முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.083.திருநாகைக்காரோணம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.083.திருநாகைக்காரோணம்

5.083.திருநாகைக்காரோணம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்.
தேவியார் - நீலாயதாட்சியம்மை.
1890 | பாணத் தால்மதின் மூன்று மெரித்தவன் பூணத் தானர வாமை பொறுத்தவன் காணத் தானினி யான்கடல் நாகைக்கா ரோணத் தானென நம்வினை யோயுமே. |
5.083.1 |
ஓர் அம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவனும், தான் அணியாகப் பூணப் பாம்பையும் ஆமையையும் தாங்கியவனும், காண இனியவனும் ஆகிய கடல் நாகைக் காரோணத்தான் என நம்வினை ஓயும்!
1891 | வண்ட லம்பிய வார்சடை யீசனை விண்ட லம்பணிந் தேத்தும் விகிர்தனைக் கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக் கண்ட லும்வினை யான கழலுமே. |
5.083.2 |
வண்டுகள் ஒலிக்கும் நீண்ட சடையுடைய ஈசனும், விண்ணுலகம் பணிந்தேத்தும் மேலானவனும், தாழை கமழ்கின்ற நாகைக்காரோணனுமாகிய பெருமானைக் காணுதலும் வினைகள் நீங்கும்.
1892 | புனையும் மாமலர் கொண்டு புரிசடை நனையும் மாமலர் சூடிய நம்பனைக் கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை நினைய வேவினை யாயின நீங்குமே. |
5.083.3 |
மாமலர்களைக்கொண்டு புனையும் புரிசடை உடைய நம்பனும். கள்ளால் நனையும் மாமலரைச் சூடிய நம்பனும் ஆகிய ஒலிக்கும் நீண்ட கடல் நாகைக்காரோணனை நினைய வினைகள் நீங்கும்.
1893 | கொல்லை மால்விடை யேறிய கோவினை எல்லி மாநட மாடு மிறைவனைக் கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச் சொல்ல வேவினை யானவை சோருமே. |
5.083.4 |
முல்லைநிலத்து விடையேறிய அரசனும், இரவில் மகாதாண்டவம் புரியும் இறைவனும் ஆகிய, கற்களால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சொல்ல வினைகள் சோரும்.
1894 | மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக் கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை மைய னுக்கிய கண்டனை வானவர் ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே. |
5.083.5 |
உண்மையே உருவானவனும், விடையை ஊர்தியாகக்கொண்டவனும், வெண்மழுவைக் கையிற்கொண்டவனும், நாகைக்காரோணனும், ஆலகால நஞ்சினை வருத்திய திருக்கழுத்தினனும் ஆகிய தேவர் தலைவனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை.
1895 | அலங்கல் சேர்சடை யாதிபு ராணனை விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக் கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை வலங்கொள் வார்வினை யாயின மாயுமே. |
5.083.6 |
மாலைகள் சேர்ந்த சடையையுடைய ஆதி புராணனை, மலைமங்கையை ஒருபாகம் விரும்பிக் கொண்டவனை, கப்பல்கள் சேரும் கடல்நாகைக்காரோணனை வலம் கொண்டு வணங்குவார் வினைகள் மாயும்.
1896 | சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை இனங்கொள் வானவ ரேத்திய வீசனைக் கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை மனங்கொள் வார்வினை யாயின மாயுமே. |
5.083.7 |
சினங்கொண்ட பெரிய வேழத்தைச் சினந்து பொறாத ஏறுபோல்வானும், தொகுதி கொண்ட தேவர்கள் ஏத்தியஈசனும் ஆகிய பெருமைகொண்ட மாமதில் சூழ்ந்த நாகைக் காரோணனை உள்ளத்துக்கொள்ளுவார் வினைகள் மாயும்.
1897 | அந்த மில்புக ழாயிழை யார்பணிந் தெந்தை யீசனென் றேத்து மிறைவனைக் கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச் சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே. |
5.083.8 |
ஆயிழையார்கள் பணிந்து முடிவற்ற புகழைப் பாடி எந்தையே! "ஈசனே" என்று வாழ்த்தும் இறைவனாகிய மணம் வீசும் நெடிய பொழில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சிந்தித்தால் திண்மையாகத் துயரங்கள் கெடும்.
1898 | கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை இருவ ருக்கறி வொண்ணா இறைவனை ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த செருவ னைத்தொழத் தீவினை தீருமே. |
5.083.9 |
உலகிற்கெல்லாம் கருவாகியவனும். கடல்நாகைக் காரோணனும், பிரமன் திருமால் ஆகிய இருவருக்கறியவியலாத இறைவனும், ஒப்பற்றவனும் ஆகிய உணராத அசுரரது முப்புரங்களை எய்த போரை உடைய பெருமானைத் தொழத் தீவினைகள் தீரும்.
1899 | கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன் வடவ ரையெடுத் தார்த்த அரக்கனை அடர வூன்றிய பாத மணைதரத் தொடர அஞ்சுந் துயக்கறுங் காலனே. |
5.083.10 |
கடல் உப்பங்கழிகள் பொருந்திய நாகைக் காரோணன் தன் திருக்கயிலையை எடுத்து ஆர்த்த இராவணனை அடரத் திருவிரலால் ஊன்றிய பாதம் அணைந்தால் துயக்கற்ற காலன் தொடர அஞ்சுவான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 81 | 82 | 83 | 84 | 85 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநாகைக்காரோணம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நாகைக்கா, வினைகள், நாகைக், சூழ்ந்த, இறைவனும், நாகைக்காரோணனைச், மிறைவனைக், ரோணனைச், நம்பனும், னைக்கடல், மாமதில், மாயும், மாயுமே, வார்வினை, வேவினை, புரிசடை, நம்வினை, மூன்று, திருச்சிற்றம்பலம், திருமுறை, ஒலிக்கும், நீங்கும், திருநாகைக்காரோணம், கொண்டு, மாமலர், புனையும், நனையும்