மூதுரை - அவ்வையார் நூல்கள்
வாக்குண்டாம். பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாக்கள் உள்ளன.
கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. |
ஆடாத உடம்பும், பவளம் போன்று அழகிய செம்மேனியும் கொண்ட ஆனைமுகன் திருவடிகளில் பூக்கொண்டு சார்த்தி எப்போதும் சார்ந்திருப்பவர்க்கு வாயிலிருந்து நல்ல வாக்கு வரும். நல்ல மனம் உண்டாகும். மாமலராள் அருள்-பார்வை உண்டாகும். மலர் = தாமரை, வெண்டாமரை மேல் இருப்பவள் கலைமகள், செந்தாமரை மேல் இருப்பவள் கலைமகள, பொன்-தாமரை (பொற்றாமரை) மேல் இருப்பவள் மலைமகள், மூவரின் அருட்பார்வையையும் பெறலாம்.
நூல்
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி 'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத் தலையாலே தான் தருதலால். |
1 |
தென்னைமரம் தன் கால்களில் நீரை உண்டுவிட்டுத் தலையால் இளநீரைத் தரும். அதுபோல ஒருவர் செய்த உதவி நன்றியாகத் தானே வந்து சேறும். என்று தருவார் என்று காத்திருக்கக் கூடாது.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். |
2 |
நெஞ்சில் ஈரம் உள்ள நல்லவர்க்கு உதவி செய்தால் அது அவர்களின் நெஞ்சில் கல்லில் பொளித்து எழுதிய எழுத்துப் போல அழியாமல் நிலைத்திருக்கும். நெஞ்சில் ஈரமில்லாதவர்களுக்கு உதவினால் அவர்கள் அதனைத் தண்ணீரில் எழுதும் எழுத்து எழுதும்போதே மறைந்துவிடுவது போல அப்போதே மறந்துவிடுவார்கள்.
இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால் இன்னா அளவில் இனியவும்- இன்னாத நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே ஆள் இல்லா மங்கைக்கு அழகு. |
3 |
வறுமை வந்துவிட்டால் எதையும் செய்யும் இளமைப் பருவமே துன்பப்படும். அளவில்லாத இன்பம் தரும் பொருள்களும் துன்பம் தரும் பொருள்களாக மாறிவிடும். சூடும் நாள் இல்லாதபோது பூத்துக் கிடக்கும் மலரால் என்ன பயன்? அதுபோல அனுபவிக்கும் ஆண் இல்லாத பெண்ணின் அழகால் என்ன பயன்?
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். |
4 |
காய்ச்சினாலும் பால் சுவை குன்றாது. அதுபோல நல்ல நண்பர்கள் நட்பால் துன்பம் அடைந்தாலும் விலகமாட்டார்கள். நன்னட்பு இல்லாதவர் துன்பம் வரும் காலத்தில் மாறிவிடுவர். வெள்ளை நிறம் கொண்ட சங்கு சுட்டாலும் சுண்ணாம்பாக மாறி வீட்டில் அடிக்கும்போது வெள்ளை நிறத்தையே தரும். அதுபோல வறுமையுற்றுக் கெட்டுப்போனாலும் மேன்மக்கள் மேன்மக்களாகவே திகழ்வர்.
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா. |
5 |
எவ்வளவு பெரிய ஓங்கி உயர்ந்த மரமானாலும் அதன் பருவ காலத்தில்தான் பழுக்கும். அதுபோல அடுத்தடுத்து முயன்றாலும் செயல் நிறைவேற வேண்டிய காலம் வந்தால்தான் நாம் எடுத்துத் தொடுத்த (தொடங்கிய) செயல் நிறைவேறும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூதுரை - அவ்வையார் நூல்கள், அதுபோல, தரும், மேல், நாள், நல்ல, நூல்கள், நெஞ்சில், இருப்பவள், அவ்வையார், மூதுரை, துன்பம், பயன், இன்னா, வறுமை, என்ன, நண்பு, முயன்றாலும், தொடுத்த, செயல், | , வெள்ளை, சுட்டாலும், குன்றாது, மேன்மக்கள், சங்கு, பால், செய்த, உண்டாம், மாமலராள், பூக்கொண்டு, மனம், வாழ்த்து, இலக்கியங்கள், வாக்குண்டாம், கடவுள், கொண்ட, வரும், உதவி, வந்து, உபகாரம், ஒருவர்க்குச், நன்றி, உண்டாகும், தாமரை, எழுத்துப்