சேர மன்னர் வரலாறு - செல்வக்கடுங்கோ வாழியாதன்
அக் காலத்தே, நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் பெருமான் ஒருவர் இருந்தார். அவர் ஒருவகை நோய்வாய்ப்பட்டு உடல் நலம் குன்றி மிகவும் மெலிந்திருந்தார். அவரைக் கண்ட அறிஞர் சிலர், “சான்றீர், நீர் சென்று கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறையைக் காண்பீ ராயின், நமது உடம்பைப் பெறுகுவீர்” என மொழிந்தனர் அரசன் பார்வையும் ஒருவகை மருந்தாம் என்பது மேனாட்டவர்க்கும் உடன்பாடு. அரசர் பார்வையால் நோய் நீங்கப்பெற்ற செய்தி கிரேக்க நாட்டு வரலாறுகளிலும் உண்டு.
அவர்கள் சொல்லிய வண்ணமே, அப் புலவர் பெருமானும் கருவூர் அடைந்து வேந்தனைக் கண்டு தம் நோய் நீங்கப்பெற்றார்; சின்னாட்களில் தமது பண்டைய உடல் நிலையையும் எய்தினார். வேந்தருடைய பார்வை நலத்தை வியந்து, “மானினம் போல் யானையினம் பெருகியுள்ள கானகநாடன் நீதானோ? நீயாயின்[6] நீ செய்த உதவிக்கு ஒன்று கூறுவேன்; அரசாளும் செல்வம் ஒருவர் பெறுதற்கு அரியது; அரசு செய்தற்கண் அருளும் அன்பும் இல்லாத செயல்கள் உண்டாதல் இயல்பு. ஆனால், அவற்றைச் செய்வோர் நிரயத் துன்பம் எய்துவர்; நீ அவர்களோடு கூடுதல் ஆகாது. நின் அரசியற் றோற்றம் என்போல்வார்க்கு மருந்தாய் நலஞ் செய்வது ஆகையால், நீ தீயரோடு கூடாமல், அரசு காவலைக் ‘குழவி கொள்பவரின் ஓம்புமதி’ என்று இனிய சொற்களால் எடுத்துரைத்தார்.
வேந்தன், அவர் மனம் மகிழத் தக்க வகையில் மிக்க பரிசில்களை வழங்கினான். அவர் அவற்றை ஏற்றுக் கொண்டாராயினும், அவற்றின் பாற் பற்றுக்கொள்ளாது ஏனைப் பரிசிலர்க்கு வழங்கினார். அந் நிலையில், அவர் நோயுற்று வந்தபோது வேந்தனைக் காண வொண்ணாத படி இடை நின்று தடுத்த சான்றோர் சிலர் அவரை அணுகித் தமது தவற்றைக் கூறித் தம்மை அருளுமாறு அவரை வேண்டினர். அருளும் அன்பும் இல்லாத தீயோர் நிரயங் கொள்வர் என அவர் மொழிந்தது அவர்கள் உள்ளத்தை அலைத்தது. அவரும் அருள் சுரந்து, சான்றோர்களே, நரைத்துத் திரைத்து முதுமை எய்தியும், உயிர் வாழ்வதற்குப் பண்பும் பயனுமாகிய அன்பும் அறமும் கொள்ளாது நிரயம் புகுதற்குச் சமைந்தீர்; நாளைக் கணிச்சி யேந்திக் கொண்டு காவலன் பற்றுங்கால் நம்முடைய பயனில் வாழ்வை நினைந்து வருந்துவீர்கள். அதற்குப் பாதுகாவலாக இதனைச் செய்ம்மின்; முதுமை மிக்கதனால், நும்பால் செய் லாற்றும் வலியில்லை; அதனால், நல்லதே செய்யுமின்; நுமக்கு அஃது இயலாதாயின் அல்லது செய்தலைக் கைவிடுமின்; அதுதான் எல்லாரும் உவப்பது; அன்றியும், நல்லது செய்தோர் எய்தும் நலத்தைப் பெறும் நல்வழியுமாகும்[7]” என்றார். எல்லாரும் அவரை வழிபட்டு வாழ்த்தி வழிவிட்டனர்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குப் பின்னர்க் குட்டுவர் குடியில் தக்கவர் இலராயினர். செங்குட்டுவன் மகனான குட்டுவன் சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அரசு வீற்றிருக்கும்போதே மகப்பேற்றின்றி இறந்தான். செங்குட்டுவனுக்கு உடன் பிறந்த இளவலான குட்டுவன் இளங்கோ அரசு துறந்து குணவாயிற் கோட்டத்தே இருந்து தண்டமிழ் ஆசானான சாத்தனார் உரைத்த கோவலன் கண்ணகிகளின் வரலாறு கேட்டுத் தமிழகம் முழுவதும் சென்று ஆங்காங்குள்ள இயற்கை நலங்களை நேரிற் கண்டு சிலப்பதிகாரம் என்ற நூலைச் செய்து தமிழகத்துக்கு அளித்துவிட்டு மறைந்தார். இவ்வாறு குட்டுவர் குடி வழியற்றுப் போகவே, பொறையர் குடியிற் சிறந்து விளங்கிய கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்குப்பின் அந்துவஞ்சேரல் இரும்பொறை யென்பான் சேரவரசுக்கு உரியனானான்.
அந்துவன், நுண்ணிய நூல்பல கற்றும் கேட்டும் சான்றோர் பரவும் நல்லிசைப் புலமை சிறந்து விளங்கி னான். திருப்பரங்குன்றத்து முருகன்பால் அவனுக்கு அன்பு மிகுந்தது. ஒருகால், அவன் திருப்பரங்குன்றம் போந்து முருகனை வழிபட்டு அவரது பரங்குன்றைத் தமிழ்நலம் கனியப் பாடினன். “முருகன் சூர் முதல் தடிந்த சுடர் நெடுவேல் ஏந்துபவன்; பரங்குன்றம் அம் முருக வேட்கேயுரியது; சந்தன மரங்கள் செறிந்து நறுமணம் கமழ்வது; அதன்கண் உள்ள இனிய உள்ள இனிய சுனைகளிற் பூத்திருக்கும் செங்கழுநீர், மகளிர் விருபித் தங்கள் கருங்குழலில் சூடிக்கொள்ளும் கவின் மிகுந்தது. இவ்வாறு மணம் கமழும் மரங்களாலும் சுனைப் பூக்களாலும் தண்ணிதாய் விளங்கும் தண்பரங்குன்றம், அந்துவன் பாடிய செந்தமிழ் நலமுடையது” என்று மருதன் இளநாகனார் என்று சான்றோர் விதந்து கூறியிருக்கின்றார்[8].
அந்துவனது நல்லிசைப் புலமையை வியந்தே பதிற்றுப்பத்து ஏழாம் பதிகம், “நெடுநுண் கேள்வி அந்துவன்” என்று சிறப்பித்துரைக்கின்றது.
வேணாட்டில், ஒரு தந்தை என்ற பெயர் பெற்று அந்நாளில் வேளிர் தலைவன் ஒருவன் விளங்குகினான். அவனுக்குப் பொறையன்தேவி என்றொரு மகள் இருந்தாள். அவளை அந்துவன் மணந்துகொண்டு இனிதிருக்கையில், செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற மகனைப் பெற்றான். அந்துவன் அரச வாழ்வு பெற்றும், புலவர் கூட்டத்தைப் பெரிதும் விரும்பி யொழுகினான். தமிழகத்தில் வாழ்ந்த சான்றோர் பலரும் அவன்பால் சென்று புலமை நலம் நுகர்ந்தும் நுகர்வித்தும் பரிசில் பெற்று மகிழ்ந்தனர்.
- ↑ 6. யாரைக் கண்டால் யான் உடம்பு பெறலாம் எனச் சான்றோர், கூறினரோ அவன் நீயாயின என்பது குறிப்பு. புறம் 5.
- ↑ 7. புறம். 195.
- ↑ 8. அகம் 59.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செல்வக்கடுங்கோ வாழியாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - அவர், அரசு, அந்துவன், சான்றோர், அவரை, அன்பும், சென்று, புலவர், இனிய