறுவது கொண்டு தெளியலாம். பகைவேந்தர் இருவரும் வேறு வேறு இடங்களிலிருந்து எயில் காத்து நின்றனர். நின்ற ஒவ்வொரு நாளும் தமிழ்ப்படை வந்து செறிந்த வண்ணம் இருந்தது. இவ்வாறு உழிஞை சூடிய தமிழ்ப் படையைச் செலுத்திக் குன்றுகளைத் தகர்க்கும் இடிபோற் சீறிப் பகைவர் அரண்களைக் கொள்ளுதற்குச் செல்வக் கடுங்கோ செவ்வி நோக்கி இருந்தானாக, வடவேந்தர் இருவரும் இரவோடு இரவாய்த் தம்பால் இருந்த பொருள்களையெல்லாம் கைவிட்டு ஓடி விட்டனர். செருச் செய்தற்கு மிக்குநின்ற தமிழ்ப்படை அப் பொருள்களை மிகைபடக் கவர்ந்து கொண்டு வாகை சூடித் திரும்பிற்று. இதுபற்றி, அத் தானை, “ஒருமுற்று இருவர் ஒட்டிய ஒள்வாள் செருமிகு தானை[13]” என்று கபிலர் முதலிய சான்றோர் பாடும் சால்பு பெற்றது. முற்றிய நகர்க்கண் இருந்த பகைவீரர் பலர், மனம் மாறிச் சேரமானை அடைந்து, “வேந்தே, யாம் இனிதின் கருத்தின்படியே ஒழுகுவோம்; எம்மை ஏற்றருள்க” எனப் புகலடைந்தனர். கடுங்கோவும் அவர்கள் பால் கண்ணோடி அன்பாற் பிணிந்து அவர்கள் செய்த சூளுறவை ஏற்றுக் கொண்டான். அவர்களும் வாய்மை தப்பாது ஒழுகி மறமாண்பு பெற்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செல்வக்கடுங்கோ வாழியாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - கொண்டு, கடுங்கோ, செல்வக், சான்றோர், தமிழ்ப்படை, விடுத்த, செய்ய, தொண்டு