முதன்மை பக்கம் » இலக்கியங்கள் »  சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.095.திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள் 
 
	
				
			முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.095.திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள்

   1.095.திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள் 
        
பண் - குறிஞ்சி
		
திருச்சிற்றம்பலம்
   
		பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
| 1025 | தோடொர் காதினன், பாடு மறையினன் காடு பேணிநின், றாடு மருதனே. | 1.095.1 | 
திருவிடைமருதூர் இறைவன் தோட்டை, இடத் திருச்செவியில் அணிந்தவனாய் நான்கு வேதங்களைப் பாடுபவனாய், சுடுகாட்டை விரும்பி அதன்கண் நின்று ஆடுகின்றவனாவான்.
| 1026 | கருதார் புரமெய்வர், எருதே யினிதூர்வர் மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே. | 1.095.2 | 
தம்மைக் கருதாதவராகிய அசுரர்களின் முப்புரங்களை எய்து அழித்தவரும், எருதை வாகனமாகக் கொண்டு இனிதாக ஊர்பவரும் ஆகிய இறைவர்க்குத் திருவிடை மருதூரே விரும்பி உறையும் இடமாகும். அவரைத் தொழுதால் புகழ் சேரும். வினைகள் தீர்தலை உடையனவாகும்.
| 1027 | எண்ணு மடியார்கள், அண்ணன் மருதரைப் பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே. | 1.095.3 | 
மனத்தால் எண்ணி வழிபடும் அன்பர்கள் தலைமையாளராய் விளங்கும் மருதவாணரைப் பண்ணிசையோடு அவர்தம் புகழைப் போற்ற, விண்ணுலகமும் அவர்கள் வசமாகும்.
| 1028 | விரியார் சடைமேனி, எரியார் மருதரைத் தரியா தேத்துவார், பெரியா ருலகிலே. | 1.095.4 | 
விரிந்த சடைமுடியை உடையவரும், எரிபோன்ற சிவந்த மேனியருமாகிய மருதவாணரைத் தாமதியாது துதிப்பவர் உலகில் பெரியவர் எனப் போற்றப்படுவர்.
| 1029 | பந்த விடையேறும், எந்தை மருதரைச் சிந்தை செய்பவர், புந்தி நல்லரே. | 1.095.5 | 
கட்டுத்தறியில் கட்டத்தக்க விடையை ஊர்ந்து வரும் எந்தையாராகிய மருதவாணரை மனத்தால் தியானிப்பவர்கள் அறிவால் மேம்பட்டவராவர்.
| 1030 | கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார்
    மருதரைத் தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே. | 1.095.6 | 
ஒரு காலில் கழலும், பிறிதொரு காலில் சிலம்பும் ஒலிக்கும் உமைபாகராகிய அழகிய மருதவாணரை விரும்பித் தொழுவதை நியமமாகக் கொண்டவர்க்கு வருத்துதற்கு உரிய வினைகள் துன்புறுத்தா; அகலும்.
| 1031 | பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை நிறையால் நினைபவர், குறையா ரின்பமே. | 1.095.7 | 
பிறை பொருந்திய சடைமுடியினை உடைய தலைமையாளரான வேதங்களை அருளிய மருதவாணரை நிறைந்த மனத்தால் நினைப்பவர் இன்பம் குறையப் பெறார்.
| 1032 | எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார்
    மருதரைத் தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே. | 1.095.8 | 
கயிலை மலையை எடுத்த இராவணனின் தோள்களை நெரித்த மருதவாணருக்குச் சூட்டுவதற்கு மலர் தொடுத்தவர்கள், பிறவிக்குக் காரணமான ஆசையை விடுத்தவர்களாவர்.
| 1033 | இருவர்க் கெரியாய, உருவ மருதரைப் பரவி யேத்துவார், மருவி வாழ்வரே. | 1.095.9 | 
திருமால் பிரமர் அடிமுடி அறிய முடியாதவாறு எரி உருவமாய் நின்ற மருதவாணரைப் புகழ்ந்து ஏத்தித் துதிப்பவர் எல்லா நலன்களோடும் மருவி வாழும் வாழ்க்கையைப் பெறுவர்.
| 1034 | நின்றுண் சமண்தேரர், என்று மருதரை அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே. | 1.095.10 | 
நின்றுண்ணும் சமணரும், புத்தரும் எக்காலத்தும் இடைமருது இறைவனாகிய சிவபெருமானை மாறுபட்ட உரைகளால் கூறுவதால் அவர் எக்காலத்தும் நல்லனவே கூறார்.
| 1035 | கருது சம்பந்தன், மருத ரடிபாடிப் பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே. | 1.095.11 | 
இறைவன் திருவருளையே கருதும் ஞானசம்பந்தன் மருதவாணரின் திருவடிகளைப் பெரிதும் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதுபவர்க்குத் துன்புறுத்திய வினைகள் போகும்.
திருச்சிற்றம்பலம் 
	| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 93 | 94 | 95 | 96 | 97 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› | 
	தேடல் தொடர்பான தகவல்கள்:
	
						திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவிடைமருதூர், மருதரைத், மருதவாணரை, வினைகள், மனத்தால், வினைபோமே, திருவிருக்குக்குறள், காலில், மருதரை, எக்காலத்தும், துதிப்பவர், திருமுறை, இறைவன், மருதரைப், திருச்சிற்றம்பலம், மருதவாணரைப், விரும்பி
 கலைக் களஞ்சியம்
 கலைக் களஞ்சியம்

 
				
