சோலைமலை இளவரசி - 20. கதை முடிந்தது!
குமாரலிங்கம் ரயிலிருந்து தப்பிய ஏழாம் நாள், சுமார் 250 மைலுக்கு மேல் கால்நடையாக நடந்து சோலைமலை மணியக்காரர் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மணியக்காரர் அவனைப் பார்த்ததும் முதலில் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. யாரோ ஊர் சுற்றும் பிச்சைக்காரன் என்று நினைத்தார். "ஐயா! என்னை அடையாளம் தெரியவில்லையா?" என்று கேட்டதும், உற்றுப் பார்த்துத் தெரிந்து கொண்டார். "ஐயோ, குமாரலிங்கமா? இது என்ன கோலம்? அடாடா! இப்படி உருமாறிப் போய் விட்டாயே?" என்று அலறினார். குமாரலிங்கம் அக்கம் பக்கம் பயத்துடன் பார்த்துவிட்டு மெல்லிய குரலில், "ஐயா! மெதுவாகப் பேசுங்கள் என் பெயரை உரத்துச் சொல்லாதீர்கள்!" என்று சொன்னான்.
"அப்பனே! ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? ஏன் உன் பெயரை உரத்துச் சொல்லக்கூடாது என்கிறாய்?" என்று கேட்ட மணியக்காரர் மறுகணம் பெருந்திகிலுடன் "விடுதலைக்குப் பிறகு இன்னும் ஏதாவது செய்து விட்டாயா, என்ன?" என்று பரபரப்புடன் கேட்டார்.
"விடுதலையா? என்ன விடுதலை?" என்று ஒன்றும் புரியாத திகைப்புடன் குமாரலிங்கம் கேட்டான்.
"என்ன விடுதலையா? உனக்குத் தெரியாதா, என்ன? பின் எப்படி இங்கே வந்தாய்?" என்று மணியக்காரர் கேட்டது குமாரலிங்கத்தின் மனக் குழப்பத்தை அதிகமாக்கிற்று.
"ஐயா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே எனக்குத் தெரியவில்லையே? என்னை சென்னைச் சிறையிலிருந்து கண்ணனூர்ச் சிறைக்கு ரயிலில் கொண்டு போனபோது வழியில் தப்பித்து ஓடி வந்தேன். இதை விடுதலை என்று சொல்ல முடியுமா? விடுதலை எப்படி நான் அடைந்திருக்க முடியும்? பிரிவு கவுன்ஸில் அப்பீல் இன்னும் தாக்கல் கூட ஆகவில்லையே? அப்படி அப்பீல் தாக்கல் ஆன போதிலும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது. எந்தக் கோர்ட்டிலே எவ்வளவு தடவை அப்பீல் செய்தால்தான் என்ன பிரயோஜனம்? தலைவிதியை மாற்ற முடியுமா?" என்றான் குமாரலிங்கம்.
"தலை விதியாவது, ஒன்றாவது? அட அசட்டுப் பிள்ளை! இப்படி யாராவது செய்வார்களா? சர்க்காருக்கும் காங்கிரஸுக்கும் சமரசம் ஏற்பட்டு அரசியல் கைதிகள் எல்லாரையும் விடுதலை செய்துவிட்டார்களே! தேசமேல்லம ஒரே கொண்டாட்டமாயிருக்கிறதே! உனக்கு ஒன்றுமே தெரியாதா? ரயிலிலிருந்து நீ என்றைக்குத் தப்பித்துக் கொண்டாய்?" என்று பரபரப்புடன் பேசினார் மணியக்காரர்.
குமாரலிங்கத்தின் மனநிலை அச்சமயம் எப்படியிருந்தது என்று அவனாலேயே சொல்ல முடியாது. அதை நாம் எப்படிச் சொல்ல முடியும்? அதிசயமும் ஆனந்தமும் அவமானமும் அவநம்பிக்கையும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு அவன் உள்ளத்தில் கொந்தளித்தன.
"ஐயா! தாங்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது இந்த துரதிர்ஷ்டம் பிடித்தவனைத் தாங்களும் சேர்ந்து பரிகாசம் செய்கிறீர்களா?" என்று கேட்டான்.
மணியக்காரர் அவனுடைய கேள்விக்குத் தாமே பதில் சொல்வதற்குப் பதிலாகப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த பத்திரிகைகளை எடுத்துக் காட்டினார்.
அந்தப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த விவரங்கள் மணியக்காரர் சொன்ன விஷயங்களை எல்லாம் உறுதிப்படுத்தின.
அதாவது, காங்கிரஸுக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதென்றும், அதன் காரணமாக அரசியல் கைதிகள் எல்லாரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஒரு பத்திரிகையில் இருந்தது. மறுநாள் பத்திரிகையில் இன்னின்ன கேஸைச் சேர்ந்தவர்கள் விடுதலையாவார்கள் என்று கொடுக்கப்பட்டிருந்த விவரமான ஜாபிதாவில் 'தளவாய்ப் பட்டணம் கலகக் கேஸ் கைதிகள்' என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதைப் பார்த்துவிட்டுக் குமாரலிங்கம் சிறிது நேரம் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தான். ரயிலிலிருந்து தப்பியது முதல் அவனுடைய கால்நடைப் பிரயாணத்தின் போது கண்டு கேட்டு அநுபவித்த பல சம்பவங்களுக்கு இப்போது தான் அவனுக்குப் பொருள் விளங்கிற்று.
உதாரணமாக வழியில் பல இடங்களில் தேசீயக் கொடிகளைக் கம்பீரமாகப் பிடித்துக் கொண்டு, 'வந்தேமாதரம்!' 'ஜய் ஹிந்த்!' முதலிய கோஷங்களைப் போட்டுக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலம் வந்த காட்சிகளை அவன் தூரத்திலிருந்து பார்த்தான். அம்மாதிரிக் காட்சிகளைப் பார்க்க நேர்ந்தபோதெல்லாம் 'ஏது? இவ்வளவு அடக்கு முறைக்குப் பிறகும் நாட்டில் சுதந்திர இயக்கம் பலமாக நடக்கிறதே! இந்தியா தேசத்துக்குக்கூட விடுதலை உண்டு போலிருக்கிறதே!' என்று அவன் எண்ணினான். உண்மையில் அந்த ஆர்ப்பட்டங்களுக்கெல்லாம் காரணம் என்னவென்பது இப்போதுதான் அவனுக்கு மிகவும் நன்றாய்த் தெரிந்தது.
இன்னும் பல இடங்களில் போலீஸாரைக் கண்டு அவன் அவசரமாக மறைந்து ஒளிந்து கொள்ளப் பிரயத்தனப் பட்டான். ஆயினும் அவன் பேரில் அவர்கள் சந்தேகப்படவும் இல்லை; பிடிக்க முயலவும் இல்லை.
இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் மிகவும் களைத்துப் போய்ச் சாலை ஓரத்துச் சாவடி ஒன்றின் தாழ்வாரத் தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். திடீரென்று இரண்டு போலீஸ்காரர்கள் சமீபத்தில் வருவதைப் பார்த்துவிட்டு, சட்டென்று திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்குவதுபோல் அவன் பாசாங்கு செய்தான்.
போலீஸ் ஜவான்கள் இருவரும் அவன் அருகில் நெருங்கியதும் அவர்களில் ஒருவன், "இவனைப் பார்த்தாயா? குமாரலிங்கத்தின் சாயலாகத் தோன்றுகிறதல்லவா?" என்றான். அதற்கு இன்னொருவன், "குமாரலிங்கம் இங்கே எதற்காக வந்து திக்கற்ற அநாதையைப் போல் சாவடியில் படுத்திருக்கிறான்? மேளமும் தாளமும் தடபுடல் படாதா இத்தனை நேரம் அவனுக்கு?" என்றான்.
இவர்களுடைய பேச்சு குமாரலிங்கத்துக்கு ஒரு மர்மப் புதிராயிருந்தது. வேறு எந்தக் குமாரலிங்கத்தைப் பற்றியோ பேசுகிறார்கள் என்று எண்ணினான். தன்னைப் பற்றித்தான் அவர்கள் பேசியிருக்க வேண்டும் என்று இப்போது உறுதிப்பட்டது.
"ஐயா! இந்தச் செய்தி ஒன்றும் எனக்கு உண்மையில் தெரியாதுதான்? சாவதற்கு முன்னால் சோலைமலைக்கு எப்படியாவது ஒரு தடவை வரவேண்டும்; தங்களையும் தங்கள் குமாரியையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் ரயிலிலிருந்து தப்பித்து வந்தேன். போலீஸார் என்னுடைய சொந்த ஊரிலே கொண்டு போய் என்னை விட்டு விடுதலைச் செய்தியைச் சொல்ல எண்ணியிருந்தார்கள் போலிருக்கிறது. இந்த ஒரு வாரமும் நான் பட்ட கஷ்டங்களுக்கு அளவேயில்லை. அவ்வளவும் வீண் என்று இப்போது தெரிகிறது. என்னைப் போல் மூடன் வேறு யாரும் இருக்கமுடியாது!" என்றான் குமாரலிங்கம்.
"அப்பனே! போனதைப் பற்றி ஏன் வீணாகக் கவலைப்பட வேண்டும்? எப்படியோ நீ இங்கு வந்து சேர்ந்தாயே அதுவே பெரிய காரியம்!" என்றார் மணியக்காரர்.
"ஐயா! பொன்னம்மாள் எங்கே? அவளைப் பார்த்து விட்டு நான் போகவேண்டும்" என்றான் குமாரலிங்கம்.
"அவ்வளவு அவசரம் வேண்டாம், தம்பி! பொன்னம்மாள் அந்த பாழடைந்த கோட்டையிலே போய் உட்கார்ந்திருக்கிறாள். சதாசர்வ காலமும் அங்கே தான் அவளுக்கு வாசம். குளித்துச் சாப்பிட்டுவிட்டு அவளைப் போய்ப் பார்க்கலாம்!" என்று மணியக்காரர் சொன்னார். உடனே ஊர் நாவிதரையும் அங்கு அழைத்துக் கொண்டு வரும்படி செய்தார்.
அவர் விருப்பத்தின்படியே குமாரலிங்கம் க்ஷவரம் செய்துகொண்டு ஸ்நானம் செய்து புதிய உடை உடுத்திக் கொண்டான். அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டுக் கோட்டைக்குப் புறப்பட்டான். மணியக்காரரும் அவனோடு கிளம்பிச் சென்றார். போகும்போது, "அப்பா குமாரலிங்கம்! உன்னைப் பிரிந்த துயரம் பொன்னம்மாளை ரொம்பவும் பீடித்திருக்கிறது திடுதிப்பென்று அவள் முன்னால் தோன்றிப் பயப்படுத்தி விடாதே! படபடப்பாகப் பேசாதே! கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்!" என்று மணியக்காரர் எச்சரித்தார்.
இந்த எச்சரிக்கை எல்லாம் எதற்காக என்று அப்போது குமாரலிங்கத்துக்கு அவ்வளவாக விளங்கவில்லை. பொன்னம்மாளைப் பார்த்துப் பேசிய பிறகுதான் விளங்கிற்று.
மணியக்காரரும் குமாரலிங்கமும் வந்ததைப் பொன்னம்மாள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அவர்களைப் பார்த்ததும் பாராதது போல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இதைப் பொருட்படுத்தாமல் குமாரலிங்கம் அவள் அருகில் சென்று உட்கார்ந்து, "ஏன் இவ்வளவு பாராமுகம்? இத்தனை நாள் கழித்து வந்திருக்கிறேனே, பிரியமாக வரவேற்று ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? ஒருவேளை என்னை மறந்து விட்டாயா அல்லது அடையாளம் தெரியவில்லையா?" என்று மிக்க பரிவோடு கேட்டான்.
அவ்வளவு நேரமும் சும்மா இருந்த பொன்னம்மாள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்து, "நீங்கள் யார்? அடையாளம் எனக்குத் தெரியத்தான் இல்லை!" என்றாள்.
"நான் தான் குமாரலிங்கம். உனக்குக் கூட அடையாளம் தெரியாதபடி அவ்வளவு மாறிப்போய் விட்டேனா அல்லது உன் மனந்தான் மாறிவிட்டதா?" என்றான் பொன்னம்மாளின் காதலன்.
"குமாரலிங்கமா? அது யார்? நான் அந்தப் பெயரைக் கேட்டதில்லையே?" என்று பொன்னம்மாள் சொன்னபோது குமாரலிங்கத்துக்கு 'திக்' என்றது.
"பொன்னம்மா! உண்மையாகத்தான் பேசுகிறாயா? அல்லது விளையாட்டா? குமாரலிங்கத்தை அவ்வளவு சீக்கிரமாகவா நீ மறந்துவிட்டாய்?"
"ஐயா! குமாரலிங்கம் என்று நான் கேட்டதுமில்லை. என் பெயர் பொன்னம்மாளும் இல்லை! வீணாக என்னை எதற்காகத் தொந்தரவு செய்கிறீர்கள்?"
குமாரலிங்கத்தின் குழம்பிய உள்ளத்தில் பளிச்சென்று ஓர் ஒளிக்கிரணம் தோன்றியது.
"பொன்னம்மாள் இல்லாவிட்டால், பின்னே நீ யார்?" என்று கேட்டான்.
"என்னைப் பார்த்தால் தெரியவில்லையா? சோலைமலை இளவரசி நான்; என் பெயர் மாணிக்கவல்லி."
இதைக் கேட்டதும் குமாரலிங்கத்தின் உள்ளத்தில் ஒரு பெரும் வேதனை உதித்தது. மனத்தை திடப்படுத்திக் கொண்டு, தயக்கம் தொனித்த குரலில், "மாணிக்கவல்லி! நான் தான் மாறனேந்தல் இளவரசன். என்னைத் தெரியவில்லையா?" என்றான். "ஆ! ஏன் பொய் சொல்கிறீர்? மாறனேந்தல் இளவரசர் இப்படியா இருப்பார்?" என்று சொல்லிவிட்டுப் பொன்னம்மாள் சிரித்தாள்.
அந்தச் சிரிப்பின் ஒலி குமாரலிங்கத்துக்கு உண்மையை தெளிவாக உணர்த்தியது. பொன்னம்மாளின் அறிவு பேதலித்துவிட்டதென்றும், இனித் தன்னை ஒரு நாளும் அவள் அறிந்துகொள்ளப் போவதில்லையென்றும் உணர்ந்தான். அதே சமயத்தில் அவனுடைய இருதய வீனையின் ஜீவ நரம்பு படீரென்று வெடித்து அறுந்தது.
தமிழ்நாட்டில் உள்ள முருகனுடைய கோயில்களில் களை பொருந்திய முகத்துடன் கூடிய இளம் வயதுச் சாமியார் ஒருவரை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவர் யார் என்று விசாரித்துப் பாருங்கள்.
'சோலைமலைச் சாமியார்' என்று பதில் சொல்வார்கள். அதோடு அவர் உலகப்பற்றை அடியோடு ஒழித்த 'பால சந்நியாசி' என்றும், 'பரம பக்த சிகாமணி' என்றும், பூர்வாசிரமத்தில் அவர் 'தேசத்தொண்டர் குமாரலிங்கம்' என்றுங்கூடத் தெரிந்தவர்கள் சொல்லுவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
20. கதை முடிந்தது! - Solaimalai Ilavarasi - சோலைமலை இளவரசி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - குமாரலிங்கம், மணியக்காரர், கொண்டு, என்றான், விடுதலை, பொன்னம்மாள், குமாரலிங்கத்தின், அடையாளம், கேட்டான், அவ்வளவு, தெரியவில்லையா, குமாரலிங்கத்துக்கு, அல்லது, நீங்கள், அப்பீல், வேண்டும், பார்க்க, இன்னும், என்றும், ரயிலிலிருந்து, உள்ளத்தில், கைதிகள், இப்போது, அவனுடைய, சோலைமலை, எண்ணினான், உண்மையில், இவ்வளவு, அவனுக்கு, விளங்கிற்று, இடங்களில், எதற்காக, மணியக்காரரும், பார்த்து, அவளைப், பொன்னம்மாளின், மாணிக்கவல்லி, சாமியார், மாறனேந்தல், என்னைப், விட்டு, உட்கார்ந்து, அவர்கள், அருகில், பத்திரிகையில், முன்னால், இத்தனை, மிகவும், காங்கிரஸுக்கும், அப்பனே, உரத்துச், செய்து, விட்டாயா, விடுதலையா, பரபரப்புடன், குரலில், பார்த்துவிட்டு, பார்த்ததும், இளவரசி, கேட்டதும், குமாரலிங்கமா, பக்கம், இப்படி, ஒன்றும், தெரியாதா, எந்தக், தாக்கல், சர்க்காருக்கும், சமரசம், அந்தப், அரசியல், முடியும், முடியுமா, எனக்குத், எப்படி, வழியில், தப்பித்து, வந்தேன், எல்லாம்