இலக்கணச் சுருக்கம்

இ ஐ ர ழ வீற்றஃறிணைப் பெயர்முன் வல்லினம் புணர்தல்
117. இகர ஐகாரவுயிர்களையும் ய ர ழ வொற்றுக்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத்தொகையினும், உவமைத்தொகையினும், மிகும் எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும் மிகவாம்.
உதாரணம்.
கரிக்கோடு
நாய்க்கால் யானைச்செவி
தேர்த்தலை பூழ்ச்செவி வேற்றுமை
மாசித்திங்கள்
மெய்க்கீர்த்தி சாரைப்பாம்பு
கார்ப்பருவம் பூழ்ப்பறவை பண்புத்தொகை
காவிக்கண்
வேய்த்தோள் குவளைக்கண்
கார்க்குழ் காழ்ப்படிவம் உவமைத்தொகை
பருத்திகுறிது
நாய்தீது யானைகரிது
வேர்சிறிது யாழ்பெரிது எழுவாய்
பரணி-
கார்த்திகை
பேய்பூதம் யானைகுதிரை
நீர்கனல் இகழ்புகழ் உம்மைத்தொகை
இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, வல்லினம் மிகா.
உதாரணம்.
இரண்டாம் வேற்றுமை ஏழாம்வேற்றுமை
புளி தின்றான் அடவிபுக்கான்
குவளை கொய்தான் வரைபாய்ந்தான்
வேய் பிளந்தான் வாய்புகுந்தது
தேர் செய்தான் ஊர் சென்றான்
தமிழ் கற்றான் அகழ் குதித்தான்
காவித்தடம், மனைத்தூண் என உருபும் பயனும் உடன்றொக்க தொகையாயின், வல்லினம் மிகுமெனக் கொள்க. புளி தின்றான், அடவி, புக்கம் என்பன, குளியைத் தின்றான், அடவியின் கட்புக்கான் என விரிதலின், உருபு மாத்திரந்தொக்க தொகை. காவித்தடம், மனைத்தூண் என்பன, காவியையுடைய தடம், மனையின் கண்ணதாகிய தூண் என விரிதலின் உருபும் பயனும் உடன்றொக்க தொகை.
ஏரிகடை, குழவிகை, மலைகிழவோன். எனச் சிறுபான்மை அஃறிணைப் பெயரிடத்து வேற்றுமையில் வல்லினம் மிகாமை காண்க.
ஒரோவிடத்து, வேய்ங்குழல், ஆர்ங்கோடு என வேற்றுமையில் யகர ரகரங்களின் முன்னும், பாழ்ங்கிணறு எனப் பண்புத் தொகையில் ழகரத்தின் முன்னும், இனமெல்லெழுத்து மிகுமெனக் கொள்க.
பேய்கோட்பட்டான், பேய்க்கோட்பட்டான். எ-ம். சூர்கோட்பட்டான், சூர்க்கோட்பட்டான். எ-ம். ஒரோ வழிச் செயப்பாட்டுவினை முடிக்குஞ்சொல்லாக வருமிடத்து, யகர ரகரங்களின் முன் வரும் வல்லினம், ஒரு கால் இயல்பாயும், ஒரு காற்றிரிந்தும் வரும்.
- தேர்வு வினா
117. இகர ஐகாரவுயிர்களையும் ய ர ழ மெய்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம் எந்தெந்த விடங்களின் மிகும்: எந்தெந்தவிடங்களின் மிகா?
இரண்டாம் வேற்றுமைத் தொகையும், ஏழாம்வேற்றுமைத் தொகையும், உருபு மாத்திரந் தொக்க தொகையாயின், அவற்றின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
உருபும் பயனும் உடன்றொக்க தொகையாயின், அவற்றின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
இகர ஐகாரவீற்றஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், ஆறாம் வேற்றுமைத் தொகையில், மிகுதலன்றி வேறு விதி பெறாதோ?
ய ர ழ வீற்றின் முன் வரும் வல்லினம், வேற்றுமைத் தொகையிலும், பண்புத் தொகையிலும், ஒரோவிடத்து வேறு விதி பெறவோ? மூன்றாம் வேற்றுமைத் தொகையிலே முடிக்குஞ் சொற் செயற்பாட்டு வினையாகுமிடத்து, ய ர க்களின் முன் வரும் வல்லினம் எப்படிப் புணரும்?
சில மரப்பெயர்முன் வல்லினம் புணர்தல்
118. உயிhPற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், இன மெல்லெழுத்து மிகும்.
உதாரணம்.
மா + காய் - மாங்காய்
விள + காய் - விளாங்காய்
---
119. இகர, உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், அம்முச்சாரியை தோன்றும்.
உதாரணம்.
புளி + காய் - புளியங்காய்
புன்கு + காய் - புன்கங்காய்
ஆல் + காய் - ஆலங்காய்
---
120. ஐ காரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், நிலைமொழியீற்றை காரங் கெட்டு அம்முச்சாரியை தோன்றும்.
உதாரணம்.
எலுமிச்சை + காய் - எலுமிச்சங்காய்
மாதுளை + காய் - மாதுளங்காய்
- தேர்வு வினா
118. உயிரீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
119. இகர உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
120. ஐகாரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
சில வேற்றுமையுருபின் முன் வல்லினம் புணர்தல்
121. ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமையுருபு களின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகா.
உதாரணம்.
மகனொடு போனான் மகனோடு போனான்
தனது கை தனாது கை தன கைகள்
- தேர்வு வினா
121. ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும், அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்?
குற்றியலுகரவீறு
122. வன்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
கொக்குக்கடிது கொக்குச்சிறை
சுக்குத்திப்பிலி சுக்குக்கொடு
---
123. மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்: வேற்றுமையிலே மிகும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
குரங்கு கடிது குரங்குக்கால்
அம்பு தீது அம்புத்தலை
குரங்கு பிடித்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும், அரங்கு புக்கான் என ஏழாம் வேற்றுமைத் தொகையிலும், வருமொழி வினையாயவிடத்து, வல்லினம் மிகாவெனக் கொள்க.
---
124. ஏழாம் வேற்றுமையிடப்பொருள் உணர நின்ற அன்று, இன்று, என்று, பண்டு, முந்து, என்னும் இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் மிகா.
உதாரணம்.
அன்று கண்டான் பண்டு பெற்றான்
இங்குச்சென்றான் ஈங்குச்சென்றான்
உங்குத்தந்தான் ஊங்குத்தந்தான்
எங்குப்பெற்றான் யாங்குப்பெற்றான்
யாண்டுப் பெற்றான்
---
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

