பார்த்திபன் கனவு - 2.23. நள்ளிரவில்
அன்றிரவு ஏறக்குறைய ஒன்றரை ஜாமம் ஆனபோது உறையூர் நகரில் நிசப்தம் குடிகொண்டது. வீதிமுனைகளில் கல் தூண்களின்மேல் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குகள் ஒவ்வொன்றாக மங்கி அணையத் தொடங்கின.
உறையூருக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இடையில் சென்ற காவேரி நதியின்மேல் காரிருள் படர்ந்திருந்தது. அன்று சுக்கிலபட்சத்துச் சதுர்த்தி. போதாதற்கு வானத்தைக் கருமேகங்கள் மூடியிருந்தன. இரண்டொரு மழைத்தூறலும் விழுந்தது.
அத்தகைய காரிருளில் காவேரி நதியின் ஓரமாக ஜலத்தைக் கிழித்துக் கொண்டு படகு செல்லும் சலசலப்புச் சத்தம் கேட்டது. கொஞ்சம் உற்றுப் பார்த்தோமானால், ஒரு சிறு படகு கிழக்கேயிருந்து மேற்கே கரையோரமாகப் போவதைக் காணலாம். படகில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பதும் மங்கலாகத் தெரிகிறது. கரையில் நின்ற வண்ணம் ஒருவர், படகைக் கயிற்றினால் இழுத்துக் கொண்டு போவதும் புலப்படுகிறது.
இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்த்தோமானால், அவர்கள் இருவரும் நமக்குத் தெரிந்த புள்ளிகள்தான் என்பதைக் காண்கிறோம். வேறு யாருமில்லை; கரையிலிருந்து படகை இழுத்துக் கொண்டு போகிறவன் படகோட்டி பொன்னன். படகில் உட்கார்ந்திருப்பது வள்ளிதான். வள்ளியின் கையில் ஒரு சிறு கூடை இருக்கிறது. அதற்குள்ளே அகல் விளக்கு ஒன்று மினுக் மினுக்கென்று எரிகிறது. அது அணைந்துவிடாமல் வள்ளி தன்னுடைய சேலைத் தலைப்பால் மறைத்துக் கொண்டு ஜாக்கிரதையாக எடுத்து வருகிறாள்.
அந்தக் கும்மிருட்டில் பிரவாகத்துக்கு எதிராகப் படகை மேற்கு நோக்கி இழுத்துக் கொண்டு போவது இலேசான காரியமில்லை. வழியில் படித் துறைகளும் நதிக்கரை மண்டபங்களும், ஓங்கி வளர்ந்து ஆற்றில் கவிந்திருந்த விருட்சங்களும் குறுக்கிட்டன. ஆனாலும் பொன்னன் சிறிதும் தளர்ச்சியடையாமல் மேற்படி தடங்கல்களையெல்லாம் தாண்டிப் படகை இழுத்துக்கொண்டு போனான்.
படகுக்குப் பின்னால் சுமார் முந்நூறு அடி தூரத்தில் ஒரு நெடிய உருவம் வந்து கொண்டிருந்தது. படகு நின்ற போதெல்லாம் அதுவும் நின்றது. படகு மேலே சென்றால் அதுவும் தொடர்ந்து வந்தது. கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் இந்த உருவமும் நமக்குத் தெரிந்த மனிதனின் உருவந்தான் என்பதைக் காண்கிறோம். ஆமாம்; மாரப்ப பூபதிதான் அப்படிப் பொன்னனுடைய படகை நள்ளிரவில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.
அவனுக்குப் பின்னால் இன்னும் கொஞ்ச தூரத்தில் அதே நதிக்கரை ஓரமாக இன்னொரு உருவம் சத்தம் செய்யாமல் வந்து கொண்டிருந்தது. ஜடா மகுடம் தரித்த சந்நியாசியின் உருவம் அது. ஆம், போர்க்களத்தில் பார்த்திபனுக்கு வரமளித்தவரும், பொன்னன் குடிசையில் நாம் சந்தித்தவருமான அதே சிவனடியார்தான்!
ஏறக்குறைய நள்ளிரவு ஆன சமயத்தில், பொன்னன் படகை நிறுத்தி மிகவும் மெல்லிய குரலில், "வள்ளி! இறங்கு! வந்து விட்டோம்" என்றான்.
அதே சமயத்தில் ஸ்ரீரங்கநாதரின் ஆலயத்தில் அர்த்த ஜாம பூஜைக்குரிய மணிச் சத்தம் 'ஓம் ஓம்' என்று கிளம்பி, நள்ளிரவின் நிசப்தத்தை மீறிக்கொண்டு, வானவெளியெங்கும் வியாபித்து எதிரொலி செய்தது.
பொன்னனுக்கும் வள்ளிக்கும் உடம்பு நடுங்கிற்று, "நல்ல சகுனம், வள்ளி! காரியம் ஜெயந்தான்! சீக்கிரம் இறங்கு!" என்றான் பொன்னன்.
வள்ளி விளக்குக் கூடையை ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு படகிலிருந்து இறங்கினாள்.
பொன்னன் படகை அங்கிருந்த மரத்தின் வேரில் கட்டினான்.
பிறகு இருவரும் கரைமேல் ஏறினார்கள். அங்கே ஒரு நீண்ட மதிற்சுவர் இருந்தது. அந்தச் சுவரில் ஒரு வாசற்படி காணப்பட்டது. அதன் கதவு பூட்டியிருந்தது. பொன்னன் தன் மடியிலிருந்து ஒரு கொத்துச் சாவியை எடுத்து ஒரு சாவியினால் பூட்டைத் திறந்தான்.
இருவரும் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே பிரவேசித்தார்கள்.
'கம்'மென்று செண்பகப் பூவின் நறுமணம் வந்தது.
"பார்த்தாயா, வள்ளி! செண்பகப்பூவின் வாசனையை? இந்த அரண்மனைத் தோட்டத்துக்குள் இதற்கு முன் நீ வந்தது கிடையாதே?" என்றான்.
"இரையாதே!" என்றாள் வள்ளி.
பொன்னன் மறுபடியும் கதவைச் சாத்தி உட்புறம் தாளிட்டான். "பயப்படாதே! என் பின்னோடு வா!"
"நீ சத்தம் போடுவதில்தான் எனக்குப் பயம்."
இருவரும் அந்தச் செண்பகத் தோட்டத்துக்குள் புகுந்து சென்றார்கள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் அதே மதில் வாசற்படியண்டை மாரப்ப பூபதி வந்தான். கதவின் வெளிப்புற நாதாங்கியை இழுத்து மாட்டினான்.
பிறகு அவன் நதியில் இறங்கிப் பொன்னன் மரத்தின் வேரில் கட்டியிருந்த படகை அவிழ்த்து ஆற்றோடு மிதந்து போகும்படி இழுத்துவிட்டான்.
பின்னர் மதிற்சுவர் ஓரமாக மிக விரைவாய் நடந்து சென்றான்.
படகு கரையோரமாக மிதந்து கொண்டு சிறிதுதூரம் போயிற்று. அங்கே வந்து கொண்டிருந்த சிவனடியார் அதைப் பிடித்து நிறுத்தினார். நிறுத்திய இடத்துக்கு அருகிலிருந்து ஒரு பெரிய விருட்சத்தின் வேரில் அதை இழுத்துக் கட்டினார்.
மறுபடியும் மேல்நோக்கிச் சென்று அதே மதிற்சுவரின் வாசற்படிக்கு வந்தார். மாரப்ப பூபதி இழுத்துப் போட்ட நாதாங்கியைக் கழற்றிவிட்டார்.
மீண்டும் திரும்பிச் சென்று படகு கட்டியிருந்த மரத்துக்குப் பின்னால் அமர்ந்தார்.
அச்சமயம் நதியின் அக்கரையில் அநேக தீவர்த்திகளுடன் ஒரு கும்பல் காணப்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் அந்தத் தீவர்த்திகள் நதியின் நடு மத்திக்கு வந்துவிட்டன. பல படகுகள் நதியைக் கடந்து வந்து கொண்டிருந்தன என்று தெரிந்தது.
சிவனடியார் மறைந்திருந்த மரத்துக்குச் சிறிது கிழக்கே படகுகள் கரைக்கு வந்து சேர்ந்தன. படகுகளிலிருந்து பலர் இறங்குகிறது தீவர்த்திகளின் ஜோதியில் தெரிந்தது. அவர்களில் சிறுத்தொண்டரும், அவர் மனைவியாரும், குந்தவி தேவியும் காணப்பட்டனர். சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக உறையூரை ஆண்டு வந்த தளபதி அச்சுதவர்மர், அவர்கள் எல்லாருக்கும் முன்னால் சென்றார். மற்றப் பரிவாரங்களும் ஏவலாளர்களும் பின்னால் வந்தார்கள்.
ஸ்ரீரங்கநாதரின் அர்த்த ஜாம ஆராதனையைத் தரிசித்து விட்டுத் திரும்பிய அந்தப் பக்தர் குழாத்தில் சக்கரவர்த்தி நரசிம்மவர்மரை மட்டும் காணவில்லை. காவேரிக் கரையை ஒளிமயமாக்கிய தீவர்த்திகளுடன் அந்தக் கும்பல் படகிலிருந்து கரையில் இறங்கியபோது சிவனடியார் தாம் இருந்த மரத்தின் மறைவில் இன்னும் நன்றாய் மறைந்து கொண்டு அசையாமல் நின்றார். அவர் மூச்சுவிடும் சத்தம்கூட அப்போது கேட்கவில்லை.
தீவர்த்திகளுடனே அந்தக் கும்பல் நகருக்குள் புகுந்து மறைந்த பிறகு காவேரி நதிதீரத்தில் முன்னால் இருந்ததை விட அதிகமான கனாந்தகாரம் குடிகொண்டது.
சிவனடியார் மரத்தின் மறைவிலிருந்து மறுபடியும் வெளிவந்து நதிக்கரையில் படகின் அருகில் அமர்ந்தார். அந்தக் காரிருளிலுங்கூட மேற்கூறிய மதில் வாசலின் பக்கம் அவருடைய கண்கள் கூர்மையாகப் பார்த்தன. அவருடைய செவிகளும் கதவு திறக்கப்படும் சத்தத்தை எதிர்நோக்கிக் கூர்மையாய்க் கேட்கலாயின.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
2.23. நள்ளிரவில் - Parthiban Kanavu - பார்த்திபன் கனவு - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பொன்னன், கொண்டு, இருவரும், சிவனடியார், பின்னால், அந்தக், சத்தம், இழுத்துக், மரத்தின், இன்னும், சிறிது, உருவம், மறுபடியும், வந்தது, கொஞ்சம், நதியின், காவேரி, மாரப்ப, என்றான், கும்பல், வேரில், படகிலிருந்து, தோட்டத்துக்குள், காணப்பட்டது, மதிற்சுவர், அந்தச், மிதந்து, படகுகள், தெரிந்தது, முன்னால், அவருடைய, தீவர்த்திகளுடன், அமர்ந்தார், நேரத்துக்கெல்லாம், கட்டியிருந்த, அர்த்த, சென்று, புகுந்து, அதுவும், கரையில், நெருங்கிப், அவர்கள், நமக்குத், ஒருவர், படகில், ஏறக்குறைய, குடிகொண்டது, கொண்டிருந்த, பார்த்தோமானால், தெரிந்த, என்பதைக், நள்ளிரவில், தொடர்ந்து, சமயத்தில், இறங்கு, கொண்டிருந்தது, தூரத்தில், காண்கிறோம், எடுத்து, நதிக்கரை, ஸ்ரீரங்கநாதரின்