சோலைமலை இளவரசி - 5. அந்தப்புர அடைக்கலம்!
மாறனேந்தல் இளவரசன் அப்போது தான் அடைந்திருந்த நெருக்கடியான நிலைமையை நன்கு உணர்ந்தான். தன்னைத் துரத்திக் கொண்டு வந்த எதிரிகளிடம் அவ்வளவு எளிதாக அகப்பட்டுக் கொள்வதைக் காட்டிலும் அந்தக் குறுகிய பாதையில் அவர்களை எதிர்த்து நின்று, ஒருவனுக்கொருவனாகப் போரிட்டு, தேசத் துரோகிகளில் எவ்வளவு பேரைக் கொல்ல முடியுமோ அவ்வளவு பேரையும் கொன்று விட்டுத் தானும் உயிரை விடுவது மேல் அல்லவா?
இவ்விதம் சிந்தித்துக் கொண்டே பாதையின் ஒரு முடுக்கில் திரும்பிய போது, எதிரில் அவன் கண்ட தோற்றம் அதிசயமான எண்ணம் ஒன்றை அவனுக்கு அளித்தது. பாதைக்கு அருகில் நெடிதோங்கி வளர்ந்திருந்த ஒரு மரம் எந்தக் காரணத்தினாலோ அடிவேர் பெயர்ந்து கோட்டை மதிலின் பக்கமாகச் சாய்ந்திருந்தது. இரண்டொரு தினங்களுக்குள்ளேதான் அந்தப் பெரிய மரம் அப்படிச் சாய்ந்திருக்க வேண்டும். அந்த மரத்திலே ஏறி உச்சாணிக் கிளையை அடைந்தால், அங்கிருந்து சுலபமாக மதில் சுவரின் மேல் குதிக்கலாம். பிறகு மதில் சுவரிலிருந்து கோட்டைக்குள்ளே குதிப்பதில் கஷ்டம் ஒன்றுமிராது. ஏன் அப்படிச் செய்யக்கூடாது? தன்னைத் துரத்தி வந்தவர்களிடமிருந்து தப்புவதற்காக ஏன் சோலைமலைக் கோட்டைக்குள்ளேயே பிரவேசித்து அபாயம் நீங்கும் வரையில் அங்கு ஒளிந்திருக்கக் கூடாது! சோலைமலைக் கோட்டைக்குள்ளேயே பிரவேசித்து அபாயம் நீங்கும் வரையில் அங்கு ஒளிந்திருக்கக் கூடாது! சோலைமலை மகாராஜா அச்சமயம் மாறனேந்தல் கோட்டை வாசலில் எப்போது கோட்டை விழும் என்று காத்துக் கிடக்கிறார். ஆகையால் இங்கே கட்டுக் காவல் அதிகமாக இருக்க முடியாது. தற்சமயம் பத்திரமாக ஒளிந்து கொண்டிருப்பதற்கு இதுதான் சரியான இடம். கோட்டைக்குள்ளே யாரும் தேடமாட்டார்கள். கோட்டைக்குள் புகுவதற்கு வேண்டிய துணிச்சல் தன்னைத் தொடர்ந்து வரும் எதிரி வீரர்களுக்கு ஒரு நாளும் இராது. இன்றைக்கு ஒரு பகல் அங்கே ஒளிந்திருந்து இளைப்பாறினால் இரவு இருட்டியதும் வந்த வழி மூலமாகவே வெளியேறி மலையைக் கடந்து அப்பாலுள்ள பள்ளத்தாக்கை அடைந்து விடலாம்.
இப்படி எண்ணியபோது, பக்கத்துக் கிராமத்திலிருந்து, 'கொக்கரக்கோ' என்று கோழி கூவும் சத்தம் கேட்டது. தன் மனத்தில் தோன்றிய யோசனையை ஆமோதிக்கும் நல்ல சகுனமாகவே இளவரசன் அதைக் கருதினான்.
தட்சணமே, சாய்ந்திருந்த மரத்தின் மேல் 'சரசர'வென்று ஏறினான். மரத்திலிருந்த பட்சிகள் ஏதோ மர நாயோ வேறு கொடிய மிருகமோ ஏறுகிறது என்று எண்ணிக் கொண்டு சிறகுகளை அடித்துக் கொண்டும் 'கீச்சுக் கீச்சு' என்று கத்திக் கொண்டு பறந்தும் ஓடின. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இளவரசன் மரத்தின் உச்சியை அடைந்து மதிலின் மேல் குதித்தான். மதில் மேலிருந்து அவன் கோட்டைக்குள்ளே இறங்குவதற்கு அதிக நேரம் ஆகவில்லை.
கோட்டைக்குள் இளவரசன் குதித்து இறங்கிய இடம் அழகான உத்தியான வனமாயிருந்தது. உதய நேரத்தில் இதழ் விரிந்து மலரும் பலவகைப் புஷ்பங்களின் நறுமணம் 'கம்'மென்று வந்து கொண்டிருந்தது. ஆனால் அதையெல்லாம் அநுபவிக்ககூடிய மனநிலை அச்சமயம் உலகநாதத்தேவனுக்கு இருக்கவில்லை. உடனே எங்கேயாவது சிறிது நேரம் படுத்தால் போதும் என்று தோன்றியது. உத்தியான வனத்துக்கு நடுவில் வஸந்த மண்டபமும் அதற்குச் சிறிது தூரத்திற்கப்பால் அரண்மனையின் ஒரு பகுதியும் தெரிந்தன. ஜன மாட்டமே இல்லாமல் எங்கும் நிசப்தமாக இருந்தது. இளவரசனுடைய களைப்புற்ற கால்கள் அவனை வஸந்த மண்டபத்தை நோக்கி இழுத்துச் சென்றன.
மண்டபத்தை நெருங்கியதும் அவனுக்கு எதிரே தோன்றிய காட்சியினால் இளவரசனுடைய மூச்சு சிறிது நேரம் நின்று போயிற்று. மண்டபத்தின் பின்புறத்து முனையிலே பெண் ஒருத்தி மெதுவாக வந்து கொண்டிருந்தாள். கையில் அவள் புஷ்பக் கூடை வைத்திருந்தாள். ஸ்திரீ சௌந்திரையத்தைப் பற்றி மாறனேந்தல் இளவரசன் எத்தனையோ கவிகளிலும் காவியங்களிலும் படித்திருந்தான். ஆனால் இந்த மாதிரி அற்புத அழகை அதுவரையில் அவன் கற்பனையும் செய்ததில்லை. சௌந்தரிய தேவதையே மானிடப் பெண் உருவம் கொண்டு அவன் முன்னால் வருவதுபோல் தோன்றியது. அந்தப் பெண்ணோ தன்னுடைய அகன்ற விசாலமான நயனங்களை இன்னும் அகலமாக விரியச் செய்துகொண்டு அளவில்லா அதிசயத்துடன் மாறனேந்தல் இளவரசனைப் பார்த்தாள்.
சிறிது நேரம் இப்படி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு ஊமைகளாக நின்ற பிறகு இளவரசன் துணிச்சலை வருவித்துக் கொண்டு, "நீ யார்?" என்றான்.
வீர மறவர் குலத்திலே பிறந்த மாணிக்கவல்லிக்கு அப்போது ரோஷம் பிறந்தது. பேசும் தைரியமும் வந்தது. "நீ யார் என்றா கேட்கிறாய்? அந்தக் கேள்வியை நானல்லவா கேட்க வேண்டும். நீ யார்? கோட்டைக்குள் எப்படிப் புகுந்தாய்? அந்தப்புரத்து நந்தவனத்துக்குள் என்ன தைரியத்தினால் வந்தாய்?" என்று இராமபாணங்களைப் போன்ற கேள்விகளைத் தொகுத்தாள்.
உலகநாதத்தேவன் அசந்து போய்விட்டான். அவள் சோலைமலை இளவரசியாகத்தான் இருக்க வேண்டும்! வேறு யாரும் இவ்வளவு அதிகாரத் தோரணையுடன் பேசமுடியாதென்று எண்ணினான். அவளுடைய கேள்விகளுக்கு மறுமொழியாக ஏதாவது சொல்ல வேண்டுமென்று ஆன மட்டும் முயன்றும் ஒரு வார்த்தை கூட அவனால் சொல்ல முடியவில்லை.
"ஏன் இப்படி விழித்துக் கொண்டு நிற்கிறாய்? அரண்மனையில் மகாராஜா இல்லாத சமயம் பார்த்து எதையாவது திருடிக் கொண்டு போகலாம் என்று வந்தாயா? இதோ காவற்காரர்களை கூப்பிடுகிறேன் பார். வேட்டை நாயையும் கொண்டு வரச் சொல்லுகிறேன்..."
இவ்வாறு இளவரசி சொல்லிக் கொண்டிருந்த போது, கோட்டை மதிலுக்கு அப்பால் சிலர் இரைந்து பேசிக் கொண்டு விரைவாக நடந்து செல்லும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தை மாணிக்கவல்லி காது கொடுத்துக் கவனமாகக் கேட்டாள். பின்னர், தனக்கு எதிரில் நின்ற வாலிபனை உற்றுப் பார்த்தாள். அவன் முகத்திலே தோன்றிய பீதியின் அறிகுறியையும் கவனித்தாள். அவளுடைய பெண் உள்ளம் சிறிது இரக்கம் அடைந்தது.
கோட்டை மதிலுக்கு வெளியில் பேச்சுச் சத்தம் கேட்டவரையில் அதையே கவனித்துக் கொண்டிருந்த மாறனேந்தல் இளவரசன், அந்தச் சத்தம் ஒடுங்கி மறைந்ததும் மாணிக்கவல்லியைப் பார்த்து, "அம்மணீ! ஏதோ தெரியாத்தனமாகத் தான் இங்கே வந்துவிட்டேன். ஆனால் திருடுவதற்கு வரவில்லை. உங்கள் வீட்டில் திருடி எனக்கு ஒன்றும் ஆகவேண்டியதில்லை!" என்றான்.
மீண்டும் மாணிக்கவல்லியின் ஆங்காரம் அதிகமாயிற்று. "ஓகோ! திருடுவதற்கு வரவில்லையா? அப்படியானால் எதற்காக வந்தாயாம்? இதோ பார்!..." என்று சொல்லிவிட்டு மறுபக்கம் திரும்பி, "சங்கிலித் தேவா!" என்று கூப்பிட்டாள்.
அப்போது இளவரசன் ஒரு நொடியில் அவள் அருகில் பாய்ந்து வந்து பலவந்தமாக அவளுடைய வாயைத் தன் கைகளினால் மூடினான். எதிர்பாராத இந்தக் காரியத்தினால் திகைத்துச் சிறிது நேரம் செயலற்று நின்ற இளவரசி சுய நினைவு வந்ததும் சட்டென்று அவனுடைய கைகளை அப்புறப்படுத்திவிட்டுக் கொஞ்ச தூரம் அப்பால் போய் நின்றாள். அவனைப் பார்வையினாலேயே எரித்து விடுபவள் போல் ஏறிட்டுப் பார்த்து, "என்ன துணிச்சல் உனக்கு?" என்று கேட்டாள். கோபத்தினாலும் ஆங்காரத்தினாலும் அவளுடைய உடல் நடுங்கியதுபோல் குரலும் நடுங்கியது.
உலகநாதத்தேவன் தான் பதற்றப்பட்டுச் செய்த காரியம் எவ்வளவு அடாதது என்பதை உணர்ந்திருந்தான். எனவே, முன்னைக் காட்டிலும் பணிவுடன் இரக்கம் ததும்பிய குரலில், "அம்மணி! உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். மன்னிக்க வேண்டும். என்னைத் தொடர்ந்து வரும் எதிரிகளிடம் அகப்படாமல் தப்புவதற்காக இங்கே வந்தேன். என்னை அவர்களிடம் காட்டிக் கொடுத்துவிடாதே! அடைக்கலம் என்று வந்தவர்களைக் காட்டிக் கொடுப்பது தர்மமா? சோலைமலை இராஜகுமாரிக்கு அழகாகுமா?" என்றான்.
இந்த வார்த்தைகள் மாணிக்கவல்லியின் உள்ளக் கடலில் பெருங்க் கொந்தளிப்பை உண்டாக்கின. ஒரு பக்கம் ஆங்காரமும் இன்னொரு பக்கம் ஆனந்தமும் பொங்கி வந்தன.
"ஆகா? என்னை இன்னார் என்று தெரிந்துமா இப்படிச் செய்தாய்? உன்னை என்ன செய்கிறேன், பார்!" என்று அவள் கொதிப்புடன் கூறினாள் என்றாலும், குரலில் முன்னைப் போல் அவ்வளவு கடுமை தொனிக்கவில்லை.
"நீ என்னை என்ன செய்தாலும் சரிதான், உன் கையால் பெறுகிற தண்டனையைப் பெரிய பாக்கியமாகக் கருதுவேன்! ஆனால் என் பகைவர்களிடம் மட்டும் என்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாம். அப்படிச் செய்தால் அப்புறம் என் ஆயுள் உள்ளவரைக்கும் வருத்தப்படுவாய்!" என்றான் இளவரசன்.
மாணிக்கவல்லி மேலும் சாந்தமடைந்து, "இவ்வளவெல்லாம் கருப்பங் கட்டியைப் போல் இனிக்க இனிக்கப் பேசுகிறாய்; ஆனால் நீ யார் என்று மட்டும் இன்னும் சொல்லவில்லை, பார்!" என்றாள்.
"நான் யாராயிருந்தால் என்ன? தற்சமயம் ஓர் அநாதை; திக்கற்றவன்; சேலை உடுத்திய பெண்ணிடம் வந்து அடைக்கலம் கேட்பவன். இச்சமயம் எனக்கு அடைக்கலம் கொடுத்தால் என்றென்றைக்கும் நன்றி மறவாமல் உன்னை நினைத்துக் கொண்டிருப்பேன்."
"மாறனேந்தல் மகாராஜாவின் மகனாகப் பிறந்து விட்டு இப்படியெல்லாம் கெஞ்சுவதற்கு வெட்கமாயில்லையா?" என்று மாணிக்கவல்லி கேட்டபோது மாறனேந்தல் இளவரசனுக்குத் தூக்கிவாரிப் போட்டது என்றால், அது மிகவும் குறைத்துச் சொன்னதேயாகும்.
சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் நின்ற பிறகு பெரு முயற்சி செய்து, "என்னை எப்படி உனக்குத் தெரியும்?" என்று கேட்டான்.
"ஏன் தெரியாது? நன்றாகத் தெரியும். உன்னைப் போன்ற படம் ஒன்று எங்கள் அரண்மனையில் இருந்தது."
"இருந்தது என்றால், இப்போது இல்லையா?"
"இப்போது இல்லை. ஆறு மாதத்துக்கு முன் ஒருநாள் அதை அப்பா சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டுக் காலால் மிதி மிதி என்று மிதித்தார். 'ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?' என்று நான் கேட்டேன். அதற்குப் பதிலாக, மாறனேந்தல் இளவரசனாகிய நீ ஒருநாள் அவர் கையில் சிக்கிக் கொள்வாய் என்றும், அப்போது பன்னிரண்டு வேட்டை நாய்களை உன் மேல் சேர்ந்தாற்போல் ஏவிவிடப் போவதாகவும் அவர் சொன்னார்."
இதைக் கேட்ட இளவரசனுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. "அம்மம்மா! எவ்வளவு கொடுமையான மனிதர்!" என்றான்.
"அப்பா ஒன்றும் கொடுமையான மனிதர் அல்ல. நீ மட்டும் அவரைப் பற்றி அப்படியெல்லாம் பரிகாசம் செய்து பேசலாமா? அதை நினைத்துப் பார்த்தால் எனக்கே உன் பேரில் பன்னிரண்டு வேட்டை நாய்களை ஏவி விடலாம் என்று தோன்றுகிறது!"
"அம்மணி! உன் தகப்பனாரைப் பற்றி நான் சில சமயம் பரிகாசமாகப் பேசியது உண்மைதான். ஆனால், அதெல்லாம் அவர் அந்நியர்களாகிய வெள்ளைக்காரர்களுக்கு இடங்கொடுத்துத் தேசத்தைக் காட்டிக் கொடுக்கிறாரே என்ற வருத்தத்தினாலேதான். அவர் மட்டும் வெள்ளைக்காரர்களை சோலைமலை சமஸ்தானத்திலிருந்து விரட்டி அடித்து விட்டு முன்போல் சுதந்திரமாய் இருக்கட்டும், நான் அவருடைய காலில் விழுந்து அவரைப் பற்றிக் கேலி பேசியதற்கெல்லாம் ஆயிரந்தடவை மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்."
"வெள்ளைக் காரர்கள் மீது உனக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? உன்னை என்ன செய்தார்கள்? வெள்ளைக்காரச் சாதியார் எவ்வளவு நல்லவர்கள் என்றும், கெட்டிக்காரர்கள் என்றும் அப்பா சொல்லுகிறார்! நான் கூட அவர்களை நாலைந்து தடவை பார்த்திருக்கிறேன். ரொம்ப நல்லவர்களாய்த்தான் தோன்றினார்கள்."
"எவ்வளவுதான் நல்லவர்களாயிருக்கட்டுமே? அதற்காக நம் தேசத்தையும் ஜனங்களையும் அந்நியர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு அடிமையாகிவிடுவதா? வெள்ளைகாரர்கள் நல்லவர்களாக இருப்பதெல்லாம் வெறும் நடிப்பு. இந்தத் தேசம் முழுவதையும் கைப்பற்றி அரசாண்டு இங்கேயுள்ள பணத்தையெல்லாம் கொண்டு போக வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம். அதற்காக முதலில் நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். போகப் போக அவர்களுடைய உண்மைச் சொரூபத்தைக் காட்டுவார்கள். நீ வேண்டுமானால் பார்த்துக் கொண்டே இரு. மாறனேந்தல் இராஜ்யத்தைக் கைப்பற்றியதும் கொஞ்ச நாளைக்கெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு சோலைமலை இராஜ்யத்தையும் கைப்பற்றுகிறார்களா இல்லையா என்று நீயே பார்!"
"இவ்வளவெல்லாம் பேசுகிறாயே, மாறனேந்தல் கோட்டையில் பெரிய சண்டை நடக்கும் போது நீ ஏன் இங்கே வந்து ஒளிந்து கொண்டிருக்கிறாய்! சண்டைக்குப் பயந்து கொண்டுதானே? மறவர் குலத்தில் பிறந்த வீரன் இப்படிச் சண்டைக்குப் பயந்துகொண்டு ஓடலாமா?"
"அம்மணி! நீ சொல்வது உண்மைதான். ஆனால் என்னுடைய சொந்த விருப்பத்தினால் நான் ஓடி வரவில்லை. சண்டைக்குப் பயந்துகொண்டும் ஓடி வரவில்லை. என் தந்தையின் விருப்பத்தைத் தட்ட முடியாமல் வெளியேறி வந்தேன். உனக்கும் எனக்கும், உன்னுடைய வம்சத்துக்கும், என்னுடைய வம்சத்துக்கும், இந்தப் பாரத தேசத்துக்குமே விரோதிகளான அந்நியர்களை எப்படியாவது விரட்டுவதற்கே வழி தேடுவதற்காகவே வந்தேன். அதற்காகத்தான் உன்னிடம் அடைக்கலம் கேட்கிறேன். அதற்காகவே எதிரிகளிடம் என்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்!" என்று மாறனேந்தல் இளவரசன் உணர்ச்சி ததும்பப் பேசினான்.
அவனுடைய வார்த்தைகள் மாணிக்கவல்லியின் மனத்தைப் பெரிதும் கனியச் செய்து அவளுடைய கண்களில் கண்ணீர்த் துளிகளையும் வருவித்தன. ஆயினும் அதை அவள் ஒப்புக் கொள்ள விரும்பவில்லை.
"உங்களுடைய விவகாரம் எல்லாம் எனக்குத் தெரியாது. பார்க்கப் போனால் நான் அந்தப்புரத்தில் அடைபட்டுக் கிடக்கும் பெண்தானே? இந்தக் கோட்டையின் மதிலுக்கு அப்பால் நான் சென்றதே இல்லை. அரண்மனை உப்பரிகையிலிருந்து பார்த்தால் தெரியும் மலையையும் காடுகளையும் தவிர வேறு எதையும் நான் பார்த்ததே இல்லை. தேசம், இராஜ்யம், சுதந்திரம், அடிமைத்தனம் என்பதையெல்லாம் நான் என்ன கண்டேன்? உன் தகப்பனாருடைய வார்த்தை உனக்கு எப்படிப் பெரிதோ அப்படியே என் தகப்பனாரின் விருப்பம் எனக்குப் பெரிது. நியாயமாகப் பார்த்தால் என் தகப்பனாரின் ஜன்ம விரோதியான உன்னை நான் உடனே காவற்காரர்களிடம் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும். அதிலும் அந்தப்புரத்து நந்தவனத்துக்குள் வரத் துணிந்த உன்னிடம் துளிக்கூட தாட்சிண்யம் பாராட்டக் கூடாது. ஆனாலும் நீ 'அடைக்கலம்' என்றும் 'காப்பாற்ற வேண்டும்' என்றும் சொல்லுகிறபடியால் உன்னைக் காட்டிக் கொடுக்க எனக்கு மனம் வரவில்லை. உன்னிடம் மேலும் பேசிக் கொண்டு நிற்கவும் எனக்கு இஷ்டம் இல்லை. வந்தவழியாக நீ உடனே புறப்பட்டுப் போய்விடு!"
இவ்விதம் இளவரசி மிகக் கடுமையான குரலில் அதிகாரத் தொனியில் கூறினாள். அவள் அந்தப்புரத்துக்குள் அடைந்து கிடக்கும் உலகம் அறியாத இளம் பெண்ணான போதிலும், அவளுடைய அறிவையும் பேச்சுத் திறமையையும் கண்டு உலகநாதத் தேவன் அதிசயித்தான். முன்னே பேச்சு நடந்தபடி இத்தகைய பெண்ணரசியை மணந்து கொள்ளும் பாக்கியம் தனக்கு இல்லாமற் போயிற்றே என்ற ஏக்கம் அப்படிப்பட்ட ஆபத்தான சமயத்தில் அவன் மனத்தில் தோன்றியது.
அவன் ஒன்றும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்த இளவரசி, "இப்படியே நின்று கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? நீயாகப் போகப் போகிறாயா! இல்லாவிட்டால் காவற்காரர்களையும் வேட்டை நாய்களையும் கூப்பிட்டுத்தான் ஆக வேண்டுமா?" என்று கேட்டாள்.
அவள் சொல்கிறபடி உடனே போய்விடலாம் என்று முதலில் இளவரசன் நினைத்தான். ஆனால் அவனுடைய உடம்பின் களைப்பும் கால்களின் சலிப்பும் தலையின் கிறுகிறுப்பும் அதற்குக் குறுக்கே நின்றன. முன் எப்போதையும் விட அதிக இரக்கமான குரலில், "அம்மணி! இராத்திரி முழுவதும் கண்விழித்தும் வழி நடந்தும் சொல்ல முடியாத களைப்பை அடைந்திருக்கிறேன். இந்த நிலையில் ஓர் அடிகூட என்னால் எடுத்து வைக்க முடியாது. இச்சமயம் நீ என்னை வெளியே அனுப்புவதும் எதிரிகளிடம் என்னைப் பிடித்துக் கொடுப்பதும் ஒன்றுதான். இந்த நந்தவனத்தில் எங்கேயாவது ஓர் இருண்ட மூலையில் சிறிது நேரம் படுத்துத் தூங்கிவிட்டுப் போகிறேன். என்னால் உனக்கு ஒருவிதத் தொந்தரவும் நேராது. சத்தியமாகச் சொல்லுகிறேன். ஒருவேளை நான் அகப்பட்டுக் கொண்டால் அதன் பலனை அநுபவிக்கிறேன். என்னை நீ பார்த்ததாகவோ பேசியதாகவோ காட்டிக் கொள்ள வேண்டாம். நானும் சொல்ல மாட்டேன். உண்மையில், இவ்வளவு அதிகாலை நேரத்தில் நந்தவனத்தில் பூப்பறிக்க நீ வருவாய் என்று யார் நினைக்க முடியும்?"
இளவரசி மாணிக்கவல்லி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்து நின்றாள். பரிதாபமான முகத்துடன் கனிந்த குரலில் பேசிய அந்த ராஜகுமாரன் விஷயத்தில் அவள் மனம் பெரிதும் இரக்கமடைந்திருந்தது. விதியை வெல்லுவதென்பது யாருக்கும் இயலாத காரியமல்லவா?
"அப்படியானால் நான் சொல்கிறபடி கேள். இந்த வஸந்த மண்டபத்திலேயே படுத்துக் கொண்டு தூங்கு இன்றைக்கு இங்கே யாரும் வரமாட்டார்கள். வந்தால் என்னுடைய வேலைக்காரிதான் வருவாள். அவள் வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் தூக்கம் விழித்து எழுந்ததும் நீ பாட்டுக்குப் போய்விடக்கூடாது. என்னிடம் சொல்லிக் கொண்டுதான் போக வேண்டும். அபாயம் ஒன்றும் இல்லாத தக்க சமயம் பார்த்து உன்னை நான் அனுப்பி வைக்கிறேன். நான் மறுபடி வரும் வரையில் நீ இங்கேயே இருக்க வேண்டும்" என்று மாணிக்கவல்லி கண்டிப்பான அதிகாரத் தோரணையில் கூறினாள்.
"அப்படியே ஆகட்டும், அம்மணி! ரொம்ப வந்தனம்" என்றான் இளவரசன். அவ்விடத்தை விட்டு மாணிக்கவல்லி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு சென்று மறைந்ததும், உலகநாதத் தேவன் வஸந்த மண்டபத்தின் ஓரத்தில் கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு படுத்தான். சிறிது நேரத்துக்கெல்லாம் ஆழ்ந்த நித்திரையின் வசமானான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
5. அந்தப்புர அடைக்கலம்! - Solaimalai Ilavarasi - சோலைமலை இளவரசி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கொண்டு, இளவரசன், மாறனேந்தல், சிறிது, வேண்டும், காட்டிக், அடைக்கலம், மாணிக்கவல்லி, என்றான், அவளுடைய, இளவரசி, சோலைமலை, குரலில், கோட்டை, என்றும், அம்மணி, மட்டும், கொள்கிறேன், பார்த்துக், எதிரிகளிடம், ஒன்றும், அப்போது, வரவில்லை, பார்த்து, வேட்டை, சத்தம், உனக்கு, எவ்வளவு, எனக்கு, விட்டு, கொடுக்க, வேண்டாம், இருந்தது, செய்து, இப்படி, தெரியும், தோன்றியது, அதிகாரத், மாணிக்கவல்லியின், கேட்டாள், மதிலுக்கு, அப்பால், கேட்டுக், வந்தேன், கூறினாள், இப்படிச், இவ்வளவு, அவனுடைய, தன்னைத், தோன்றிய, அப்படிச், யாரும், கூடாது, பார்த்தால், சண்டைக்குப், இருக்க, உன்னிடம், கோட்டைக்குள், அவ்வளவு, என்னுடைய, அபாயம், அடைந்து, வரையில், கோட்டைக்குள்ளே, நின்று, வம்சத்துக்கும், உன்னைக், அப்படியே, அப்படியானால், சொல்கிறபடி, என்னால், நந்தவனத்தில், இந்தக், உலகநாதத், கிடக்கும், தகப்பனாரின், நின்றாள், பிடித்துக், பெரிதும், பக்கம், இப்போது, தெரியாது, மனிதர், என்றால், கொடுமையான, இல்லையா, பன்னிரண்டு, நாய்களை, ஒருநாள், அவரைப், உண்மைதான், என்னைக், அவர்களுடைய, வார்த்தைகள், முதலில், அதற்காக, நல்லவர்கள், இச்சமயம், இவ்வளவெல்லாம், மேலும், வைத்துக், இல்லாத, முடியாது, தற்சமயம், அச்சமயம், மகாராஜா, நீங்கும், ஒளிந்திருக்கக், ஒளிந்து, துணிச்சல், விடலாம், கேட்டது, வெளியேறி, இன்றைக்கு, தொடர்ந்து, பிரவேசித்து, கோட்டைக்குள்ளேயே, கொண்டே, எதிரில், இவ்விதம், அவர்களை, காட்டிலும், அந்தக், எண்ணம், அவனுக்கு, தப்புவதற்காக, சோலைமலைக், அந்தப், மதிலின், அருகில், மனத்தில், மரத்தின், அகப்பட்டுக், சொல்லுகிறேன், அரண்மனையில், வார்த்தை, உலகநாதத்தேவன், ஏதாவது, சொல்லிக், கொண்டிருந்த, இரக்கம், மறைந்ததும், தனக்கு, அந்தச், பேசிக், நந்தவனத்துக்குள், அந்தப்புரத்து, எங்கேயாவது, இளவரசனுடைய, நேரத்தில், உத்தியான, அதையெல்லாம், மண்டபத்தை, மண்டபத்தின், பிறந்த, எப்படிப், பார்த்தாள், இன்னும், கையில், திருடுவதற்கு