பார்த்திபன் கனவு - 2.7. திருப்பணி ஆலயம்
சக்கரவர்த்தியும் குந்தவியும் முதலில் கோவிலுக்குள்ளே சென்று அம்பிகையைத் தரிசித்து விட்டு வந்தார்கள். பந்தலின் நடுவில் அமைந்திருந்த சிம்மாசனங்களில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து அமர்ந்ததும் மந்திரி மண்டலத்தாரும் மற்றவர்களும் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தனர். கோயில் குருக்கள்மார் தொடர்ந்து வந்து சக்கரவர்த்திக்கும் மற்றவர்களுக்கும் விபூதி குங்குமப் பிரசாதங்களை அளித்து, மலர் மாலைகள் சூட்டி முழக்கங்களுக்கிடையே சக்கரவர்த்தி தம் திருக்கரத்தினால் ஆசாரிய ஸ்தபதியின் தலையில் பட்டுப் பரிவட்டம் கட்டினார். பிறகு உயர்ந்த பட்டு வஸ்திரங்களும் நூறு பொன் கழஞ்சுகளும் வைத்திருந்த தாம்பூலத் தட்டையும் அவரிடம் கொடுத்தார். அவற்றை ஆசாரிய ஸ்தபதி வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். அவ்விதமே அங்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான சிற்பிகளுக்கும் மந்திரி மண்டலத்தாருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தலையில் பரிவட்டம் கட்டிப் பட்டு வஸ்திரங்களையும் பொன் கழஞ்சுகளையும் பரிசளித்தார்கள்.
பின்னர் மந்திரி மண்டலத்தின் தலைவரான விஷ்ணு சர்மர் எழுந்து சபையோரைப் பார்த்துப் பேசினார். பல்லவ ராஜ வம்சத்தில் தோன்றிய பெயர் பெற்ற மன்னர்களின் வீரதீர பராக்கிரமங்களை அவர் வர்ணித்தார். அவர்களில் கடைசி மன்னரான மகேந்திர வர்மரின் அற்புத குணாதிசயங்களைப் புகழ்ந்தார். அவருடைய அருந்தவப் புதல்வரான மாமல்ல சக்கரவர்த்தி பட்டத்துக்கு வந்த பிறகு பல்லவ சாம்ராஜ்யத்தின் புகழ் கடல்களுக்கு அப்பாலும் பரவியிருக்கிறதென்றும், அதற்கு உதாரணமாக இந்தச் சபையிலேயே ஒரு சம்பவம் நடக்கப்போகிறதென்றும், செண்பகத் தீவிலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகள் தங்களுடைய தீவைப் பல்லவ சாம்ராஜ்யத்தில் சேர்த்துக்கொண்டு பரிபாலிக்கும் படி சக்கரவர்த்தியை வேண்டிக்கொள்ளப் போகிறார் என்றும் விஷ்ணு சர்மர் தெரிவித்த போது, சபையோர் தங்களுடைய குதூகலத்தைப் பலவித கோஷங்களினால் வௌதயிட்டனர்.
மீண்டும் அமைச்சர் தலைவர் கூறியதாவது:- "மகாஜனங்களே! காஞ்சியும் மாமல்லபுரமும் பல்லவ சாம்ராஜ்யத்தின் இரு கண்களாகும். சாம்ராஜ்யத்துக்குத் தலை நகரமான காஞ்சி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு துறைமுகப்பட்டினமான மாமல்லபுரம் நெடுநாளாக முக்கியமாயிருந்து வந்தது. ஆனால் காலஞ்சென்ற மகேந்திர சக்கரவர்த்தி இங்கே சிற்பத் திருப்பணியை ஆரம்பித்த பிறகு, காஞ்சியின் பெருமை சிறிது தாழ்ந்து மாமல்லபுரத்தின் புகழ் ஓங்கிவிட்டது. எட்டு வருஷங்களுக்கு முன்பு நமது சக்கரவர்த்திப் பெருமான் வடதேசத்துக்குப் படையெடுத்துச் சென்ற போது, இங்கு நடந்துவந்த சிற்பத் திருப்பணியை நிறுத்த வேண்டியிருந்தது. பாதகனான புலிகேசியைக் கொன்று வாதாபியைத் தீக்கிரையாக்கி விட்டுத் திரும்பிய பிறகு சில காலம் தேசத்திலிருந்து பஞ்சம் பிணிகளை நீக்கும் முக்கியமான பிரயத்தனங்களிலும், உள்நாட்டுச் சிறு பகைகளை அழிக்கும் முயற்சியிலும் சக்கரவர்த்தி ஈடுபட்டிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பராசக்தியின் அருளினாலும், பல்லவ குலத்தின் பரம்பரையான தர்ம பலத்தினாலும், சக்கரவர்த்தி ஈடுபட்டிருந்த அந்தக் காரியங்கள் எல்லாம் இனிது நிறைவேறிவிட்டன. சக்கரவர்த்தியின் திருப்பெயரைப் பூண்ட இந்தப் பட்டினத்திலே சிற்பத் திருப்பணிகள் இன்று மறுபடியும் ஆரம்பமாகின்றன. இனிமேல் சக்கரவர்த்தியும் இந்த நகருக்கு அடிக்கடி விஜயம் செய்து திருப்பணி வேலைகளை மேற்பார்வை செய்வதாகக் கிருபை கூர்ந்து வாக்களித்திருக்கிறார்."
இவ்விதம் அமைச்சர் தலைவர் கூறிச் சபையோரை ஆனந்தக் கடலில் ஆழ்த்திய பிறகு, செண்பகத் தீவின் தூதர்கள் சக்கரவர்த்தியின் சமூகத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுடைய தலைவன் பேசியது தமிழ் மொழியேயானாலும் சற்று விசித்திரமான தமிழாயிருந்த படியால், சபையோர்களுக்குப் புன்னகை உண்டு பண்ணிற்று.
அந்தத் தூதர் தலைவன் கூறியதின் சாராம்சம் பின்வருமாறு:-
செண்பகத் தீவின் வாசிகள், சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கரிகால் சோழரின் காலத்தில் சோழ நாட்டிலிருந்து அங்கே போய்க் குடியேறிய தமிழர்களின் சந்ததிகள், அந்தத் தீவை ஆண்டு வந்த ராஜ வம்சம் சந்ததியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு நசிந்துப் போய்விட்டது. ஆகவே, செண்பகத் தீவு தற்சமயம் ராஜா இல்லாத ராஜ்யமாயிருந்து வருகிறது. இதை அறிந்ததும் பக்கத்துத் தேசங்களிலுள்ள மக்கள் - முக்கியமாகத் தட்டை மூக்குச் சாதியினர் - அடிக்கடி செண்பகத் தீவில் வந்திறங்கிக் கொள்ளையிட்டும், இன்னும் பலவித உபத்திரங்களை விளைவித்தும் செல்லுகிறார்கள். இதையெல்லாம் உத்தேசித்துச் செண்பகத் தீவின் ஜனங்கள் மகாசபை கூட்டி ஏக மனதாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது தற்சமயம் தாய்நாட்டிலே பிரசித்த சக்கரவர்த்தியாய் விளங்கும் நரசிம்ம பல்லவேந்திரருக்குத் தூதனுப்பி, செண்பகத் தீவைப் பல்லவ சாம்ராஜ்யத்தில் சேர்த்துக் கொண்டு சக்கரவர்த்தியின் சார்பாகத் தீவை ஆட்சி புரிவதற்கு இராஜ வம்சத்தைச் சேர்ந்த வீர புருஷர் ஒருவரை அனுப்பும்படி பிரார்த்திக்க வேண்டியது.
சக்கரவர்த்தி தூதர்களின் பிரார்த்தனைக்கு உடனே மறுமொழி சொல்லவில்லை. சில நாள் யோசித்தே முடிவு செய்யவேண்டுமென்றும், அதுவரை அந்தத் தூதர்கள் பல்லவ சாம்ராஜ்யத்திலுள்ள காஞ்சி முதலிய நகரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாமென்றும், ஒருவாரத்துக்குள் அவர்களுக்கு மறுமொழி சொல்லக்கூடும் என்றும் தெரிவித்தார்.
இதன் பின்னர் நரசிம்மவர்மரும் குந்தவி தேவியும் மந்திரிகளும் ஸ்தபதிகளும் பின் தொடர்ந்துவர துர்க்கா தேவியின் கோயிலுக்கு மறுபடியும் வந்தனர். அந்தக் கோயிலின் வெளி மண்டபத்தில் இருபுறத்துச் சுவர்களும் வெறுமையாக இருந்தன. சக்கரவர்த்தி ஒரு பக்கத்துச் சுவரின் அருகில் வந்து, குந்தவிதேவியின் கையிலிருந்த காவிக் கட்டியை வாங்கி, அந்தச் சுவரில் சித்திரம் வரையத் தொடங்கினார். அருகில் இருந்தவர்கள் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நிற்கும்போதே, வெகு சீக்கிரத்தில் சிம்மவாகனத்தின் மீது போர்க்கோலத்துடன் வீற்றிருக்கும் துர்க்கை தேவியின் திரு உருவம் அந்தச் சுவரில் சாக்ஷாத் காரமாய்த் தோன்றியது. குந்தவி தேவி பயம் தொனித்த குரலில், "அப்பா! தேவியின் உக்கிரம் தாங்க முடியவில்லை. யாருடன் அம்பிகை சண்டையிடுகிறாளோ, அந்த அசுரனுடைய உருவத்தையும் எழுதிவிடுங்கள்" என்றாள். உடனே சக்கரவர்த்தி தேவிக்கு எதிரே கையில் கதாயுதம் தரித்த மகிஷாசுரனுடைய உருவத்தையும் எழுதினார். "இப்போது தான் பயமின்றிப் பார்க்க முடிகிறது!" என்றாள் குந்தவி. பிறகு, சக்கரவர்த்தி அங்கே அருகில் நின்ற ஆசாரிய ஸ்தபதியைப் பார்த்து, "ஸ்தபதியாரே, இந்த விஜயதசமி தினத்தில் தான் அம்பிகை மகிஷாசுரனை வதம் செய்தாள். நமது திருப்பணியை அந்தக் காட்சியுடனேயே ஆரம்பித்து வைக்கலாமல்லவா?" என்றார். ஆசாரிய ஸ்தபதியும் வணக்கத்துடன் ஆமோதித்துத் தம் கையிலிருந்த கல்லுளியைச் சக்கரவர்த்தியின் பால் நீட்ட, சக்கரவர்த்தி அதை வாங்கிக் கொண்டு தாம் எழுதிய சித்திரத்தின் மேல் கல்லுளியால் சில முறை பொளிந்தார். பிறகு கல்லுளியை ஸ்தபதியிடம் கொடுத்தார். ஸ்தபதியார் அதைப் பக்தியுடன் பெற்றுக் கொண்டு அம்பிகைக்கும் சக்கரவர்த்திக்கும் வணக்கம் செலுத்தி விட்டுச் சிற்ப வேலையை ஆரம்பித்தார்.
அன்று முதற்கொண்டு பல வருஷ காலம் மாமல்லபுரத்தில் ஆயிரக்கணக்கான கல்லுளிகள் சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
2.7. திருப்பணி ஆலயம் - Parthiban Kanavu - பார்த்திபன் கனவு - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சக்கரவர்த்தி, செண்பகத், ஆசாரிய, கொண்டு, சக்கரவர்த்தியின், குந்தவி, தீவின், திருப்பணியை, அந்தத், சக்கரவர்த்தியும், தேவியின், அருகில், மந்திரி, சிற்பத், அந்தக், தூதர்கள், தலைவன், அடிக்கடி, மறுபடியும், மறுமொழி, சுவரில், அம்பிகை, என்றாள், அந்தச், கையிலிருந்த, தற்சமயம், முன்பு, ஆண்டுகளுக்கு, அமைச்சர், கொடுத்தார், வாங்கிக், பின்னர், பரிவட்டம், தலையில், வந்தார்கள், தேவியும், சக்கரவர்த்திக்கும், விஷ்ணு, சர்மர், என்றும், திருப்பணி, தலைவர், சாம்ராஜ்யத்தில், தீவைப், மகேந்திர, சாம்ராஜ்யத்தின், தங்களுடைய, காஞ்சி