பார்த்திபன் கனவு - 2.1. சிவனடியார்
பொழுது புலர இன்னும் அரை ஜாமப் பொழுது இருக்கும். கீழ்வானத்தில் காலைப் பிறையும் விடிவெள்ளியும் அருகருகே ஒளிர்ந்து கொண்டிருந்தன. உச்சிவானத்தில் வைரங்களை வாரி இறைத்தது போல் நட்சத்திரங்கள் பிரகாசித்தன. வடக்கே ஸப்த ரிஷி மண்டலம் அலங்காரக் கோலம் போட்டதுபோல் காட்சியளித்தது. தெற்கு மூலையில் சுவாமி நட்சத்திரம் விசேஷ சோபையுடன் தனி அரசு புரிந்தது.
அந்த மனோகரமான அதிகாலை நேரத்தில், காவேரி பிரவாகத்தின் 'ஹோ' என்ற சத்தத்தைத் தவிர வேறு சத்தம் ஒன்றுமேயில்லை. திடீரென்று அத்தகைய அமைதியைக் கலைத்துக் கொண்டு 'டக் டக் டக்' என்று குதிரையின் காலடிச் சத்தம் கேட்கலாயிற்று. ஆமாம்; இதோ ஒரு கம்பீரமான உயர்ந்த ஜாதிக் குதிரை காவேரி நதிக் கரைச் சாலை வழியாகக் கிழக்கேயிருந்து மேற்கு நோக்கி வருகிறது. அது விரைந்து ஓடி வரவில்லை; சாதாரண நடையில் தான் வருகிறது. அந்தக் குதிரைமீது ஆஜானுபாகுவான ஒரு வீரன் அமர்ந்திருக்கிறான். போதிய வெளிச்சமில்லாமையால், அவன் யார், எப்படிப்பட்டவன் என்று அறிந்து கொள்ளும்படி அங்க அடையாளங்கள் ஒன்றும் தெரியவில்லை. நெடுந்தூரம் விரைந்து ஓடிவந்த அக்குதிரையை இனிமேலும் விரட்ட வேண்டாமென்று அவ்வீரன் அதை மெதுவாக நடத்தி வந்ததாகத் தோன்றியது. அவன் தான் சேரவேண்டிய இடத்துக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டதாகவும் காணப்பட்டது.
அவனுக்கு வலதுகைப் புறத்தில் காவேரி நதியில் பிரவாகம். இடது புறத்திலோ அடர்ந்த மரங்களும் புதர்களும் நிறைந்த காடாகத் தோன்றியது. வீரன், இடது புறத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தான். ஓரிடத்துக்கு வந்ததும் குதிரையை இடதுபுறமாகத் திருப்பினான். குதிரையும் அந்த இடத்தில் திரும்பிப் பார்க்கப் பழக்கப்பட்டது போல் அநாயாசமாகச் செடி கொடிகள் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து சென்றது. கவனித்துப் பார்த்தால் அந்த இடத்தில் ஒரு குறுகிய ஒற்றையடிப் பாதை போவது தெரியவரும்.
அந்தப் பாதை வழியாகக் குதிரை மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு தான் சென்றது. இரண்டு பக்கங்களிலும் நெருங்கி வளர்ந்திருந்த புதர்களும், கொடிகளும், மேலே கவிந்திருந்த மரக் கிளைகளும் குதிரை எளிதில் போக முடியாதபடி செய்தன. குதிரை மீதிருந்த வீரனோ அடிக்கடி குனிந்தும், வளைந்து கொடுத்தும், சில சமயம் குதிரையின் முதுகோடு முதுகாய்ப் படுத்துக் கொண்டும் மரக்கிளைகளினால் கீழே தள்ளப்படாமல் தப்பிக்க வேண்டியிருந்தது. இத்தகைய பாதை வழியாகக் கொஞ்சதூரம் சென்ற பிறகு திடீரென்று சிறிது இடைவெளியும் ஒரு சிறு கோயிலும் தென்பட்டன. கோயிலுக்கெதிரே பிரம்மாண்டமான யானை, குதிரை முதலிய வாகனங்கள் நின்றதைப் பார்த்தால், அது ஐயனார் கோயிலாயிருக்க வேண்டுமென்று ஊகிக்கலாம். வேண்டுதலுக்காக பக்தர்கள் செய்துவைத்த அந்த மண் யானை - குதிரைகளில் சில வெகு பழமையானவை; சில புத்தம் புதியவை. அவற்றின் மீது பூசிய வர்ணம் இன்னும் புதுமை அழியாமலிருந்தது. பலிபீடம், துவஜ்தம்பம் முதலியவையும் அங்குக் காணப்பட்டன.
கீழ்வானம் வெளுத்துப் பலபலவென்று பொழுது விடியும் சமயத்தில் மேற்சொன்ன வீரன் குதிரையின்மீது அங்கே வந்து சேர்ந்தான். வீரன் குதிரையிலிருந்து கீழே குதித்து அவசர அவசரமாகச் சில அதிசயமான காரியங்களைச் செய்யத் தொடங்கினான். மண் யானைகளுக்கும் மண் குதிரைகளுக்கும் மத்தியில் தான் ஏறிவந்த குதிரையை நிறுத்தினான். குதிரைமீது கட்டியிருந்த ஒரு மூட்டையை எடுத்து அவிழ்த்தான். அதற்குள் இருந்த புலித்தோல், ருத்திராட்சம், பொய் ஜடாமுடி முதலியவைகளை எடுத்துத் தரித்துக் கொள்ளத் தொடங்கினான். சற்று நேரத்தில் பழைய போர் வீரன் உருவம் அடியோடு மாறி, திவ்ய தேஜஸுடன் கூடிய சிவயோகியாகத் தோற்றம் கொண்டான்.
ஆம்; வெண்ணாற்றங் கரையில் ரணகளத்தில் பார்த்திபனுக்கு வரமளித்த சிவனடியார்தான் இவர்.
தம்முடைய பழைய உடைகளையும், ஆபரணங்களையும், ஆயுதங்களையும் மூட்டையாகக் கட்டி, உடைந்து விழுந்திருந்த மண் யானை ஒன்றின் பின்னால் வைத்தார் அந்தச் சிவயோகி. குதிரையை ஒரு தடவை அன்புடன் தடவிக் கொடுத்தார். குதிரையும் அந்தச் சமிக்ஞையைத் தெரிந்து கொண்டது போல் மெதுவான குரலில் கனைத்தது.
பிறகு அங்கிருந்து அச்சிவனடியார் கிளம்பி ஒற்றையடிப்பாதை வழியாகத் திரும்பிச் சென்று காவேரிக் கரையை அடைந்தார். மறுபடியும் மேற்கு நோக்கித் நடக்க ஆரம்பித்தார்.
ஒரு நாழிகை வழி நடந்த பிறகு சூரியன் உதயமாகும் தருணத்தில் இந்தச் சரித்திரத்தின் ஆரம்ப அத்தியாயத்தில் நாம் பார்த்திருக்கும் தோணித் துறைக்கு வந்து சேர்ந்தார். அங்கே படகோட்டி பொன்னனுடைய குடிசைக்கு அருகில் வந்து நின்று, "பொன்னா!" என்று கூப்பிட்டார்.
உள்ளிருந்து "சாமியார் வந்திருக்கிறார் வள்ளி" என்று குரல் கேட்டது. அடுத்த விநாடி பொன்னன் குடிசைக்கு வெளியே வந்து சிவனடியார் காலில் விழுந்தான். அவன் பின்னோடு வள்ளியும் வந்து வணங்கினாள். பிறகு மூவரும் உள்ளே போனார்கள். வள்ளி பயபக்தியுடன் எடுத்துப் போட்ட மணையில் சிவனடியார் அமர்ந்தார். "பொன்னா! மகாராணியும் இளவரசரும் வஸந்தமாளிகையில்தானே இருக்கிறார்கள்?" என்று அவர் கேட்டார்.
"ஆம் சுவாமி! இன்னும் கொஞ்ச நாளில் நமது இளவரசரையும் 'மகாராஜா' என்று எல்லோரும் அழைப்பார்களல்லவா?"
"ஆமாம்; எல்லாம் சரியாக நடந்தால், நீ உடனே போய் அவர்களை அழைத்துக் கொண்டுவா!" என்றார் சிவனடியார்.
"இதோ போகிறேன், வள்ளி சுவாமியாரைக் கவனித்துக் கொள்!" என்று சொல்லிவிட்டுப் பொன்னன் வெளியேறினான். சிறிது நேரத்திற்கெல்லாம் படகு தண்ணீரில் போகும் சலசலப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
2.1. சிவனடியார் - Parthiban Kanavu - பார்த்திபன் கனவு - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - குதிரை, சிவனடியார், குதிரையை, வழியாகக், சத்தம், கொண்டு, பொழுது, காவேரி, இன்னும், பார்த்தால், சென்றது, குதிரையும், குடிசைக்கு, சிறிது, பொன்னன், பொன்னா, தொடங்கினான், அந்தச், விரைந்து, குதிரையின், திடீரென்று, நேரத்தில், சுவாமி, மேற்கு, வருகிறது, அடர்ந்த, தோன்றியது, குதிரைமீது, புதர்களும்