இலக்கணச் சுருக்கம்

ண
கர னகர வீற்றுப் புணர்ச்சி
138. ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், அல் வழியில் அவ்விரு மெய்களும் இயலபாம். வேற்றுமையில் ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவுந் திரியும். அவ்விரு வழியிலும், வருந்தகரம் ணகரத்தின் முன் டகரமாகவும், னகரத்தின் முன் றகரமாகவும் திரியும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
மண்சிறிது மட்சாடி
மண்டீது மட்டூண்
பொன் குறிது பொற்கலம்
பொன்றீது பொற்றூண்
கட்பொறி, பொற்கோடு எனப் பண்புத் தொகையினும் பட்சொல், பொற்சுணங்கு என உவமைத் தொகையினுந் திரிதலும் உண்டு.
மண் சுமந்தான், பொன் கொடுத்தான், என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், விண் பறந்தது, கான் புகுந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்துத் திரியாதியல்பாம். மண்கூடை, புண்கை, என ஒரோவிடத்து இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையினுந் திரியாமை கொள்க.
----
139. ணகர, னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இறுதி ண னக்கள் இரு வழியினும் இயல்பாம். அவ்விரு வழியிலும், ணகரத்தின் முன் வரு நகரம் ணகரமாகவும்: னகரத்தின் முன் வரு நகரம் னகரமாகவுந் திரியும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
மண்ஞான்றது மண்ஞாற்சி
மண்ணீன்டது மண்ணீட்சி
மண்வலிது மண்வன்மை
பொன்ஞான்றது பொன்ஞாற்சி
பொன்னீண்டது பொன்னீட்சி
பொன்வலிது பொன்வன்மை
----
140. தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்கள், வரு நகரந் திரிந்த விடத்து, இரு வழியினுங் கெடும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
தூணன்று தூணன்மை
அரணன்று அரணன்மை
வானன்று வானன்மை
செம்பொனன்று செம்பொனன்மை
----
141. பாண், உமண், அமண், பரண், கவண், என்னும் பெயர்களின் இறுதி ணகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம்.
உதாரணம்.
பாண்குடி உமண்சேரி அமண்பாடி
பரண்கால் கவண்கால்
பாண் - பாடுதற்றொழிலுடையதொரு சாதி. உமண் - உப்பமைதற்றொழிலுடையதொரு சாதி. அமண் - அருகனை வழிபடுவதொரு கூட்டம்.
----
142. தன், என், என்னும் விகார மொழிகளின் இறுதி னகரம், வல்லினம் வரின், ஒருகாற் றிரிந்தும், ஒருகாற் றிரியாதும், நிற்கும். நின் என்னும் விகாரமொழியின் இறுதி னகரந் திரியாதியல்பாகும்.
உதாரணம்.
தன்பகை தற்பகை
என்பகை எற்பகை
நின்பகை
தற்கொண்டான், எற்சேர்ந்தான், நிற்புறங்காப்ப என இரண்டாம் வேற்றுமைத் தொகையிற் றிரிந்தே நிற்கும்.
---
143. குயின், ஊன், எயின், எகின், தேன், மீன், மான், மின் என்னுஞ் சொற்களின் இறுதி னகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம்.
உதாரணம்.
குயின்கடுமை - தேன்பெருமை
ஊன்சிறுமை - மீன்கண்
எயின்குடி - மான்செவி
எகின்சிறுமை - மின்கடுமை
குயின் - மேகம், எயின் - வேட்டுவச்சாதி, எகின் - அன்னப்புள்
தேன் என்பது, தேக்குடம், தேங்குடம் என, இறுதி னகரங்கெட, ஒருகால் வரும் வல்லெழுத்தும் ஒருகால் அதற்கின மெல்லெழுத்து வருமிடத்து ஈறு கெடுதலுமுண்டு.
- தேர்வு வினா
138. ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், இரு வழியும் எப்படிப் புணரும்?
அல்வழியில் எவ்விடத்துந் திரியாவோ? வேற்றுமையில் எவ்விடத்தும் இயல்பாகவோ?
ண ன வீறு இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையில் எவ்விடத்துந் திரிந்தே வருமோ?
139. ணகர னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இரு வழியிலும் எப்படி புணரும்?
140. தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்களின் முன் நகரம் வந்தால், ணகர னகரம் இயல்பாகவே நிற்குமோ?
141. எந்த மொழியினும் ணகரம் வேற்றுமையிற்றிரிந்தே வருமோ?
பாண் என்பதற்கு பொருள் என்னை? உமண் என்பதற்கு பொருள் என்னை?
அமண் என்பதற்கு பொருள் என்னை?
142. தன், என் என்பவற்றின் னகரம், வல்லினம் வரின் எப்படியாம்?
நின் என்பது இப்படி வராதோ?
இம் மூன்றிடத்து னகரமும், இரண்டாம் வேற்றுமைத் தொகையில் இவ்விதியே பெறுமோ?
143. எந்த மொழியினும் னகரம், வவேற்றுமையிற்றிரிந்தே வருமொ? தேன் என்பதன் னகரம்,இயல்பாதலன்றி, வேறு விதி பெறாதோஃ மெல்லெழுத்து வரின், விகாரமடைதல் இல்லையோ?
மகரவீற்றுப் புணர்ச்சி
144. மகரத்தின் முன் வல்லினம் வரின், வேற்றுமையினும். அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், இறுதி மகரங் கெட்டு, வரும் வல்லினமிகும். எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும், இறுதி மகரம் வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
உதாரணம்.
மரக்கோடு
நிலப்பரப்பு வேற்றுமை
வட்டக்கடல்
சதுரப்பலகை பண்புத்தொகை
கமலக்கண் உவமைத்தொகை
முரங்குறிது
யபங்கொடியேம் எழுவாய்
நிலந்தீ
பயங்காக உம்மைத்தொகை
செய்யுங்காரியம் பெயரெச்சம்
உண்ணுஞ்சோறு
தின்றனங்குறியேம் வினைமுற்று
சாத்தானுங்கொற்றனும்
பூதனுந் தேவனும் உம்மையிடைச் சொல்
மரம் பெரிது எனப் பகரம் வருமிடத்து இறுதி மகரம் இயல்பாம்.
தவஞ்செய்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், நிலங்கிடந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, இறுதி மகரங்கெடாது. வரும் வல்லெழுத்திற்கு இனமாகத்திரியும்.
----
145. தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம், இரு வழியினும், வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
கங்குறிது கங்குறுமை
அஞ்சிறிது அச்சிறுமை
செங்கோழி நங்கை
தஞ்செவி
எந்தலை
---
146. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
மரஞான்றது மரஞாற்சி
மரநீண்டது மரமாட்சி
---
147. தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின், அவ்வெழுத்தாகத் திரியும்.
உதாரணம்.
அஞ்ஞானம் நுஞ்ஞானம்
எந்நூல் தந்நூல் நந்நூல்
---
148. மகரத்தின் முன் உயிரும் இடையினமும் வரின், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும் இறுதி மகரங்கெடாது நிற்கும்.
உதாரணம்.
மரவடி
மரவேர் வேற்றுமை
வட்டவாழி
வட்டவடிவம் பண்புத்தொகை
பவளவிதழ்
பவளவாய் உவமைத்தொகை
மரமரிது
மரம்வலிது எழுவாய்
வலமிடம்
நிலம்வானம் உம்மைத்தொகை
உண்ணுமுணவு
ஆளும்வளவன் பெயரெச்சம்
உண்டனமடியேம்
உண்டனம்யாம் வினைமுற்று
அரசனுமமைச்சனும்
புலியும் யானையும் உம்மையிடைச்சொல்
செயமடைந்தான், மரம் வெட்டினான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மாயூரமேகினான். சிதம்பரம் வாழ்ந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழிவினையாய விடத்து, இறுதிமகரங்கெடாது நிற்கும்.
வினையாலணையும் பெயரின் ஈற்று மகரம், வேற்றுமையினும், உயிரும் இடையினமும் வரின் சிறியேமன்பு, சிறியேம் வாழ்வு எனக் கெடாது நிற்கும் வல்லினம் வரின், சிறியேங்கை என இனமெல்லெழுத்தாகத் திரியும்.
- தேர்வு வினாக்கள்
144. மகரத்தின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படி புணரும்?
இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றுமைத் தொகையினும் வருமொழி வினையாயவிடத்து எப்படிப் புணரும்?
145. தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம் இரு வழியினும் வல்லெழுத்து வரின் எப்படியாம்?
146. மகரத்தின் முன் இரு வழியினும் மெல்லினம் வரின் எப்படிப் புணரும்?
147. தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின் எப்படியாம்?
148. மகரத்தின் முன் இரு வழியினும் உயிரும்; இடையினமும் வரின் எப்படிப் புணரும்?
இரண்டாம் வேற்றுமைத் தொகையினும் எழாம் வேற்றுமை தொகையினும், வருமொழி வினையாயவிடத்து எப்படியாம்?
வினையாலனையும் பெயரின் ஈற்று மகரம் வேற்றுமையில் உருபும் இடையினமும் வாரிக்கொட்டே புணருமோ?
வல்லினம் வரின் எப்படியாம்?
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

