சேர மன்னர் வரலாறு - செல்வக்கடுங்கோ வாழியாதன்
அந் நாளில், சேர நாட்டில் தெற்கில், தென்பாண்டி நாட்டில் உள்ள பொதியமலை, சான்றோர் பரவும் சால்புற்று விளங்கிற்று. அதனடியில் ஆய்குடி என்ற ஓர் ஊருண்டு. அஃது இப்போது தென்காசிப் பகுதியைச் சேர்ந்த செங்கோட்டை வட்டத்தில் ஆய்குடி என்ற அப் பெயர் திரியாமல் இருந்து வருகிறது. அவ்வூரைத் தலைமையாகக் கொண்டு அப் பகுதியை வேள் ஆய்என்ற வேளிர் தலைவன் ஆட்சி செய்து வந்தான். அவனை ஆய் அண்டிரன் என்றும் சான்றோர் வழங்குவர். அவன் இரவலர் வேண்டுவன ஈத்து இறவாப் புகழ் படைத்து விளங்கினான். அவன்பால் பெரு நட்புற்று ஒழுகிய தமிழ்ச் சான்றோருள் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்பவர் தலைசிறந்தவர். அவர் அடிக்கடி ஆய் அண்டிரனைக் கண்டு அவன் புகழ் நலங்களை இனிய பாட்டுக்களாற் பாடி இன்புறுத்தியும் இன்புற்றும் வந்தார். மோசியாருடைய புலமைவளம் தமிழ் வேந்தர் மூவருக்கும் நன்கு தெரிந்திருந்தது.
முடமோசியார் ஆய்குடியல் இருந்து வருகையில் அந்துவஞ்சேரலைக் காண விரும்பி அவனது வஞ்சி நகர்க்குச் சென்றார். அவருடைய வரவு கண்ட சேரமான், அவரை அன்போடு வரவேற்றுச் சிறப்பித் தான். அப்போது, சேரமானுக்கும் சோழ வேந்தனான முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளிக்கும் எக் காரணத் தாலோ பகைமையுண்டாயிற்று. ஆதலால், சோழன் தன் பெரும் படையுடன் போந்து வஞ்சி நகர்ப் புறத்தே முற்றியிருந்தான். சேரருடைய வஞ்சியும் அதற்கு வடக்கில் கடற்கரையில் உள்ள கருவூரும் சேரர் பெரும்படையின் திண்ணிய காவலில் இருந்தன. வஞ்சிநகர்ப் புறத்தே, இரு படைகளின் செயல் வகைகளை இனிது காணத்தக்க வகையில் உயர்ந்த மாடங்கள் அமைந்த அரண்மனை யொன்று இருந்தது. அதற்கு வேண்மாடம் என்பது பெயர். மகட்கொடை வகையால் நெருங்கிய தொடர் புற்றிருந்த வேளிர் தலைவர்களால் அம் மாடம் நெடுங்காலத்துக்கு முன்பே அமைக்கப்பெற்றது. வேணாட்டு அரசரும் அரசியற் சுற்றத்தாரும் வரின், அவர்கள் தங்குதற்கென அது நிறுவப்பெற்றது. கண்ணகியார்க்குக் கோயில் எடுத்துக் கடவுன்மங்கலம் செய்தபோது, செங்குட்டுவன் கனக விசயர் என்ற வடவேந்தர்களைச் சிறைவீடு செய்து அரசர்க்குரிய சிறப்புடன் இருக்கச் செய்தது இந்த வேண்மாடத்தேதான். இவ் வேண்மாடத்தே இருந்து போர் நிகழ்ச்சியை நோக்கியிருந்த அந்துவன், வேணாட்டிலிருந்து வந்த முடமோசியாரைத் தன்னோடே இருத்தி விருந்தாற்றினான். மேலும், அவர் சோழ நாட்டில் தோன்றிய சான்றோரதலால், அவரைக்கொண்டு சோழருடைய சிறப்பியல்புகளை அவன் அறிந்து கொள்ளுதற்கு அவரது வருகையும் உடனுறைவும் சிறந்து விளங்கின. இருவரும் வேண்மாடத்தில் இருந்து, வடமேற்கில் கடற்கரையில் படைக்கடல் காவல் புரிய விளங்கும் கருவூர் நிலையும், வஞ்சி முற்றத்தை வளைத்து நின்று காக்கும் வஞ்சிப் படை நிலையும், வடக்கிற் சேய்மையில் முற்றியிருக்கும் சோழர் பெரும்படை நிலையும் நன்கு தோன்றக் கண்டிருந்தனர். வஞ்சிமாநகர்க்குக் கண்காணும் எல்லையில் இருந்து காட்சியளித்து கருவூர், இப்போது கருவூர்ப் பட்டினமென வழங்குகிறது. மேனாட்டு யவனர்களின் குறிப்புகளில் இவ்வூர்க் குறிப்பும் உள்ளதனால், இதன் தொன்மை நன்கு தெரியப்படும்.
அந்துவனும் முடமோசியாரும் படை நிலைகளை நோக்கியிருக்கையில், சோழர் படையில் பெருங்களிறு ஒன்றின்மேல் தலைவன் ஒருவன் இருந்து படையணியை நோக்கித் திரிவதையும், அவ் யானையைச் சூழப் பரிக்கோற்காரரும் வேல் வீரரும் செல்வதையும் இருவரும் கண்டனர். சிறிது போதிற்கெல்லாம் படையில் பெருங் கிளர்ச்சி தோன்றிற்று. யானைமேல் இருந்த தலைவன் அதனை அடக்க முயன்றும் அஃது அடங்காது ஒரு நெறியின்றி ஓடத்தலைப்பட்டது. சூழ்வரும் பரிக்கோற்காரும் படைவீரரும், மிகைசெய்த வழித் தன்னைக் கொல்வர் என எண்ணாது, களிறு மதங்கொண்டு திரிவது இருவர்க்கும் புலனாயிற்று. இதனை அறிந்த கருவூர்ப்படை, மத களிற்றின் வரவு போர் குறித்ததாகலாம் எனக் கருதி மேல்வரும் களிற்றையும் உடன் வரும் படைவீரரையும் தாக்குதற்கு அணிகொண்டு நிற்பதாயிற்று. சோழர் தலைவனுடைய யானை மதஞ் செருக்கிக் கருவூர் எல்லையை நோக்கிச் சென்றமை அந்துவனுக்குத் தெரிந்தது. சோழர் படை, கருதாது அலமருவதும், கருவூர்ப் படை, இரை வரவு காணும் புலிக்கணம் போல் போர் குறித்து நிற்பதும் அந்துவன் - சேரலுக்குத் தெரிந்தன. இதற்குள், யானை மேல் உள்ள தலைவனுடைய தோற்றம் சிறிது புலனாயிற்று. முடமோசியாரை நோக்கி, “இதோ களிற்றின் மேல் கருவூரிடம் செல்வோன் யாவனாகலாம்” என வினவினன். மோசியார், மனம் வருந்திக் களிற்றின் மேல் செல்பவன் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி; அக் களிறு, “முந்நீர் வழங்கும் நாவாய் போலவும், பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் படைக்கடல் நடுவேயுளது ; சுறாமீன் கூட்டம் போல வாள் வீரர் மொய்த்திருப்பதை அறியாது மைந்து பட்டது; அவன் நோயிலனாகிப் பெயர்கதில் அம்ம[9]” என்று மொழிந்தனர்.
அரசன்பால் உளதாகிய இயற்கை யன்பால் உள்ளம் கலங்கி அவலித்து உரைத்த மோசியாரின் மொழிகள் சேரமான் மனத்தைக் கலக்கி விட்டன. உடனே அவன் யானைமேல் இருப்பான் தனக்குப் பகைவன் என்பதை மறந்தான்; தன் நகர்க்கண் அவன் வந்து முற்றியிருப்பதையும் மறந்தான். காற்றினும் கடுகச் சென்று களிற்றின் பாய்ந்து அதன் செருக்கை அடக்கிச் சோழனை உய்வித்து மீண்டான். சேரமான் வந்ததும், களிற்றை அடக்கியதும், சோழ வேந்தனை உய்வித்து மீண்டதும் இருபடைத் தலைவர்களையும் மருள் வைத்தான். முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி சேரமானுடைய அறந்திறம்பா மறமாண்பை வியந்து பகைமை யொழிந்து நட்பால் பிணிப்புண்டான். இச் செயலால் “மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த, நெடுநுண் கேள்வி அந்துவன்” என்று சான்றோர் பாராட்டினர். “மடியா உள்ளம்” என்றும், “மாற்றோர்ப் பிணித்த” என்றும் நின்ற சொற்குறிப்புகள் இவ் வரலாற்றை அகத்தே கொண்டிருப்பதே நோக்கத் தக்கது. படைமறவர், “அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை” என்பதை உணர்ந்து இன்பமெய்தினர். இச் செயல் தழிஞ்சித் துறையாய்த் தமிழ் மறவர்க்குப் பொதுப்பண்பாய் இருந்தமையின், இந் நிகழ்ச்சி சிறப்பான விளக்கம் பெறவில்லை. ஏனை நாட்டவரிடையே இது நிகழ்ந் திருப்பின், நாடெங்கும் இவ் வரலாறு பரப்பப் பெற் றிருக்கும். இடைக் காலத்தே தமிழர் மறந்து அறிவு அறைபோகி அடிமை யிருளில் வீழ்ந்தமையால் இது
- ↑ 9. பறம். 17.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செல்வக்கடுங்கோ வாழியாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - அவன், இருந்து, சோழர், களிற்றின், போர், முடித்தலைக், கருவூர், மேல், சேரமான், நிலையும், வஞ்சி, சான்றோர், உள்ள, தலைவன், என்றும், நாட்டில், நன்கு, வரவு