இலக்கணச் சுருக்கம்

125. நெடிற்றொடர், ஆய்தத்தொடர்,
உயிர்த்தொடர், இடைத்தொடர் என்னும் இந்நான்கு தொடர்க் குற்றியலுகர வீற்றுமொழிகளின்
முன் வரும் வல்லினம், இரு வழியினும் இயல்பாம்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
நாகு கடிது நாகு கால்
எஃகு கொடிது எஃகு கூர்மை
வரகு சிறிது வரகு சோறு
தௌ;கு பெரிது தௌ;கு பெருமை
---
126. டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் நாற்கணமும் வரின், உகரமேறிய டகர றகர மெய்கள் வேற்றுமையிற் பெரும்பாலும் இரட்டும்.
ஆட்டுக்கால்
ஆட்டுமயிர்
ஆட்டுவால்
ஆட்டதர் ஆற்றுக்கால்
ஆற்றுமணல்
ஆற்றுவழி
ஆற்றூறல் நெடிற்றொடர்
பகட்டுக்கால்
பகட்டுமார்பு
பகட்டு வால்
பகட்டடி வயிற்றுக்கொடல்
வயிற்றுமயிர்
வயிற்றுவலி
வயிற்றணி உயிர்த்தொடர்
காட்டரண், ஏற்றுப்பன்றி, வரட்டாடு, வெளிற்றுப்பனை எனச் சிறுபான்மை அல்வழியிலே பண்புத்தொகையில் இரட்டுதலும், வெருக்குக்கண், எருத்துமாடு எனச் சிறுபான்மை இரு வழியிலும் பிறவொற்றிரட்டுதலும் உளவெனக் கொள்க.
ஆடு கொண்டான், ஆறு கண்டான், பகடு தந்தான், பயறு தின்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், காடு போந்தன், ஆறு பாய்ந்தான், அகடு புக்கது, வயிறு புக்கது என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, இரட்டா வெனக் கொள்க.
127. மென்றொடர்க் குற்றியலுகர வீற்று மொழிகளுள்ளே சில, நற்கணமும் வரின், வேற்றுமையிலும், அல்வழியிலே பணபுத்தொகையிலும், உவமைத் தொகையிலும், வன்றொடர்க் குற்றியலுகரமாதலுமுண்டு.
உதாரணம்.
மருந்து + பை - மருந்துப்பை
கரும்பு + நாண் - கருப்புநாண்
கரும்பு + வில் - கருப்புவில் வேற்றுமை
கன்று + ஆ - கற்றா
அன்பு + தளை - அற்புத்தளை பண்புத்
என்பு + உடம்பு - எறபுடம்பு தொகை
குரங்கு + மனம் - குரக்குமனம் உவமைத்
இரும்பு + நெஞ்சம் - இருப்புநெஞ்சம் தொகை
---
128. சில மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகள் இறுதியில் ஐகாரச்சாரியை பெற்று வரும்.
உதாரணம்.
பண்டு + காலம் - பண்டைக்காலம்
இன்று + நாள் - இற்றைநாள் அல்வழி
அன்று + கூலி - அன்றைக்கூலி வேற்றுமை
இன்று + நலம் - இற்றை நலம்
சில மென்றொடர் மொழிகள், வருமொழி நோக்காது, ஒற்றை, இரட்டை எனத் தனிமொழியாக நின்றும், ஈராட்டை, மூவாட்டை எனத்தொடர் மொழியாக நின்றும், ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.
நேற்று + பொழுது - நேற்றைப்பொழுது. எ-ம்.
நேற்று + கூலி - நேற்றைக்கூலி. எ-ம். வன்றொடர் ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.
- தேர்வு வினா
122. வன்றொடர்க்குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படியாம்?
123. மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படியாம்?
இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம்வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து வல்லினம் எப்படியாம்?
124. ஏழாம் வேற்றுமையிடப் பொருள் உணர நின்ற அன்று முதலிய இடைச்சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
ஏழாம் வேற்றுமையிடப் பொருள் உணர நின்ற அங்கு முதலிய இடைச் சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
125. நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர், என்னும் இந்நான்கு தொடர்க்குற்றியலுகர வீற்று மொழிகளின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படியாம்?
126. டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் இரு வழியினும் நாற்கணமும் வரின் எப்படியாம்? அல்வழியில் எங்கும் இப்படி இரட்டுதலில்லையோ?
127. மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளுட் சில, இருவழியினும் நாற்கணமும் வரின், வன்றொடராகத் திரிதலும் உண்டோ?
128. மென்றொடர்க் குற்றியலுகரம் .ன்னும் எவ்வாறாகும்? வன்றொடர்க் குற்றியலுகரம் ஐகாரச்சாரியை பெறுதலில்லையோ?
குற்றியலுகரவீற்றுத் திசைப்பெயர்களோடு திசைப்பெயர்களும் பிற பெயர்களும் பிற பெயர்களும் புணர்தல்
129. வடக்க், குணக்கு, குடக்கு, என்னுஞ் செற்களின் ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றுங் கெடும்.
உதாரணம்.
வடக்கு + கிழக்கு - வடகிழக்கு
மேற்கு - வடமேற்கு
திசை - வடதிசை
மலை - வடமலை
வேங்கடம் - வடவேங்கடம்
குணக்கு + திசை - குணதிசை
கடல் - குணகடல்
குடக்கு + திசை - கடதிசை
நாடு - குடநாடு
கிழக்கு என்பது, ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றும் ழகரமெய்யின் மேனின்ற அகரவுயிருங்கெட்டு, முதனீண்டு வரும்: அங்கணம் வருமிடத்து, வல்லெழுத்து, இயல்பாகியும் ஓரோவிடத்து, வல்லெழுத்து, இயல்பாகியும், ஓரோவிடத்து மிகுந்தும் புணரும்.
உ-ம்
கிழக்கு + பால் - கீழ்பால்
திசை - கீழ்த்திசை
கீழைச்சேரி, கீழைவீதி, என ஐகாரம் பெறுதலுமுண்டு.
தெற்கு என்பது, ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் னகரமாகத்திரிந்து வரும்.
உதாரணம்.
தெற்கு + கிழக்கு - தென்கிழக்கு
மேற்கு - தென்மேற்கு
மலை - தென்மலை
மேற்கு என்பது ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் லகரமாகத் திரிந்து வரும். தகரம் வரிற் றிரியாது.
உதாரணம்.
மேற்கு + கடல் - மேல்கடல்
வீதி - மேல்வீதி
திசை - மேற்றிசை
மேலைச்சேரி, மேலைவீதி என ஐகாரம் பெறுதலுமுண்டு.
இத்திசைப் பெயர்கள், வடக்கூர், தெற்கூர், கிழக்கூர், மேற்கூர், வடக்குவாயில், தெற்கு மலை, கிழக்குத் திசை, மேற்கு மலை, என இங்ஙனங் காட்டிய விகாரமின்றியும் வரும்.
வடகிழக்கு என்பது, வடக்குங் கிழக்குமாயதொரு கோணம் என, உம்மைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. வடதிசை என்பது, வடக்காகிய திசை எனப் பண்புத்தொகை, வடமலை என்பது வடக்கின் கண் மலை என ஏழாம் வேற்றுமைத்தொகை.
- தேர்வு வினா
129. திசைப்பெயர் முதலிய பெயர்கள் வந்து புணரின், வடக்கு, குணக்கு, குடக்கு என்னுஞ் சொற்கள் எப்படியாம்?
கிழக்கு என்பது எப்படியாம்? தெற்கு என்பது எப்படியாம்?
மேற்கு என்பது எப்படியாம்?
இத்திசைப் பெயர்கள் இவ்விகாரமின்றியும் வருமோ?
வடகிழக்கென்பது என்ன தொகை?
வடதிசை என்பது என்ன தொகை? வட மலை என்பது என்ன தொகை?
உகரவீற்றெண்ணுப் பெயர்ப் புணர்ச்சி
130. ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத் திரியும். வந்தது மெய்யாயின் ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும்.
உதாரணம்.
ஒன்று + கோடி - ஒருகோடி
கழஞ்சு - ஒருகழஞ்சு
நாழி - ஒருநாழி
வாழை - ஒருவாழை
ஆயிரம் - ஓராயிரம்
இரண்டென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய்யும், ணகரவொற்றும், ரகரத்தின் மேனின்ற அகரவுயிருங் கெடும். வந்தது மெய்யாயின், ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும்.
உதாரணம்.
இரண்டு + கோடி - இருகோடி
கழஞ்சு - இருகழஞ்சு
யானை - இருயானை
வாழை - இருவாழை
ஆயிரம் - ஈராயிரம்
மூன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரமெய் வந்தது உயிராயிற்றானும் உடன் கெடும். மெய்யாயின் முதல் குறுகி, னகரமெய் வருமெய்யாகத் திரியும்.
உதாரணம்.
மூன்று + ஆயிரம் - மூவாயிரம்
கழஞ்சு - முக்கழஞ்சு
நாழி - முந்நாழி
நான்கென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரம், வந்தவை. உயிரும் இடையெழுத்துமாயின், லகரமாகத்திரியும்: வல்லெழுத்தாயின், றகரமாகத் திரியும்: மெல்லெழுத்தாயின் இயல்பாம்.
உதாரணம்.
நான்கு + ஆயிரம் - நாலாயிரம்
யானை - நால்யானை
கழஞ்சு - நாற்கழஞ்சு
மணி - நான்மணி
ஐந்தென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெகுடும். நின்ற நகர மெய் வந்தவை உயிராயிற் றானும் உடன் கெடும். வல்லெழுத்தாயின், இனமெல்லெழுத்தாகத் திரியும். மெல்லெழுத்தும் இடையெழுத்துமாயின் அவ் வந்த வெழத்தாகத் திரியும்.
உதாரணம்.
ஐந்து + ஆயிரம் - ஐயாயிரம்
கழஞ்சு - ஐங்கழஞ்சு
மூன்று - ஐம்மூன்று
வட்டி - ஐவ்வட்டி
நகரமுந் தகரமும் வரின், ஐந்நூறு, ஐந்தூணி, என ஈற்றுயிர் மெய் மாத்திரங் கெடும்.
ஆறென்னும் எண் உயிர் வரிற் பொதுவிதியான் முடியும்: மெய்வரின் முதல் குறுகும்.
உதாரணம்.
ஆறு + ஆயிரம் - ஆறாயிரம்
கழஞ்சு - அறுகழஞ்சு
மணி - அறுமணி
வழி - அறுவழி
ஏழு என்னும் எண்ணின் முன் உயிர் வரின், ஈற்றுகரங் கெடும்: மெய்வரின் முதல் குறுகும்.
உதாரணம்.
ஏழு + ஆயிரம் - ஏழாயிரம்
கழஞ்சு - எழுகழஞ்சு
மணி - எழுமணி
வகை - எழுவகை
ஏழ்கடல், ஏழ்பரி என வருதலுமுண்டு.
எடடென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும்: நின்ற டகரமெய் நாற்கணத்தின் முன்னும் ணகரமெய்யாகத்திரியும்.
உதாரணம்.
எடடு + ஆயிரம் - எண்ணாயிரம்
கழஞ்சு - எண்கழஞ்சு
மணி - எண்மணி
வளை - எண்வளை
இவ் விகாரங்களின்றிப் பொது விதி பற்றி, இரண்டு கழஞ்சு, மூன்று படி, நான்கு பொருள், ஐந்து முகம், ஆறு குணம், ஏழு கடல், எட்டுத் திக்கு எனவும் வருமெனக் கொள்க.
---
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

